|
ஒரு துறவியிடம் சிலர், ‛‛நாங்கள் யாத்திரை சென்று நதிகளில் நீராடி புண்ணியம் சேர்க்க செல்கிறோம்.! நீங்களும் எங்களுடன் வந்தால் நன்றாக இருக்கும்’’ என அழைத்தனர். ‘‘இப்போது வருவதற்கு வாய்ப்பு இல்லையே’’ என்று சொல்லிய துறவி பாகற்காயைக் கொடுத்து, ‘‘நீங்கள் புனித நதிகளில் முழுகும் போதெல்லாம் இதையும் நீராட்டி எடுத்து வாருங்கள்’’ என்றார். அவர்களும் அப்படியே செய்தனர். யாத்திரை முடித்து வந்ததும், அந்த பாகற்காயை நறுக்கிய துறவி ஆளுக்கு ஒரு துண்டு சாப்பிடக் கொடுத்தார். ‘‘புனித நதிகளில் நீராடிய பாகற்காய் என்பதால் இப்போது இனிப்பாக இருக்கிறதா?’’ என்று கேட்டு சிரித்தார். காயை கடித்த வேகத்தில் அவர்கள் துப்பினர். பாகற்காயின் கசப்பு மாறவில்லை. ‘‘பார்த்தீர்களா? புனித நதிகளில் நீராடினாலும் இதன் குணம் மாறவில்லை. நம் மனதில் மாற்றம் ஏற்படாமல் எத்தனை யாத்திரை சென்றாலும் பலன் கிடைக்காது. மாற்றம் வந்து விட்டால் நீங்கள் எங்கிருந்தாலும் அந்த இடமே புனிதமாகி விடும்’’ என்றார்.
|
|
|
|