பண்ணையார் வீட்டில் கூலி வேலை செய்தான் கோவிந்தன். அவனுக்கு திருப்பதி ஏழுமலையான் தான் இஷ்ட தெய்வம். புரட்டாசி விரதமிருக்க அவன் தவறியதில்லை.
பண்ணையார் அடிக்கடி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் செல்வார். வந்ததும் கோவிந்தனிடம் லட்டு பொட்டலத்தை கொடுப்பார். அதில் சில நாமக்கட்டிகள் இருக்கும். அதை பத்திரப்படுத்தி தினமும் நாமம் இட்டுக் கொள்வான்.
ஒருநாள் சனிக்கிழமை இரவு படுத்திருந்த போது, ‘‘ஏழுமலையானே! பண்ணையார் எல்லாம் வருஷா வருஷம் உன்னை தரிசிக்க தவற மாட்டேங்கிறாரு. அது அவர் செய்த புண்ணியம். என்னைப் போல கூலி ஜனங்க என்னைக்கு ஏழுமலையை தரிசிக்கப் போறோமே தெரியலையே! வெங்கடேசா! என் வாழ்நாளுக்குள் ஒருமுறை உன்னை தரிசிக்கிற பாக்கியம் வேணும்! நடந்தே வரக் கூட நான் தயாராக இருக்கேன். ஆனால் பண்ணையார் கொடுக்கிற கூலி போய்விட்டால் என் குடும்பம் பசியில் வாடுமே! அவர் அனுமதிச்சா தானே என்னால வர முடியும்? எனக்கு நீ தான் வழி காட்டணும்’’ என வேண்டினான்.
புரட்டாசி மாதம் பிறந்தது. விரதமிருக்க ஆரம்பித்த கோவிந்தன் மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்றான். அங்கு உபன்யாசம் நடந்தது. தரையில் துண்டை விரித்து அமர்ந்தான். பெருமாள் கதை என்றால் ஆசையுடன் கேட்பது கோவிந்தன் வழக்கம்.
‘‘திருப்பதி மலையடிவாரத்தில் வசித்த எறும்புக்கு ஏழுமலையானைத் தரிசிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் ஏழுமலைகளைக் கடந்து செல்வது அவ்வளவு எளிதான விஷயமா! ரொம்ப வருத்தப்பட்டது. ஒருநாள் சிங்கம் ஒன்றை எறும்பு பார்க்க நேர்ந்தது. அப்போது சிங்கம் தன் சகாவிடம் ஏழுமலைகளைத் தாண்டி அதன் உச்சிக்கு தான் செல்லப் போவது பற்றி சொல்லிக் கொண்டிருந்தது. எறும்புக்கு புத்தி வேகமாக வேலை செய்தது. உடனே சிங்கத்தின் பிடரியின் மீது ஏறிக் கொண்டது எறும்பு. அசுர வேகத்தில் சிங்கம் மலையேறத் தொடங்கியது. ஏழுமலையையும் கடந்ததும் எறும்பு கீழே இறங்கியது. பிறகென்ன! மெதுவாக ஊர்ந்து கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசித்தது. இந்த எறும்பு போல யார் வேண்டினாலும் தரிசிக்கும் பாக்கியத்தை ஏழுமலையான் கொடுப்பான்’’ என்றார் உபன்யாசகர்.
இதைக் கேட்ட கோவிந்தன் மகிழ்ந்தான். தனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என வேண்டியபடி புறப்பட்டான். அடுத்த வாரமே கோவிந்தனை அழைத்தார் பண்ணையார்.
‘‘கோவிந்தா! வீட்டுக்குப் போய் வேட்டி சட்டை எடுத்துட்டு வாடா. பெட்டி, படுக்கையை துாக்க வர்ற சீனிவாசன் அவசரமா ஊருக்குப் போயிட்டானாம். நீ தான் என் கூட உதவிக்கு வரணும்! புரட்டாசி சனியன்று நாம திருப்பதியில இருக்கணும்,’’ என்றார். பண்ணையாரின் பேச்சு கோவிந்தனின் காதில் தேனாகப் பாய்ந்தது.