|
வீடுகளில் மாதம் தோறும் பட்டியல் தயார் செய்வோம். அரிசி 10 கிலோ, துவரம் பருப்பு 5 கிலோ, சர்க்கரை 4 கிலோ, மிளகாய் வற்றல் 1 கிலோ இது அது என அவரவர் தேவைக்கான மாதாந்திர மளிகைப் பட்டியல். இதே மாதிரி சுவாமியை பார்க்க நினைக்கும் போதும், கோயிலுக்குப் போகும் போதும் ஒரு கவலைப் பட்டியல் தயாரிக்கிறோம். பெரும்பாலும் சந்தோஷப் பொழுதுகளில் கோயிலுக்குப் போவது கிடையாது. சுவாமியை நினைப்பதும் கிடையாது. அந்தப் பொழுதுகளில் யோசிப்பதெல்லாம் என்ன? இந்தச் சாதனையைக் கொண்டாட வேண்டும். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும். அதற்குக் குடும்பத்தினர் வேண்டும். நண்பர்கள் வேண்டும். அவர்களை அழைத்துக் கொண்டு திரைப்படம் பார்க்கச் செல்வோம். உணவகம் செல்வோம். கேளிக்கைக்காக பூங்கா, கடற்கரைக்கு செல்வோம். ஆனால் கடுகளவு துன்பம் வந்தால் போதும். விழுந்தடித்துக் கொண்டு கோயிலுக்குச் செல்வோம். முட்டி மோதி சுவாமியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கி நிற்போம். ‘‘எனக்கு ஏன் இந்த கஷ்டம்?’’ என அரற்றுவோம். ‘‘இந்தக் கஷ்டத்தை, இந்தச் சங்கடத்தைச் சரிசெய்து கொடு. உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன். 108 கொழுக்கட்டை படைக்கிறேன்...’’ என வேண்டுதல் செய்வோம். எல்லாம் சரிதான். வெற்றிகளைச் செய்தது நாம் என தம்பட்டம் அடிக்கிறோம். தோல்விகளைத் தருவது கடவுள் என குற்றப்பத்திரிகை வாசிப்பது மனித இயல்பு. சந்தோஷப் பொழுதுகளில் NO GOD. கண்ணீர்ப் பொழுதுகளில் KNOW GOD. இதுதான் நம் மனஓட்டம். ‘துன்பம் வரும் வேளைகளில் சிரிங்க என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க...’ என்ற பாடலை மறந்து விட்டு, சிரிப்பதை மறந்து விட்டு, கவலை மூட்டை சுமப்பதே வாழ்க்கை என வாழ்கிறோம். ‘‘பொண்ணுக்குக் கல்யாணம் ஆகணும்..’’ ‘‘மருமகளுக்கு குழந்தை பிறக்கணும்...’’ ‘‘வீடு வாங்கணும்...’’ ‘‘கார் வாங்கணும்..’’ ‘‘வேலை கிடைக்கணும்.’’ ‘‘வெளிநாடு போகணும்’’ ‘‘புருஷன் என்கிட்ட அன்பா இருக்கணும்’’ ‘‘ நல்ல காலேஜுல கிடைக்கணும்’’ இன்னும் எத்தனையோ கவலைகளை கடவுளிடம் சமர்ப்பிக்கிறோம். அதற்காக ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று காணிக்கை முடிந்து வைத்து பிரார்த்தனை செய்கிறோம். எல்லாம் சரிதான். எப்படி இந்தச் சக்கரச் சுழற்சியிலேயே உழலாமல் – மனசை மீட்டெடுப்பது... கவலைப் பள்ளத்தாக்கிலிருந்து எப்படி மேலேறி வருவது...கடலளவு கவலையில் மூழ்கிப் போகாமல் மூச்சடக்கி முத்தெடுப்பது? இப்படியான மனநிலையையும், மனநிறைவையும் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உண்டு. ஐந்து நுாற்றாண்டுக்கு முன்பு நிர்மாணம் செய்யப்பட்டது இத்தலம். ஊர் முழுக்க போன நுாற்றாண்டின் வாசனை வீசியது. தொன்மை தெரிந்தது. வீசிய காற்றிலும், குளங்களில் வீசியடித்த அலைகளிலும், வானம் தொடும் அளவுக்கு வளர்ந்து பரந்த அரச மரங்களிலும் வீடுகளின் அமைப்பிலும் கூடப் பண்டைய தமிழர்களின் சாயல் அப்பியிருந்தது. கோயிலுக்குள் சென்று சுவாமி, அம்மனை தரிசிக்கும் முன், ‘‘கடவுளே.. முன்னேற்றம் என்ற பெயரிலும் நாகரிகம் என்ற பெயரிலும் இந்த ஊரின் பாரம்பரிய அழகை யாரும் கெடுத்து விடக்கூடாது. இந்த ஊரின் தமிழ்ப் பண்பாட்டை யாரும் மாற்றி விடக்கூடாது... இந்த ஊரின் குளங்களையும், ஆறுகளையும் யாரும் உறிஞ்சி விடக்கூடாது. சாலையை அடைத்து நிற்கும் மரங்களை யாரும் கண்டதுண்டமாக வெட்டி விடக்கூடாது...’’ என மனதிற்குள் வேண்டிக் கொண்டேன். இந்த ஊர் திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் பகுதியிலுள்ள கடையம். இந்தப் பசுமை ஊரின் அடையாளமானது வில்வவனநாத சுவாமி – நித்ய கல்யாணி திருக்கோயில். அதைப் போலவே மகாகவி பாரதிக்கு அடைக்கலம் கொடுத்ததும் இந்த ஊர்தான். எனவே தமிழின் இனிப்பும், பாரதியின் நெருப்பும் கொண்ட கலவையாகத்தான் கடையம் தெரிகிறது. கடையத்தின் காற்று தெரிகிறது. கடையத்தின் மண் தெரிகிறது. மண்ணில் தெரியும் வானம் அது நம் வசப்படலாகாதா? மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் இப்படியெல்லாம் மகாகவி பாடியதற்கு இந்த ஊரும் அது கொடுத்த ஆசுவாசமும் காரணமாக இருந்திருக்கக் கூடும். அன்னை பராசக்தி ஆசியினால் நாம் இருப்போம்! இன்னும் குறையென்ன இன்பமுறு நன்னெஞ்சே! என் மகாகவியின் கவிதை மனதிற்குள் ஒலித்தது. ஒரு காலத்தில் வில்வ வனமாக இருந்த வில்வ வனத்து சுவாமியின் திருக்கோயில். வழக்கமான பரபரப்பும், சலசலப்பும், மக்கள் அலைக்கழிப்பும், பசுமாடுகளும், கன்றுகளும் கோயிலுக்கு வெளியே.... அங்கிருந்த ஒரு மூதாட்டியிடம் கேட்ட போது, ‘‘என்னோட பாட்டி சொன்னா... ஒரு காலத்துல் பாரதியார் இங்கு தான் வருவாராம். இந்த வாசல்ல தான் உக்காந்து பாட்டு கட்டுவாராம். அந்த காணி நிலம் வேண்டும் பாட்டு இங்கு கட்டினதுன்னு தானாம்’’ புல்லரித்தது எனக்கு... வில்வ வனநாத சுவாமி காணி நிலத்தில் இருப்பதால் பாரதியாரும் தமிழ்க்கோயில் கட்டக் காணி நிலம் கேட்டிருப்பார். காணிநிலம் தாண்டி கடையம் என்றதும் வில்வ வனநாத சுவாமி கோயிலும், பாரதியாரும் நினைவில் நிறையும் நிலை வந்து விட்டது கடவுளின் அருள் தானே? கோயிலின் வாசலில் காற்றை நிறைக்கும் பசுஞ்சாண வாசனை. அதையும் தாண்டி கோயிலுக்குள் நுழைந்தால் ஐந்து நுாற்றாண்டுக்கு முந்தைய காற்று வாசனை வரவேற்கிறது. கலைநயம் மிக்க பிரமாண்டமான துாண்கள், விதானம், விஸ்தீர்ணமான பிரகாரம், பசுமஞ்சள் அரைக்க கருங்கல்லால் ஆன அரவைக்கல், மஞ்சள் வாசனை சொர்க்கம் இதுதான் என்று சொல்லாமல் சொல்கிறது. பக்தர்கள் அம்மையப்பனை வேண்டி நிறைவு பெற்ற பொலிவோடு மறுபடியும் வருகிறார்கள். எத்தனையோ ஜென்மங்களுக்கு முன் அம்மையின் முன்னால் நின்ற ஞாபக அடுக்குகளோடு கைகூப்பினால், பச்சைப் பட்டு உடுத்தி நித்ய கல்யாணி புன்முறுவலோடு இருந்தாள். ‘‘தெரியும் நீ வருவேன்னு...’’ ‘‘உன்னைத் தாண்டி வேறெங்கே போக முடியும்’’ ‘‘பட்டியல் கொண்டு வரல்லியா?’’ ‘‘கொண்டு வராமலா? பட்டியல் இருக்கு... அதிலே என்ன இருக்கு... அதுவும் உனக்குத் தெரியும். எழுதினதும் நீ தான். எழுத வச்சதும் நீ தானேம்மா...’’ கைகூப்பி வணங்கினேன். கண்ணில் கண்ணீர் வழிந்தது. நம் அஞ்ஞானம் கண்டு அவள் நகைக்கும் புதிரான புன்சிரிப்பு. ‘‘வழக்கம் போலத் தானே பட்டியல்?’’ ‘‘இல்லை தாயே... கனிவு நுாறு கிலோ... பொறுமை நுாறு கிலோ... பணிவு நுாறு கிலோ... அன்பு நுாறு கிலோ... மவுனம் நுாறு கிலோ... மன்னிப்பு நுாறு கிலோ... இதெல்லாம் வேண்டும் தாயே! ‘‘ஏன் இந்த மனமாற்றம்?’’ ‘‘காணி நிலம் கேட்ட பாரதியாருக்குத் தமிழ் மொழியை, தமிழனை, தமிழ் இலக்கியப் பரப்பை, தமிழின் உன்னதத்தை, தமிழின் உயிர்ப்பையே அள்ளிக் கொடுத்து விட்டாய். ஆயிரமாயிரம் மடங்கு அள்ளிக் கொடுக்கும் தாயான உனக்கு பொன்னும், பொருளும், பதவியும் ஒரு பொருட்டே இல்லை தாயே... அதனால் குறையேதும் இல்லை அம்மையே’’ இப்படி சொன்னதும், சொல்ல வைத்ததும் நித்ய கல்யாணி அம்மை... அலை பாயும் மனசு நிம்மதி பெறவும், கண்ணீர் தேயவும் நாம் சிக்கெனப் பிடிக்க வேண்டியவள் கடையம் நித்ய கல்யாணித்தாயே... |
|
|
|