|
சிறுவயதிலேயே தந்தையை இழந்த இளைஞன் சத்தியசீலன். தாய் படும் துன்பம் கண்டு வருந்திய அவன் வேலை தேடி நகரத்திற்கு புறப்பட்டான். அவனது தாய் தன்னிடம் இருந்த ஐந்து பவுன் நகையைக் கொடுத்து, ‘‘ இதை விற்று தேவைக்கு வைத்துக் கொள். உன் பெயருக்கு ஏற்ப எந்த நிலையிலும் பொய் பேசாதே!’’ என அனுப்பினாள். வழியில் திருடன் ஒருவன் வழிமறித்து,‘‘என்ன கொண்டு செல்கிறாய்?’’ எனக் கேட்டான். பிழைப்பு தேடிச் செல்வதாகவும், கையில் நகை இருப்பதாகவும் தெரிவித்தான். திருடனுக்கு சிரிப்பு வந்தது. ‘‘பொய் சொல்கிறாயா...காட்டுப்பாதையில் வரும் உன்னை நம்பி நகையை கொடுப்பார்களா’’ என கேலி செய்து, அவனது தலையில் குட்டி விட்டுச் சென்றான். சத்தியசீலன் பயணத்தை தொடர்ந்தான். வழியில் மீண்டும் ஒரு திருடன் எதிர்ப்பட்டு, ‘‘ என்னடா மறைத்து வைத்திருக்கிறாய்?’’ என அதட்டினான். ‘‘ஐந்து பவுன் வைத்திருக்கிறேன்’’ என்றான் சத்தியசீலன். அவனோ சிரித்து விட்டு, ‘‘போக்கிரி பயலே! என்னை ஏமாற்றுகிறாயா? உன் மூஞ்சியை பார்த்தா நகை வைத்திருப்பவன் மாதிரியா இருக்கு? திரும்பி பார்க்காமல் ஓடு’’ என விரட்டினான். அன்றிரவு ஒரு திண்ணையில் ஓய்வெடுக்க அமர்ந்தான். அதிலிருந்து சில கொள்ளையர்கள் வெளியே வந்தனர். வேவு பார்க்க வந்த ஒற்றனாக கருதிய அவர்கள், தங்களின் தலைவனிடம் இழுத்துச் சென்றனர். வேலை தேடிச் செல்வதாகவும், செலவுக்காக அம்மா கொடுத்த நகை இருப்பதாகவும் தெரிவித்தான். கொள்ளையர் தலைவன் நம்பவில்லை. ‘‘அப்படியா... நகையைக் காட்டு பார்க்கலாம்’’ எனக் கேட்க சத்தியசீலனும் காட்டினான். ‘‘ஏதும் இல்லை என மறுத்தாலும் உன்னை தப்பிக்க விட்டிருப்பேனே! நகையை பறித்துக் கொண்டால் என்ன செய்வாய்? ஒன்றும் அறியாத அப்பாவியாக இருக்கிறாயே?’’ என இரக்கப்பட்டான். எந்த சூழலிலும் பொய் சொல்லக் கூடாது என்னும் தாயாரின் அறிவுரையை விளக்கினான். உண்மை மீது கொண்டிருந்த நம்பிக்கையை அறிந்த தலைவன் வெட்கப்பட்டான். கேவலமான திருட்டைச் செய்ததை எண்ணி வருந்தினான். ‘‘தம்பி! உனக்கிருக்கும் நல்ல புத்தியில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட எனக்கு இல்லையே! இவ்வளவு காலம் பாவியாக இருந்து விட்டேனே! இனி பொய் பேசவோ, திருடவோ மாட்டேன். எனக்கு நல்வழி காட்டிய ஒளி விளக்கு நீயே’’ என தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஒப்படைத்து தர்மம் செய்யும்படி கூறினான். அதை தாயிடம் ஒப்படைத்த சத்தியசீலன், தர்மவழியில் செலவழித்தான். ............. |
|
|
|