|
மரம் ஒன்றில் பழங்கள் நிறைய இருந்ததால் பறவைகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தன. ஆரம்பம் என்றால் முடிவும் இருக்கத் தானே செய்யும். மழை பொய்த்ததால் இலைகள் உதிர்ந்து மரம் பட்டுப்போக ஆரம்பித்தது. பறவைகள் ஒவ்வொன்றாக வேறு இடம் தேடிச் சென்றன. ஆனால் அதில் வாழ்ந்த கிளி ஒன்று எங்கும் செல்லவில்லை. சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு அங்கேயே வசித்தது. இதையறிந்த தேவர்களின் தலைவன் இந்திரன் கிளியைக் காண வந்தான். பச்சை மரங்கள் பல இருக்க பட்ட மரத்தில் தங்கியிருக்கிறாயே ஏன் எனக் கேட்டான். ‘‘தேவர்களின் தலைவருக்கு வணக்கம்! என் மூதாதையர் காலம் காலமாக இந்த மரத்தில் தான் வசித்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மரமே உணவும், அடைக்கலமும் அளித்தது. எங்களை ஆளாக்கிய இந்த மரத்திற்கு துன்பம் வந்ததும், , அதை விட்டு விலகினால் நான் நன்றி மறந்த பாவத்திற்கு ஆளாவேன்’’ என்று சொல்லி அழுதது. அதன் நன்றியுணர்வைக் கண்ட இந்திரன், ‘‘ நல்ல மனம் கொண்ட உனக்கு வரம் தர விரும்புகிறேன்’’ என்றார். ‘‘இந்த மரம் மீண்டும் செழிப்புடன் வளர வேண்டும். முன்பை விட அதிக கனிகளை வழங்க வேண்டும். அதில் பலரும் பசியாற வேண்டும்’’ எனக் கேட்டது. இந்திரனும் சம்மதிக்க மரம் துளிர் விடத் தொடங்கியது.
|
|
|
|