|
காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த மன்னரின் மகளுக்கு பேய் பிடித்திருந்தது. ராஜகுமாரியைக் குணப்படுத்த மந்திரவாதிகள் பலர் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. கடைசியாக யாதவப்பிரகாசர் என்னும் குருநாதரின் உதவியை நாடினார் மன்னர். குருநாதருடன் சீடரான ராமானுஜரும் அங்கு வந்தார். ராஜகுமாரியின் முன்னர் அமர்ந்து மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார் யாதவப் பிரகாசர். அப்போது பேய், ‘‘எத்தனை மந்திரம் சொன்னாலும் ராஜகுமாரியை விட்டு விலக மாட்டேன். அது மட்டுமல்ல. இங்கிருந்து உன்னை விரட்டவும் என்னால் முடியும். நான் ஒரு பிரம்மராட்சதன், என்னைச் சீண்ட நினைக்காதே’’ என்றது. யாதவப்பிரகாசர் நடுங்கிப்போனார். அப்போது ராஜகுமாரியின் அருகே சென்ற ராமானுஜர், . ‘‘அப்பாவியான இந்த பெண்ணின் உடலில் இருந்து ஏன் இப்படி வருத்துகிறீர்கள்?’’ என பிரம்மராட்சதனைக் கேட்டார். அப்போது அவன் அழுதபடியே, ‘‘ஐயா...பண்பிலும், கல்வியிலும் உயர்ந்தவர் தாங்கள் என்பதால் இப்போது ஒரு உண்மையைச் சொல்கிறேன். சகல கலைகளையும் கற்ற இறுமாப்புடன் கொண்ட வாழ்ந்த நான் கற்ற விஷயத்தை யாருக்கும் சொல்லித் தராமல் இருந்தேன். இதனால் ராட்சதப் பிறப்பெடுத்து இவளின் உடம்பில் புகுந்து கொண்டேன். இவளின் தலை மீது தாங்கள் கை வைத்தால் போதும்! நான் விடுதலையாவேன்’’ என்றான். அப்படியே ராமானுஜர் கை வைத்ததும் ராட்சதன் விடுதலையானான். குணம் பெற்ற ராஜகுமாரியை கண்ட மன்னர் மகிழ்ந்தார்.
|
|
|
|