|
சுபஹேமா
தந்தையான தசரதரின் உத்தரவுப்படி காட்டுக்கு புறப்பட்டார் ராமன். அவரைக் காண வந்த தம்பியான பரதன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அயோத்திக்கு திரும்புமாறு அழைத்தார். ‘‘தந்தையின் உத்தரவை ஏற்று காட்டில் வாழும் நான், நாடாளும் பொறுப்பை ஏற்றால் தந்தையை அவமதிப்பதாகி விடும்’’ என தெரிவித்தார். தம்பியை அமைதிப்படுத்த அறிவுரைகள் கூறினார். அதன் தொகுப்பு ராமகீதை எனப்படுகிறது.
அதன் சாராம்சம் இதுவே: 1. உறவு தொடங்கும் நிலையிலேயே பிரிவு என்னும் முடிவுக்கும் மனிதன் தயாராக வேண்டும். உறவைக் கண்டு மகிழவும், பிரிவைக் கண்டு வருந்தவும் கூடாது. இரண்டையும் சமமாக கருத வேண்டும். உறவையும், பிரிவையும் இயல்பாக எடுத்துக் கொள். உயர்ந்த நிலையிலும், தாழ்ந்த நிலையிலும் சஞ்சலமடையாத மனப்பாங்கை வளர்த்துக் கொள். 2. கடலை நோக்கிச் செல்லும் யமுனாநதி மீண்டும் யமுனையாக கடலில் இருந்து திரும்ப முடியாது. கடல் என்பது பரம்பொருள். சரணடைந்தால் கடவுளோடு ஐக்கியமாகும் பேறு கிடைக்கிறதே! மீண்டும் நதியாகத் திரும்ப வேண்டுமா என்ன? நடப்பதெல்லாம் நன்மைக்கே என உறுதி கொள். புது இரவு தான் வருமே தவிர இனி போன இரவு வராது. 3. கோடை காலத்தில் சூரிய கிரணங்கள் தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்குகின்றன. அதைப் போல ஒருநாளின் இரவும், பகலும். வாழ்நாளை நம்மிடமிருந்து உறிஞ்சி எடுக்கின்றன. இன்னும் எத்தனை நாள் என்ற கணக்கு தெரியாத போது, மகிழ்ச்சியும், அழுகையும் ஏன்? 4. சூரியன் உதித்ததும் புதிய நாள் பிறந்தது என மகிழ்கிறோம். அதன் பின்னணியில் ஆயுளில் ஒருநாள் குறைகிறது என்ற உண்மையை உணரத் தவறுகிறோம். எந்த சந்தோஷத்துக்குப் பின்னாலும் ஒரு துக்கம் நிற்கிறது. எந்தத் துக்கத்திற்கும் நிழலாக ஒரு சந்தோஷம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள். 5. பழுத்தால் மரத்துடன் உள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு பழம் மண்ணில் விழும். தொடர்பு அறுப்பது பழமா அல்லது மரமா என ஆராய்வதை விட, பழுத்ததன் பலனாக விலகும் பக்குவம் ஏற்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி மனம் பழுத்தால், பிரிவோ, ஏன் மரணம் கூட பிரச்னையாக இருக்காது. 6. கடலில் கட்டைகள் மிதக்கின்றன. தண்ணீரின் வேகத்தால், மிதந்து வரும் கட்டைகள் உரசியபடி வருகின்றன. திடீரென நீரின் போக்கு மாறுகிறது. சேர்ந்த கட்டைகள் பிரிகின்றன. தண்ணீரின் போக்கில் பயணம் தொடர்கிறது. மறுபடி நீரின் சுழற்சியால் கட்டைகள் இணைகின்றன. பிரிவதால் அழுவதோ, இணைவதால் மகிழ்வதோ கட்டைகளுக்குக் கிடையாது. நீரோட்டம் போகும் போக்கில் போய் பயணம் செல்லும் பக்குவம் படைத்தவை அவை. அதேபோல மனிதர்களான நாமும் சந்திக்கிறோம், பிரிகிறோம். இரண்டுக்கும் இடைப்பட்ட பழக்கத்தில் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிக்கிறோம். சார்ந்து வாழ முற்படுகிறோம். பிரிதல் என்பது தவிர்க்க முடியாது என்பதை சந்திப்பின்போதே உணர்ந்தால் உணர்ச்சி வசப்பட மாட்டோம். 7. உண்மை தான் சுகம். சத்தியம் தான் இன்பம். உண்மையின் பாதையில் நடப்பது, சிந்திப்பது, பேசுவது, செயலாற்றுவது எல்லாம் இனிமையானவை. ஊருக்கு, உலகத்துக்கு, உற்றார் உறவினருக்கு உண்மை ஏற்புடையதாக இருந்தாலும், இல்லாவிட்டாலூம், நம் மனசுக்கு உகந்தது அது. வெளியில் எதிர்ப்புகள் எத்தனை ஆயிரம் புறப்பட்டாலும், உள்ளே மனசாட்சி தைரியமாக, நமக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும். போர் தொடுக்கும் ஆற்றலை நமக்களித்து வெற்றியை தேடித் தரும். அந்த உண்மை நிலை எப்போது கைவசப்படும்? இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் போதுதான். தேவைகளை சுருக்கினால், நமக்கென இருப்பவை எல்லாம் சுகம் தருவதாக அமையும். இன்னும், இன்னும் வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தாத ‘போதும்‘ என்ற மனமே, பொன் செய்யும் மருந்தாகும். |
|
|
|