Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நீலி...சூலி...காளி...
 
பக்தி கதைகள்
நீலி...சூலி...காளி...

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மையெல்லாம் காளி
தெய்வ லீலை அன்றோ...

பூதமைந்தும் ஆனாய் காளி
பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய்

இன்பமாகி விட்டாய் காளி
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை யல்லால் காளி
பிறிது நானும் உண்டோ...

அன்பளித்து விட்டாய் காளி
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கி விட்டாய் காளி
தொல்லை போக்கி விட்டாய்...

வார்த்தைக்கு வார்த்தை மகாகவி பாரதியார் மனசெல்லாம் நெகிழும்படி நன்றியும், நிம்மதியும், பரவசமும் பொங்க அம்மையின் காலடியில் கிடைக்கும் பரிபூரணத்தைப் பாடுகிறார்.
இந்த நீலி, இந்தச்சூலி, இந்தக் காளி கடலருகே இருந்தபோது ரவுத்திரமாக இருந்தாளாம். இப்போது சாந்தமாக, வாஞ்சையாக ‘வா மகளே...’ என்று அழைக்கிறாள்.
பார்க்கும் போதே கண்ணில் நீர் வழிகிறது நமக்கு. முடிந்தால் அம்மையை நம் மடியில் அமர்த்திக் கொண்டு ஒருவாய்ச் சோறு பிசைந்து ஊட்டி விட மாட்டோமா... என்று மனசு பரபரக்கிறது. அல்லது சிறு பிள்ளையாகி அம்மையின் மடியில் அமர்ந்து கொண்டு சிக்கெனப் பிடித்துக் கொள்ள மாட்டோமா... இந்தப் பூவுலகின் வெப்பத்திலிருந்து தப்பித்து அம்மையின் தாய்மைக் குளுமையில் இளைப்பாற மாட்டோமா... என்றும் மனசு ஏங்குகிறது.
மகாலட்சுமி ஒரு கரமாகவும், சரஸ்வதி ஒரு கரமாகவும் இருக்கும் சென்னை பாரிமுனை காளிகாம்பாள் – நெய்தல் பூமியின் காவல் தெய்வம் என்பது நிச்சயம். மக்களும், வண்டிகளும், வாகனங்களும், வியாபாரிகளும் குறுக்கும் நெடுக்குமாக ஆயிரக் கணக்கில் பயணிக்கும் நெருக்கடியான இடம் பாரிமுனை. இந்த பரபரப்புக்கு நடுவே காளிகாம்பாள் கோயில் திருத்தலத்தின் சாந்நித்யம் அபூர்வமானது.
‘இத்தனை இரைச்சல். இத்தனைக் கூச்சல். இத்தனை பரபரப்பு. இத்தனை வேகம். இதற்கு நடுவில் எப்படித் தாயே புன்னகையும் பூரிப்புமாக இருக்க முடிகிறது...
நம் அறியாமையே கேள்வியாகிறது. புதிரான அம்மையின் புன்னகை நமக்கான பதிலாகிறது.
‘நான் சொல்லாமல் உணர்த்துவதும் இதுதானே... வாழ்க்கை. கூச்சல் மிகுந்தது. வாழ்க்கை மேடுபள்ளம் மிகுந்தது. வாழ்க்கை வேகம் மிகுந்தது. இந்த வேகத்தோடு உருண்டு ஓடிக் கொண்டே இருந்தால் உருத்தெரியாமல் ஆகிவிடும். லகானாக மனசை இழுத்துப் பிடிக்க வேண்டும். நின்று நிதானிக்க வேண்டும். சுவாசத்தைக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் கிடைத்திருக்கும் வாழ்வின் அர்த்தத்தை உணரமுடியும்...’’
மவுனமாக சொன்னால் தான் என்ன... குழந்தைகளான நம்மோடு அம்மை பேச வார்த்தைகள் வேண்டுமா என்ன... கண்ணகல விரித்து அம்மையின் முகதரிசனத்தை உயிருக்குள் நிறைத்துக் கொள்வதே வரம்.
கமடேஸ்வரர் உடன் அருள்பாலிக்கும் காளிகாம்பாள் திருக்கோயிலின் சிலிர்ப்பு எது தெரியுமா... காலம் காலமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்மழை பொழியும் ஸ்ரீசக்கரமா...கி.பி. 1639ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு இன்றும் என்றும் சக்தியின் பேராற்றல் பீடமாகத் திகழ்வதா...அம்மையின் தெய்வீக மணம் வீசும் குங்குமத்தின் பொக்கிஷமா... கோயிலின் திருச்செல்வமான 33 பஞ்சலோகத் திருமேனிகளா... பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித்தேர் என்ற முப்பெரும் தேர்களா... நெய்தல் நிலத்தின் காமாட்சியாக அருளுவதா... சாதாரண மனிதர்கள் முதற்கொண்டு இந்திரன் வந்து வணங்கியதா...வருணனும், வியாசர் முனிவரும் வணங்கியதா... அகத்தியரும், விஸ்வகர்மாவும் வணங்கியதா....சொர்ணபுரி என அழைக்கப்படுவதா... பரதபுரி என அழைக்கப்படுவதா... இது எல்லாமே சிலிர்ப்பின் உச்சம்தான். ஆனால் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கும் சிலிர்ப்பு ஒன்று உண்டு.
அந்தச் சிலிர்ப்பு அம்மையின் இருப்பு. ஒவ்வொரு முறையும் பெற்றெடுத்த அம்மாவைப் பார்க்கும்போது நாடி நரம்பெல்லாம் சுண்டி இழுக்கும் அல்லவா... நம் இதயக் கோளங்கள் சுண்டி இழுக்குமல்லவா... நம் உயிர் முடிச்சு சுண்டி இழுக்குமல்லவா... அப்படியான துடிப்பையும், சிலிர்ப்பையும் ஒரு சேர அருள்பாலிப்பதுதான் காளிகாம்பாள் அம்மை கருணை.
அம்மாவின் கருவறையிலிருந்து உந்தித் தள்ளிப் பிறந்து, தொப்புள் கொடி துறந்து, தாய்ப்பாலில் நிறைந்தோம் அல்லவா... அந்தத் தாய்ப்பாலின் சுகந்தமும், புனிதமும் காளிகாம்பாள் அம்மையின் பார்வையில் கிடைக்கும். அம்மாவின் கைச்சூடும், சேலைக் கதகதப்புமாக உறங்கி, தெளிந்து வளர்ந்தோமல்லவா... அந்தப் புளகாங்கிதத்தை அம்மையின் காலடிச் சொர்க்கம் தரும்.
பல திருத்தலங்களுக்கு சென்று தரிசிக்கும் ஆர்வம் இருக்கலாம். ஆனால் வாய்ப்பு இல்லையே என்று ஏக்கத்தில் வருந்த வேண்டாம். மூவேழு உலகத்தின் ஆதி பராசக்தியாக, நுாற்றுக்கணக்கான அவதாரமெடுத்த பேராற்றலாக, எல்லா உயிர்க்குள்ளும் உயிராக, உறவாக, உணர்வாக, உணவாக, கனவாக, நனவாக, வாசமாக, பாசமாக, நேசமாக யாதுமாகி நிற்கும் காளிகாம்பாள் தரிசனம் சகலமுமாக நிறைக்கும்.
‘யாதுமாகி நின்றாய்’ என்ற இரண்டு வார்த்தைகளிலேயே காளிகாம்பாளின் எண்ணிலடங்கா தெய்வீக உயிர்ப்பைச் சொல்லி விட்டார் பாரதியார்.
கோயில் கல்வெட்டும் பல வரலாற்று சம்பவங்களுக்குச் சான்றளிக்கிறது. குபேரனின் செல்வம் அபரிமிதமாகப் பொங்கியது. வீரசிவாஜி – சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டது; இதுவும் இன்னமுமாகப் புறச்சான்றுகள் சொல்லப்படுகின்றன. ஆனால் நம் மன நிம்மதி என்னும் அகச்சான்று ஒன்று போதுமே – அம்மையின் அருட்பேராற்றல் சொல்ல.
காளிகாம்பாள் அம்மையைத் தரிசிக்க வரும் போது நம் மனசெல்லாம் சுமந்திருப்பது கவலையும், கண்ணீரும். தரிசனத்துக்குப் பின் நம் மனசெல்லாம் சுமந்திருப்பது களிப்பும், பன்னீரும். அம்மா வீட்டில் ‘அக்கடா’ என்று கால் நீட்டி உட்காரும்போது உயிர்வலி எல்லாமே தீருமல்லவா... அந்த நிம்மதிதான் காளிகாம்பாள் அம்மை சன்னிதானம் தருகிறது.
சொல்ல வேண்டாம் மவுனமே போதும் அம்மைக்கு. செல்வத்தைப் படாடோபமாகக் கொட்ட வேண்டாம். மனசார பக்தியைத் தந்தால் போதும். அவரவர் குறையை நீக்கி நிறைவாக்கும் நீலி. அவரவர் கவலையைப் போக்கி மகிழ்வாக்கும் சூலி. அவரவர் வருத்தம் போக்கி வளமாக்கும் காளி.
கோயில் சிறியது. அம்மையின் அருளோ பெரியது. கோயில் குறுகியது. அம்மையின் கருணையோ பெருகியது. மஞ்சளும், குங்குமமும் அம்மையின் அம்சமாக, அம்மையின் வம்சமாக அம்மையின் ஆசியாக இந்தப் பிரபஞ்சத்தை காத்து நிற்கிறது. காளிகாம்பாளின்  கருணையை எடுத்துச் சொல்ல ஆற்றல்மிக்க வார்த்தைகள் உலகின் எந்த மொழிக்கும் இல்லை. எந்த மொழியில் எத்தனை சொன்னாலும் அவற்றையெல்லாம் விஞ்சி நிற்கும் வீரிய அவதாரம் காளிகாம்பாள்.
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்
முன்னைத் தீயவினைப் பலன்கள் இன்னும்
மூளாது அழித்திடுதல் வேண்டும்
என்னைப் புதிய உயிராக்கி எனக்கு
ஏதும் கவலையறச் செய்து மதி
தன்னைத் தெளிவுறவே செய்து என்று
மகிழ்வு கொண்டிருக்கச் செய்வாய்
பாரதியார் போல காளிகாம்பாள் அம்மையிடம் இந்த விண்ணப்பத்தை, வேண்டுகோளை, கோரிக்கையைத் தரலாம். இதற்குள் எல்லாமே அடக்கம். பதவி, பெயர், புகழ், செல்வம், வசதி, வாய்ப்பு, உற்சாகம், செழிப்பு, சிறப்பு, களிப்பு என்று எல்லாமும் கிடைக்க நாம் மனசெல்லாம் நிஷ்களங்கமாகக் காளிகாம்பாள் அம்மையிடம் செல்லலாம். இம்மைக்கும் மறுமைக்கும் எல்லாமே வெல்லலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar