Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » விசாலாட்சி காசியின் சொர்க்கம்
 
பக்தி கதைகள்
விசாலாட்சி காசியின் சொர்க்கம்

அந்த ஊர் வண்ண வண்ணப் புடவைகளுக்கு புகழ் பெற்றது. அந்த ஊர் கலைநுணுக்கமான அலங்கார நகைகளுக்கு புகழ் பெற்றது. அந்த ஊர் நாவில் ருசி அரும்புகளை மலர வைக்கும் ஆயிரக்கணக்கான உணவு வகைகளுக்கு புகழ் பெற்றது. அந்த ஊர் நமது தேசத்தின் ஆன்மிகத் தலைநகரம் என்றும் புகழ் பெற்றது.
பழமையின் தொன்மம் நிறைந்த கங்கைப் படித்துறைகள். பழமையின் தொன்மம் நிறைந்த செம்மைக் கட்டடங்களும், மாடங்களும். பழமையின் தொன்மம் நிறைந்த குறுகலான சந்துகளும், கடைகளும். அந்த ஊரின் காற்றெல்லாம் கங்கை வாசனை. அந்த ஊரின் மண்ணெல்லாம் முன்னோர் வாசனை. அந்த ஊரின் திசையெல்லாம் காசி விசாலாட்சி வாசனை.
பல்லாண்டு காலக் கனவின் நனவானது காசிப் பயணம். ஒரு நுாற்றாண்டுக்கு முந்தைய தமிழின் எழுத்துக்களோடு பிலவங்க வருடம் கும்பாபிேஷகம் நடத்தியது என்ற தகவலை அளித்தது கோயில் முகப்பிலிருந்த கல்வெட்டு. அந்த எழுத்துக்களின் மீது  விரல்கள் பட்டபோது,  எந்த சிற்பிகள் அந்தத் திருக்கோயிலின் நிர்மாணிப்பிலும், தகவல் பலகையின் நிர்மாணிப்பிலும் ஈடுபட்டார்களோ – அவர்கள் திருக்கரத்தைத் தீண்டியது மாதிரி சிலிர்ப்பு ஊடுருவியது. தெருவிலேயே வாசல் என வீடு போன்ற எளிய முகப்புதான் காசியின் காவல் தேவதைக்கு.
காசி விசாலாட்சியின் பேரழகு எதற்கு ஈடானது என சொல்லவே முடியாது. அம்மையின் அழகுக்கு அம்மையின் அழகு மட்டுமே ஈடு. ஆயிரம் சூரியனைச் சேர்த்து வைத்தாலும் அம்மையின் பாத முனைக்கு ஈடாகாது. ஆயிரம் நிலவுகளைச் சேர்த்து வைத்தாலும் அம்மையின் பார்வை முனைக்கு ஈடாகாது. ஆயிரம் பூக்களைச் சேர்த்து வைத்தாலும் அம்மையின் திருவடி முனைக்கு ஈடாகாது. ஆயிரம் பட்டாடைகளைச் சேர்த்து வைத்தாலும் அம்மையின் தாய்மைக் கருணைக்கு ஈடாகாது.
காசி விசாலாட்சி தரிசனத்தின் போது அம்மையிடம், ‘இதுதான் சொர்க்கமா தாயே? உன் அருகில், உன் தரிசனத்தில் கரைகின்ற இந்தப் பொழுதுதான் சொர்க்கமா தாயே?’ என அறியாமைக் கேள்வி என்னுள் எழுந்தது. அதன் அர்த்தமின்மை எனக்குச் சிரிப்பைத் தந்தது.
சொர்க்கம்தான் உச்சபட்சமான மகிழ்ச்சி என்பது நம் கற்பிதம்தானே? யாரேனும் போய்ப் பார்த்து விட்டுத் தகவல் சொன்னதாக வரலாறு உண்டா? காலம் காலமாகச் சொன்ன மூதாதையர் கதைகளின் மூலமாக சொர்க்கம் மட்டுமே சிறப்பானது எனக் கருதுகிறோம்.
காசி விசாலாட்சி அம்மை பீடத்தின் அருகில் சொர்க்கம் கூட நெருங்க முடியாது. சொர்க்கத்தை விடவும் பேரின்பம், நிம்மதி, நிதானம் தருகின்ற ஓரிடம்தான் காசியின் விசாலாட்சி திருக்கோயில்.
பக்கத்திலிருந்த யாரோ சொன்னது கேட்டு திரும்பிப் பார்த்தேன். ‘‘சொர்க்கம் நரகம் என்பது வெளி இடத்தில் இல்லை. உள் மனசில் இருக்கிறது...’ அது அம்மையின் அசரீரிதான். அம்மை இப்படி சொன்னதற்கு காரணம் – அங்கிருந்தவர்கள் வேற்று மொழிக்காரர்கள். நான் மட்டும் அம்மையோடு தமிழில் பேசினேன். அது சரி. அவளின் திருவிளையாடலுக்கு நேரம் ஏது? காலம் ஏது? இடம் ஏது? இடமின்மை ஏது?
காசியை நினைக்க முக்தி
காசி என்றுரைக்க முக்தி
காசியில் வசிக்க முக்தி
காசியைக் கேட்க முக்தி
காசியில் வசிப்போர் தம்மைக்
கண்டு தாழ்ந்திடுதின் முக்தி
என்பதாகக் கொண்டாடப்படும் ஆனந்த பவனம் காசியில் வந்து நின்று சொர்க்கம் எப்படி இருக்கும் என்று அம்மையைக் கேட்பது அறியாமைதானே? காசியில் இருக்கும் 23,000 கோயில்களை  வாழ்நாளைக்குள் பார்த்து விடத்தான் முடியுமா? பார்த்து, தரிசித்து முடித்தாலும் முழுமையான மனிதம் உள்ளவர்களாக நம்மால் உயர்ந்து விடத்தான் முடியுமா? தெளிந்து விடத்தான் முடியுமா?
மகாமயானமாக விளங்கும் காசியின் தெருக்களில் நடந்தேன். வருணை நதியும், அசி நதியும் சங்கமிக்கும் கங்கைக் கரைப் படித்துறைக்குச் செல்ல குறுகலான பாதைகளில் நடந்தேன். மணிகர்ணிகா படித்துறைக்குப் போகும் வழியெல்லாம் விறகுகள் விற்கும் கடைகள். முக்தி பீடமாகக் கருதப்படும் காசியின் சடலங்களை எரியூட்டும் தலம் இந்த இடம்தான். விறகுகளின் வாசம் நிறைந்த இடம். மாடுகள் அதன் போக்கில் அலைந்து கொண்டிருந்தன. மண் சாலைகள் மிகக் குறுகலாக மேடும் பள்ளமுமாக ஏறி இறங்கிப் படித்துறைக்கு அழைத்துச் சென்றது. எப்போதும் அணையாமல் எரியும் மூலநெருப்பு மூலம் நெருப்பெடுத்துச் சடலங்களை விறகில் அடுக்கி எரித்துச் சாம்பலாக்கும் காட்சிகள் – கண் இமைப்பது போல இயல்பாக நடக்கின்றன. பிணத்தோடு வரும் உறவினர்கள், சடங்குகள் செய்யும் வைதீகர்கள், பிணம் எரிப்பவர்கள் எல்லோருமே முகத்தில் சலனமற்று, மனசில் சலனமற்று விறகினால் அடுப்பு எரித்துச் சோறு சமைக்கும் சமன மனதுடன், சமன விழியுடன் அதிர்வற்று இருந்த நிலைமை என் உயிர் மூலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
சந்தோஷம் வேண்டாம். சரி. வலி, வேதனை, சோகம், இறப்பின் பிரிவு, இழப்பின் வாதை கூடவா இல்லாமல் இருப்பார்கள்? ஜனனம், மரணம், பிறப்பு, இறப்பு எல்லாமே சமமாகப் பார்க்கும் பாவனை விசாலாட்சி அம்மை தருவதா? சொர்க்கம், நரகம் எல்லாமே இவர்களுக்கு ஒன்றுதானா? நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த போது ஏதோ ஞானமின்னல் வெட்டி ஊடுருவியது.  
‘‘கடவுளே... விசாலாட்சி தாயே... இந்த ஜீவனுக்கு முக்தி கொடு தாயே...’ பக்கத்திலிருந்த சருகுப் பெண்மணி, கண்மூடி, கைகூப்பி வேண்டியதைப் பார்த்தேன். அவரின் கண்ணீர் மனசைப் பிசைந்தது.
‘‘தமிழ் நாடா நீங்க?’’
‘‘ஆமாம்மா... நீங்க இங்கேயா இருக்கீங்க?’’
‘ம்...ம்...’ நடக்கத் துவங்கினார். கூடவே நடந்தேன். பக்கத்திலிருந்த மேடை அருகில் படிக்கட்டுகள். அதில் ஏறினார் அந்தப் பெண்மணி. ‘இங்கயா உங்க வீடு?’ கேட்டபடி பின்னால் தொடர்ந்தேன். ஒல்லியான ஒடிசலான தேகம், வெள்ளைக் கைத்தறி நுால் சேலை. கோரையான நரைமுடி. பாழடைந்த அந்தக் கட்டடத்தின் உடைந்த கதவு திறந்து உள்ளே போனார். நானும் ஏன் கூடவே போனேன்? இன்று வரைக்கும் எனக்கு புரியவில்லை.
முதல் தளம்.  கம்பிகள் இல்லாத இடைவெளி மட்டுமுள்ள ஜன்னல் வழியாகக் காற்று பலமாக வீசியது. சின்னச் சின்னத் திண்ணைகள். கன்னங்கரேல் என கரி படிந்த சுவர்கள். மூலைக்கு மூலை நாலைந்து புடவைகள். அந்தப் பெண்மணி போலவே சில முதிய பெண்மணிகள் சுருண்டு படுத்திருந்தனர்.  
‘இது என்ன இடம்? யாரும்மா நீங்க?’
‘அனாதைங்க... உறவு இருந்தும் அனாதைங்க...’
கண்ணீர் வழிந்தது அந்தப் பெண்மணியிடம். ‘‘காசி யாத்திரைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு எம் மகன் அழைச்சுட்டு வந்தான். விசாலாட்சியைப் பார்த்துவிட்டு வெளியிலே வந்தோம். திடீர்னு மகன் கூட்டத்தோட கூட்டமா, குறுகலான தெருவுக்குள்ள நுழைஞ்சு போயிட்டான். ‘இனிமே இங்கேயே இருந்து வாழ்க்கைய முடிச்சுக்கோ’’ அப்படின்னு சொன்ன மகனைத் தேடி ஊருக்குத் திரும்பிப் போக விருப்பமில்ல. இந்த அம்மாக்களும், கைவிடப்பட்ட அம்மாக்கள் தான். யாரு முந்தி சாகறேமோ– மத்தவங்க மணிகர்ணிகால எரிச்சு கங்கைல தள்ளி விட்டுருவாங்க...’
மண்பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். எனக்கு ‘‘குடுக்க வேற ஒண்ணும் இல்ல. கடைகள்ல தர்ற அன்னதானம் சாப்பிட்டு கடைசி வரைக்கும் இப்படியே சாக வேண்டியதுதான்...’’
பதில் சொல்ல முடியாமல் அதிர்ந்து போயிருந்தேன் நான்.
‘‘ஆனா ஒண்ணுதாயி... தினமும் விசாலாட்சியப் பார்த்துட்டு வருவேன். மனசு பாரம் இறங்கிடும். அவ காலடியே சொர்க்கம். அதனால இந்த வாழ்க்கை எனக்கு நரகமாத் தெரியல்ல..’
அம்மா.. தாயே... அந்தப் பெண்மணியின் கைகளை பிடித்துக் கதறினேன். மெலிந்த அந்த தேகத்தை அணைத்துக் கொண்டேன். காசி விசாலாட்சி அம்மையை ஆரத் தழுவிக் கொண்ட காலாதீத ஆசுவாசத்தைத் தந்தது அந்த அரவணைப்பு.
‘எந்தப் பிணம் எரிக்க வந்தாலும் சவுண்டி மணிச்சத்தம் கேட்கும். கீழே இறங்கிப் போயி கும்பிட்டு வேண்டி, வழி அனுப்பிட்டு வருவேன்... யாரோட அம்மாவோ, அப்பாவோ, புருஷனோ, மகனோ, பொண்டாட்டியோ, மகளோ... உசிரு ஒண்ணுதான். ஆன்மா ஒண்ணுதான்... என்னிக்காவது என்னையும் யாராச்சும் இப்படி வழியனுப்புவாங்க...’
வார்த்தை தொலைத்து அமைதியாகி அதிர்ச்சியிலிருந்தேன் நான்.
‘உன்னை நிராதரவா கைவிட்டுப் போறதுக்காக என்னைச் சபிக்காதே... என்னை மன்னிச்சுடும்மா..’ எம் மகன் இப்படிச் சொன்னான். அதனால அவனையோ, மருமகளையோ  தப்பா நினைக்கறதில்ல. சொர்க்கத்துல கொண்டு வந்து என்னைச் சேர்த்துட்டான் மகன்.’ உணர்வுகளற்ற நிலையில் எங்கோ வெறித்துப் பார்த்தார். எல்லாப் பெண்களிடமும் அந்த வெற்றுப்பார்வை தான்.
விசாலாட்சி தரிசனம் முடித்து வாங்கிய இனிப்பு, பனாரஸ் புடவைகள், கொஞ்சம் பணம் எல்லாவற்றையும் அவர்களின் கையில் கொடுத்து அத்தனை பெண்களையும் பாதம் தொட்டு வணங்கினேன். விசாலாட்சி தரிசனம் ஆதரவு அற்ற அந்தப் பெண்களின் பாதத்தில் புனிதமானது. மனசுக்குச் சொர்க்கமானது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar