|
ஒரு மாதமாக வெளியூர் சென்றிருந்த பெரியவர் ஒருவர் ஊருக்குத் திரும்பினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசையாக அவர் கட்டிய வீட்டில் தீ பற்றி எரிந்தது. இந்த வீட்டை பலமடங்கு தொகைக்கு பலரும் விலைக்கு கேட்டும் விற்க மறுத்து விட்டார். இப்போது கண் முன்னே வீடு பற்றி எரிய மக்கள் வேடிக்கை பார்த்தனர். அணைக்க முயற்சி செய்தும் பலனில்லை. அத்தனையும் எரிந்துபோனது. சோகத்துடன் நின்ற பெரியவரின் காதில் அவரது மூத்த மகன் கிசுகிசுத்தான். ‘‘வருத்தம் வேண்டாம் அப்பா! வீட்டை அதிக விலைக்கு ஒருவர் கேட்டதால் நேற்றே விற்று விட்டேன். இப்போது வீடு நம்முடையது இல்லை. விற்கும் முன்பு உங்களிடம் கேட்க நேரம் இல்லை. மன்னியுங்க’’ என்றான். ‘‘அப்படா...அப்போ வீடு நம்முடையது இல்லை. தப்பிச்சோம்’ என மகிழ்ந்தார். நொடிப்பொழுதில் வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவராக மாறினார். அதே வீடு...அதே சம்பவம்! சில நிமிடங்களுக்கு முன்பு வரை வீட்டின் உரிமையாளராக அதைப் பார்த்தார். இப்போது வேடிக்கை பார்ப்பவராக இருக்கிறார். சில நிமிடம் சென்றது. அவரது இரண்டாவது மகன் ஓடி வந்து, ‘‘அப்பா...வேடிக்கை பார்க்கிறீர்களே! இது நம்ம வீடு... தீப்பற்றி எரியுதேப்பா’’ எனக் கதறினான். ‘‘இல்லப்பா...உனக்கு தெரியாதா. உங்க அண்ணன் நேத்தே வித்துட்டான்’ ’ ‘‘அப்பா...அட்வான்ஸ் தான் வாங்கிருக்கோம். தீப்பிடித்த வீட்டை எப்படி இனி எப்படி வாங்கப் போறாங்கன்னு சந்தேகமா இருக்கு’’
நொடியில் பெரியவர் முகம் வெளிறியது. பதட்டம் அதிகரித்தது. வேடிக்கை பார்ப்பவராக இருந்தவர் மீண்டும் வீட்டு உரிமையாளரானார். அடுத்து மூன்றாவது மகன் வந்தான். ‘வீட்டை வாங்குவதாக அட்வான்ஸ் கொடுத்தவர் ரொம்ப நாணயமானவர். அவரை பார்த்திட்டுத்தான் வரேன். பேசியபடி வாங்கிக்கிறேன். அட்வான்ஸ் போக மீதி தொகையை தர்றேன். தீப்பிடிச்சதுக்கு நீங்க காரணம் இல்லையேன்னும் சொன்னாருப்பா’ என்றான். மீண்டும் மகிழ்ந்து வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவரானார் பெரியவர்.
‘இந்த வீடு எனக்கு சொந்தம்; இதன் உரிமையாளர் நான்’ என கருதுவதே அத்தனை பிரச்னைக்கும் காரணம். ‘தீப்பற்றிய வீடு தனக்கு சொந்தம்’ என்னும் போது மனம் வருந்துகிறது. அது இன்னொருவருக்கு சொந்தம் என்னும் போது மனம் பற்றில்லாமல் மகிழ்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணமே. எண்ணங்கள் உங்களுக்கு சொந்தமானவை அல்ல. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், நாளிதழ், புத்தகம் வாயிலாக உங்களிடம் வந்து சேர்ந்தவை. சற்று நிதானமாக யோசியுங்கள். சுயமாக ஏற்பட்ட எண்ணம் எதுவும் உங்களிடம் இருக்காது. மற்றவர்கள் திணித்திருக்கலாம். அல்லது நீங்களே உங்களுக்குள் மடத்தனமாக திணித்ததாக இருக்கலாம். (நல்ல எண்ணத்தை விதைத்தால் நல்ல செயல் அறுவடையாகும். நல்ல செயலை விதைத்தால் நல்ல பழக்கம் அறுவடையாகும்.
நல்ல பழக்கத்தை விதைத்தால் நல்ல பண்பு அறுவடையாகும்
நல்ல பண்பை விதைத்தால் தெய்வீகத்தை உணர்வீர்கள்!) பெரிதாக்கவும்.
|
|
|
|