|
பரதன் என்னும் பக்தர் காசி யாத்திரைக்கு புறப்பட்டார். வழியில் இரண்டு இலந்தை மரங்களைக் கண்டார். அதன் நிழலில் ஒருநாள் பகல் பொழுதில் ஓய்வெடுத்து சென்றார். அந்த மரங்கள் நாளடைவில் பட்டுப் போயின. அடுத்த பிறவியில் மரங்கள் இரண்டும் பெண்களாக பிறந்தனர். பரதன் யாத்திரையை முடித்து விட்டு அந்த வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அவரை கண்டதும், ‘‘ சுவாமி! தங்களின் புண்ணியத்தால் தான் மரமாக இருந்த நாங்கள் மனிதப்பிறவியை அடைந்தோம்’’ என்று அப்பெண்கள் வணங்கினர். ‘‘ குழந்தைகளே! நீங்கள் சொல்வது புரியவில்லையே!’’ என்றார் பரதன். ‘‘ சுவாமி! கோதாவரி கரையில் சத்ய தபஸ் என்னும் முனிவர் ஆஸ்ரமத்தில் தவமிருந்து வந்தார். அவரது தவத்தை கலைப்பதற்காக தேவலோகத்தில் இருந்து எங்களை பூமிக்கு அனுப்பி வைத்தார் இந்திரன். ஆடிப் பாடி தவத்தை கலைக்க முயற்சித்தோம். கண் விழித்த முனிவர், ‘‘ நீங்கள் இலந்தை மரங்களாக மாறக் கடவது’’ என சபித்தார். அவரிடம் விமோசனம் கேட்டு முறையிட்டோம். ‘‘ பரதன் என்னும் விஷ்ணு பக்தர் தினமும் பகவத்கீதையில் ஒரு அத்யாயம் படிக்கும் வழக்கம் கொண்டவர். அவரது புண்ணிய பலத்தால் விமோசனம் அடைவீர்கள்’’ என்றார். அதன்படி உங்களின் வருகையால் எங்களுக்கு வாழ்வு கிடைத்தது’’ என காலில் விழுந்து வணங்கினர். கீதையின் மகிமையைக் கேட்ட பரதன் மனம் நெகிழ்ந்தார். |
|
|
|