பூலோகத்தில் வாழ்ந்து மறைந்த வித்யநாதர் என்பவரை சிவகணங்கள் கைலாயத்துக்கு அழைத்து வந்தனர். அவரைக் கண்ட சிவன் தன் இருக்கையை விட்டு எழுந்து கட்டியணைத்தார். உடனே வித்யநாதர் ஒளி வடிவாகி சிவனுடன் இரண்டறக் கலந்தார். அப்போது சிவனை தரிசிக்க பத்மராஜா என்னும் மன்னர் வந்திருந்தார். நினைத்த நேரத்தில் எல்லாம் பூலோகத்தில் இருந்து வந்து சிவனை தரிசித்து செல்லும் வரம் பெற்றவர் இவர். ‘‘சுவாமி! இந்த மனிதர் உங்களுடன் கலந்து விட்டாரே... எப்படி?’’ எனக் கேட்டார். ‘‘உலகிலேயே சிறந்த தர்மத்தை கடைபிடித்தவர் இவர். வேத சாஸ்திரங்களில் வல்லவரான அவர் தனது அறிவை பணமாக்க வாய்ப்பு கிடைத்தும் பொருட்படுத்தவில்லை. சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதை கடமையாக கொண்டிருந்தார். ஏழ்மையிலும் வருமானத்தில் ஒரு பகுதியை தானம் அளித்தார். பிறர் நன்மைக்காக வாழ்வதே சிறந்த தர்மம். அதைக் கடைபிடிப்பவர் யாராக இருந்தாலும் என்னுடன் இணைந்திடுவர்’’ என்றார். பத்மராஜா பூலோகம் திரும்பினார். தான் கண்ட உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்தார். மக்களும் மன்னரின் வழிகாட்டுதலை ஏற்று சேவை செய்தனர். நாட்டில் பாவம் என்ற சொல்லுக்கு இடமில்லாமல் போனது. மகிழ்ந்த சிவன் அங்கு வாழ்ந்து மறைந்த அனைவருக்கும் மோட்சம் அளித்தார்.
|