|
நளகூபன், மணிக்ரீவன் என்னும் இருவரும் குபேரனின் மகன்கள். மது, மாது பிரியர்களான அவர்கள் தந்தையின் செல்வத்தை தாறுமாறாக செலவழித்தனர். ஒருநாள் குடித்து விட்டு கந்தர்வப் பெண்களுடன் சேர்ந்து பொழுது போக்கினர். அந்த பக்கமாக நாரதர் வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அப்பெண்கள் ஓட்டம் பிடித்தனர். போதையில் இருந்த குபேர புத்திரர்களுக்கு நாரதரை அடையாளம் தெரியவில்லை. யாரோ ஒருவர் என எண்ணி,“உனக்கு என்ன தைரியமிருந்தால் எங்களின் மகிழ்ச்சியைக் கெடுப்பாய். அந்தப் பெண்களை அழைத்து வராவிட்டால் தண்டிப்போம்’’ என கோபித்தனர். ‘‘என்னை அவமதித்ததால் மருத மரங்களாக போகக் கடவீ்ரகளாக’’ என்று சபித்தார் நாரதர். அதன் பிறகே தங்களின் முன் நிற்பவர் நாரதர் என்ற உண்மை புரிந்தது. சாப விமோசனம் கேட்டனர். ‘‘மகாவிஷ்ணு கோகுலத்தில் கிருஷ்ணராக அவதரிக்க இருக்கிறார். அப்போது விமோசனம் கிடைக்கும்,” என சொல்லி விட்டு மறைந்தார் நாரதர். அதன்படியே ஒருநாள் பாலகிருஷ்ணரின் சேட்டை தாளாத யசோதை கயிற்றால் அவனை உரலில் கட்டினாள். அதை அவர் இழுத்த போது இரு மரங்களுக்கு இடையே உரல் மாட்டியது. கிருஷ்ணர் பலமாக இழுக்க மரங்கள் சாய்ந்தன. அப்போது நளகூபனும், மணிக்ரீவனும் சுயவடிவம் பெற்று கிருஷ்ணரை வணங்கினர். மனம் திருந்தி குபேர லோகத்தில் ஒழுக்கத்துடன் வாழத் தொடங்கினர்.
|
|
|
|