|
ஷீரடிக்கு அருகிலுள்ள கிராமத்தில் தார்க்காட் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும் இருந்தனர். இருவருக்கும் ஷீரடிபாபா மீது பக்தி அதிகம். ஆனால் தார்க்காட்டிற்கு அவ்வளவாக பக்தி கிடையாது. தார்க்காட்டின் மனைவி, மகனுக்கு ஷீரடி சென்று பாபாவை நேரில் தரிசிக்க வேண்டும் என விரும்பினர். ஆனால் ஷீரடி சென்று விட்டால் வீட்டிலுள்ள பாபாவின் திருவுருவச் சிலைக்கு படையல் வைப்பது யார்? எனத் தயங்கினர். அதையறிந்து பாபாவிற்கு தினமும் படையலை வைக்கும் பணியை தான் செய்வதாக தார்க்காட் ஒத்துக்கொண்டார். மனநிம்மதியுடன் பாபாவை தரிசிக்க ஷீரடி புறப்பட்டனர். காலையில் எழுந்தவுடன் பாபாவிற்கான பிரசாதத்தை தயாரிக்கும்படி வீட்டு வேலையாட்களிடம் தார்க்காட் தெரிவித்தார். நீராடி விட்டு காலையில் பாபாவிற்கு நைவேத்யம் வைத்து பூஜை செய்வார். அலுவலகம் சென்று வந்தபின் அதை தார்க்காட் சாப்பிடுவார். இரண்டு நாட்கள் இந்த பணி சரியாக நடந்தது. மூன்றாம் நாள் பிரசாதத்தை தயாரிக்கச் சொல்லாமல் அலுவலகத்திற்கு அவசரமாக கிளம்பினார் தார்க்காட். வீட்டுக்கு திரும்பிய போது தான் பிரசாதம் படைக்காதது நினைவுக்கு வந்தது. மனைவி, மகனுக்கு கொடுத்த வாக்கை மீறி விட்டோமே என வருந்தி ஷீரடியில் உள்ள மனைவிக்கு தெரியப்படுத்த எண்ணி கடிதம் எழுதினார். அந்தக் காலத்தில் ஒருவரை உடனடியாக தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி கிடையாது. தார்க்காட் வீட்டில் கடிதம் எழுத தொடங்கினார். அதே சமயத்தில் தார்காட்டின் மனைவியும், மகனும் ஷீரடியில் பாபாவின் முன் அமர்ந்து இருந்தனர். தார்க்காட் செய்த தவறை உணர்ந்தார் பாபா. ஆனாலும் புன்முறுவலுடன் தார்க்காட்டின் மனைவியிடம், “இன்று உங்கள் வீட்டில் எனக்கு உணவு கிடைக்கவில்லையே...’’ என்றார். தார்க்காட்டின் மனைவிக்கு ஏதும் புரியவில்லை. ஆனால் மகன், ‘‘இன்று வீட்டில் பாபாவிற்கு பிரசாதம் படைக்க அப்பா மறந்து விட்டாரோ?’’ என சந்தேகத்துடன் கேட்டான். பாபா ஏதும் பதிலளிக்கவில்லை. இரண்டு நாள் கழிந்த பின் ஷீரடியில் உள்ள மனைவி, மகனுக்கு கடிதம் கிடைத்தது. பின்னரே அவர்களுக்கு உண்மை புரிந்தது. கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லையே என்று வருந்தி கடிதம் எழுதிய தார்க்காட்டின் நேர்மையும் பக்திக்கு ஈடானது தான். பக்தி இல்லாவிட்டாலும், பாபாவின் நல்லாசியைப் பெற்றார் தார்க்காட். இரண்டு நாளாக தார்க்காட் படைத்த நைவேத்தியத்தை பாபா ஏற்றார் அல்லவா!. பாசமோ, பக்தியோ உண்மையானதாக இருக்க வேண்டும். பக்தி, நேர்மை இரண்டும் மனிதனுக்கு அவசியம் என்பதை இதன் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டினார்.
|
|
|
|