|
பகவான் கிருஷ்ணர் தியானத்துக்குரிய ஸாதனங்களையும், தியானத்தின் பலனையும் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். அர்ஜுனன் தன்னுடைய உள்ளக்கிடக்கையை இவ்வாறு வெளிப்படுத்தினான். ஹே... கிருஷ்ணா! மனமானது, மிகுந்த சஞ்சலம் மிக்கதாக இருக்கின்றதன்றோ! உடலையும் இந்த்ரியங்களையும் கூட கடைந்து உருக்குலையச் செய்வதும், மிகுந்த வலிமை படைத்ததும், பிடிவாதம் மிக்கதுமான இந்த மனதை அடக்குவது என்பது, காற்றை அடக்குவதைப்போல் கடினமானது என்று நான் கருதுகிறேன். இவ்வாறு அர்ஜுனன் கூறியவுடன், பகவான், அவனுக்கு பதில் கூறுகிறார். பகவாநுவாச அஸம்ஸயம் மஹாபாஹோ மநோதுர்நிக்ரஹம் சலம் ப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே பெருந்தோளுடையாய்! அலைபாய்ந்து கொண்டிருக்கும் தன்மையுடைய மனம் அடக்குதற்கரியது என்பதில் யாதொரு ஐயமுமில்லை. குந்தியின் புதல்வனே! பகுத்தறிவோடு கூடிய பயிற்சியினாலும், பற்றற்ற தன்மையினாலும் மனதை நெறிப்படுத்த இயலும். பகவான், அர்ஜுனன் கூறும் பிரச்னையை முதலில் ஏற்றுக்கொள்கிறார். புறநோக்குடைய மனதின் அலைபாயும் தன்மை அர்ஜுனனுடைய பிரச்னை மட்டுமல்ல, உலகில் உள்ள அத்தனை மனிதர்களின் நிலையும் இதுதான்.
|
|
|
|