Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிங்கம் போன்ற ஆற்றல்
 
பக்தி கதைகள்
சிங்கம் போன்ற ஆற்றல்

அவளை நினைத்தாலே போதும். உடலில் ஒரு மாயச் சிலிர்ப்பு தோன்றும். குருதித் துளிகள் எல்லாமே நிமிர்ந்து நிற்கும். மனசுக்குள் துணிவு விருட்சமாக விஸ்வரூபம் எடுக்கும்.
எப்போதெல்லாம் மனசு குழைந்து போகிறதோ, எப்போதெல்லாம் விடியலில் வெளிச்சம் மறைந்து போகிறதோ, எப்போதெல்லாம் சுவாசத்தில் நம்பிக்கையின் ஈரம் குறைந்து போகிறதோ அப்போதெல்லாம் அவளின் தரிசனம் தேடுவேன். அவளின் கரிசனம் தேடுவேன். இது மனித இயல்புதானே? ஓர் ஆதுரமான, ஓர் ஆதரவான, ஓர் அக்கறையான பாதுகாப்பு விரல்களைத் தேடிப் பற்றிக் கொள்வோமே... அது மாதிரி எனக்கான கொழுகொம்பு அவள்தான். அவளை பயங்கரி என்பார்கள். உக்கிரதேவி என்பார்கள். அவளை ரவுத்திரநாயகி என்பார்கள். அவளை பிரத்யங்கரா காளி என்பார்கள். எத்தனை பெயர் சொன்னால் என்ன? எனக்கு அவள் அம்மைதான்.
மனசு வெதும்பும். மனசு முழுக்க வேதனை ததும்பும். மனசு மவுனக்கண்ணீர் வடிக்கும். மனசு ரணகளமாகித் துடிக்கும். அப்போதெல்லாம் ஓடோடிப் போகும் ஒரு திருத்தலம். புதுச்சேரி அருகிலுள்ள மொரட்டாண்டி சிற்றுாரின் பிரத்யங்கிராதேவியின் திருக்கோயில். ஐநுாறு ஆண்டுகளாக அம்மையின் அருளால் பூரணமாகி நிற்கும் சிற்றுார். மொரட்டாண்டிக்குப் போகும் சமயங்களெல்லாம் புல்லரிப்பின் சமயங்கள். பூரிப்பின் சமயங்கள். ஆற்றல், துணிச்சல், தெளிவு எல்லாமே அந்தச் சிற்றுாரின் வேப்பமரக் காற்றில் நம்மை சுவீகரிக்கும். குழம்பிய மனசைத் துல்லியமாகத் தெளிவாக்கும் மாயாஜாலத்தை அந்தச் சிற்றுாரின் மண்வாசனை செய்யும்.
ஐநுாறு ஆண்டுகளுக்கு முன் அந்த ஊர் இன்னும் செழிப்பாக, இன்னும் பசுமையாக, இன்னும் சிலிர்ப்பாக இருந்திருக்கக்கூடும். காலப்போக்கில் ஊர் மாறியிருக்கலாம். பிரத்யங்கிரா அம்மையின் அரவணைப்பும், ஆதரமும் அப்படியேதான் இருக்கிறது. அம்மை எப்படி மாறுவாள்? அம்மையின் கருவறை வாசமும், முலைப்பால் நேசமும், தொப்புள் கொடிப் பாசமும் ஊர் உலகம் முழுக்க ஒரே விதமானதுதானே? காலங்கள் மாறும். காட்சிகள் மாறும். கோலங்கள் மாறும். குவலயம் மாறும். சூரியன் மாறும். சந்திரன் மாறும். காற்றும், நீரும் கூட மாறும். என்றைக்குமே மாற்றம் இல்லாத நிரந்தரம். என்றைக்குமே குறைபாடு இல்லாத நிரந்தரம் – தாய்மைக் கதகதப்பு தரும் பிரத்யங்கிரா தேவிமட்டும் தானே?
கருவறைக்கு உள்ளே இருக்கும் அதர்வணக் காளி அவதாரம் மட்டுமா சிலிர்ப்பைத் தரும்? அந்த ஊரை, அந்த ஊரின் மண்ணை, அந்த ஊரின் காற்றை, அந்த ஊரின் வாசனையை, அந்த ஊரின் கதகதப்பை நினைத்தாலே சிலிர்ப்பைத் தரும்.
‘‘இத்தனை ஆற்றலும் உனக்கு மட்டுமா அம்மா?’’
வழக்கம்போல அம்மாவின் பாதத்தில் பூவாகக் கேள்வியைச் சமர்ப்பணம் செய்தேன்.
‘நான் அப்படிச் சொன்னதில்லையே மகளே...என் நீட்சியே பெண்கள். குழந்தைகள். உயிர்கள்... என் நீட்சியே உலகம்...’
‘நீ தான் எல்லாம் எனில் – அமுதமான நீ எப்படி விஷமாக முடியும்? நன்மை ஆற்றல் நீ – எப்படி தீமை ஆற்றலாக முடியும்? மீட்சி ஆற்றல் நீ – எப்படி சூழ்ச்சி ஆற்றலாக முடியும் தாயே? விருப்பு ஆற்றல் நீ –  எப்படி வெறுப்பு ஆற்றலாக முடியும் தாயே’
அம்மை சிரித்தாள். அதுமோனச் சிரிப்பு. அது ஞானச்சிரிப்பு. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த உக்கிரம் அம்மை. மண்ணிலிருந்து விண்ணாகி உயர்ந்து நிற்கும் அம்மை – இந்தத் திருத்தலத்தின் கருவறை தாண்டி – எழுபத்தி இரண்டு அடிகள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறாள். எத்தனை  துாரத்திலிருந்து பார்த்தாலும் அம்மையின் உக்கிரரூபம் தெரிகிறது. அம்மையின் காலடிக்கு அருகில் போய்ப் பணியும்போது நமது வாழ்க்கை எத்தனை சிறிய புள்ளி போன்றது என்பதை உணரமுடிகிறது. நமது இருப்பு எத்தனை சிறிய புள்ளி போன்றது. விண்ணாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி நிற்கும் அம்மையின் அருளின் முன்னால் நாம் ஒரு துகளின் ஆயிரம் மடங்கில் ஒரு சிறு புள்ளியே என்கிற நிதர்சனம் புரிகிறது. நீல வானத்தின் பின்னணியில் பிரத்யங்கரா அம்மையின் திருவுருவம் நம்மை இறுக்கிக் கட்டுகிறது. அம்மை மீதான நமது நெகிழ்ச்சி விண்ணை முட்டுகிறது.
அடடா... பிரத்யங்கிராதேவி காளியானவள். பயங்கரியானவள். உக்கிரமானவள். அக்கிரமக்காரர்களை வேரறுக்கும் ஆதி நெருப்பானவள். கருநீல நிறமானவள். கசக்கும் வேம்பு மரமானவள். ஆற்றலின் திறமானவள். சிவன் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவள் என்பதான சத்தியமானவள். வீரியத்தின் நித்தியமானவள்.
இவை எல்லாம் நான் மட்டும் இல்லை மகளே... ஒவ்வொரு பெண்ணும் என் அம்சம். என் வம்சம். தீமை கண்டால் நீங்களும் ரவுத்திரி ஆக வேண்டும். உங்களுக்குள் சிங்கத்தின் ஆற்றல் இருப்பதை உணருங்கள். உங்களுக்குள் நெற்றிக் கண்ணின் உக்கிரம் இருப்பதை உணருங்கள். உங்களுக்குள் எனது சொரூபம் இருப்பதை உணருங்கள் என்பதாக அம்மையின் வசியமந்திரம் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
கோயிலில் அம்மை கீழ்த்தளத்தில், பாதாளத்தில் இருக்கிறாள். கருநீல மேனியில், சிவப்புப் பட்டாடை சிங்க முகக்காரி. சிம்ம வாஹினியாக நான்கு சிங்கம் பூட்டிய ரதத்தில் பவனி வருகிறாள். எட்டு கைகளில் சூலம் சுமக்கிறாள். கபாலம் சுமக்கிறாள். பாசம் சுமக்கிறாள். டமருகம் சுமக்கிறாள். எல்லாவற்றுக்கும் உச்சமாக நம்மீது கருணை சுமக்கிறாள்.
கூர்மையான சிங்கப் பற்கள் தெரிய, செக்கச் சிவந்த நாக்கு வெளித்தள்ள, நெருப்புத் துண்டங்களான இருகண்களின் ஜொலிப்பில் நம்மைக் கரைக்கிறாள் அம்மை. தீபாராதனை ஜொலிப்பில் அம்மையின் பளபளப்பும் பிரகாசமும் காண இன்னும் நுாறு ஜென்மம் போதாது.
நுாற்றுக் கணக்கில் நெருக்கிக் கட்டப்பட்ட எலுமிச்சை மாலையின் வீச்சு உயிரையே நெக்குருக வைக்கிறது. பூமாலைகள் வாசமும், எலுமிச்சை வாசமும், குங்கும வாசமும், கற்பூர வாசமும், கருவறை வாசனைக்கு ஏங்கிப் பரிதவிக்கும் நமது உயிர் மூலத்தைத் தொடுகிறது.
‘அம்மாதான் எனக்கு தைரியம் குடுத்தா.. அவ தந்த தெளிவு இல்லாம நான் எம் மவளைக் காப்பாத்திருக்கவே முடியாது...’
மகளை அழைத்துக் கொண்டு வந்த ஒரு பெண் எலுமிச்சை மாலை, பட்டாடையைப் பூஜைக்குக் கொடுத்து விட்டுச் சொன்னார்.
‘நீதிமன்றப் படி ஏறுவதுன்னா சுலபமானதா? ஆனா ஒவ்வொரு முறையும் அம்மா வந்து தரிசனம் செய்துட்டுப் போவேன். இப்போ எனக்கு, என் மகளுக்கு, எங்க குடும்பத்துக்கு நீதி கிடைச்சுருச்சு... எதிராளிங்க செல்வாக்கானவங்க.. ஆனா அம்மா சன்னிதானத்துல சத்தியத்துக்குத்தான் செல்வாக்கு அதிகம். அந்த வக்கீலு சம்பளம்கூட வேண்டாம்னுட்டாரு... ஆனா.. மனசு கேக்கல... அம்மாக்குப் புடவை வாங்கி சாத்திட்டேன் இன்னிக்கு..’ என்றார் இன்னொரு பெண்
தவறு செய்தவர்கள் யாராக இருந்தால் என்ன? பிரத்யங்கிரா அன்னை தரும் தீர்ப்பு –  சத்திய நெருப்பு அல்லவா? அதுதான் அம்மையின் கருணைக்கு ஏங்கும் எளியவர்களுக்கான நீதிமன்றம். அக்கிரமங்களை, அநீதியை சூழ்ச்சியைப் பொடிபொடியாக்குபவள் அம்மை.
மனசில் களங்கம் இல்லை. பொய் இல்லை. சூது வாது இல்லை. புரட்டு இல்லை. தப்பு இல்லை தவறு இல்லை என்ற எளியவர்களுக்கான பாதுகாப்புக்கவசம் பிரத்யங்கிரா காளியம்மன். மனமே அம்மைக்கான சக்திபீடம்.
‘‘தவறுகளைக் கண்டு அஞ்சாதே மகளே... சூழ்ச்சியாளர்களின் வெற்றி தற்காலிகமானது. நல்லவர்களின் கண்ணீரும் தற்காலிகமானது.’’ அம்மையின் சிங்க முகம், கோரைப்பற்கள், செக்கச் சிவந்த நாக்கு, சிம்ம வாகனம் எல்லாமே நமக்குள், குருதித் துளிக்குள், செயலுக்குள், வார்த்தைக்குள், சுவாசத்துக்குள் அச்சமின்மையை விதைக்கிறது.
நகரும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்கு உறுதுணையாவது அம்மையின் உக்கிரம்தான். இப்படியான சக்தி உபாசகராக இருந்ததால்தான் பாரதியார் உரக்கச் சொன்னார்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத் துளோரெலாம் நிமிர்ந்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் துாறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிழந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
இப்படியான அச்சமற்ற சுவாசத்தை வழங்குவதற்காக காத்திருக்கிறாள் பிரத்யங்கரா தேவி. அவளை தரிசித்தால் அச்சம் எனும் இருட்டு நம்மை விட்டுப் போகும். சிங்கம் போன்ற ஆற்றல் நமக்குள் இட்டுப் போகும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar