|
அனந்த சரஸ் குளக்கரையிலே தியாகய்யருக்கு ‘ஸ்வர வர்ணம்’ என்ற சங்கீத கிரந்தத்தை தந்து காட்சியளித்தவர் நாரத முனிவர் ஆவார். நாரதரை தியாகய்யர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் அவரே தோன்றி சங்கீத கிரந்தத்தை தரவும் உச்சி குளிர்ந்து போனார் தியாகய்யர். ‘‘ஐயனே..எதிர்பார்த்திராத தரிசனம். இந்த கிரந்தம் எனக்கு கிடைத்த புதையல்’’ என நெகிழ்ந்தார். நாரதரும் தொடர்ந்தார்...‘‘இதை உனக்கு தந்ததன் மூலம் நானும் பெரும் பேறு பெற்றவன் ஆகிறேன் தியாகராஜா.. இந்த கோயிலும், திருக்குளமும் என் தந்தையான பிரம்மதேவரின் யாகத்தில் தோன்றியவை. அவரின் கண்டத்தின்(கழுத்து) அம்சமாக பிறந்த நான் அவர் சாபத்துக்கும் ஆளாகி விட்டவன். என் தந்தை என்னைக் கொண்டு பிரஜா உற்பத்திக்கு ஆசைப்பட்ட போது நான் சம்மதிக்கவில்லை. நான் சம்சார பந்தத்தை விரும்பவில்லை. தன்னிச்சையாக நான் எடுத்த முடிவு என் தந்தைக்கு கோபத்தை ஏற்படுத்தி சாபத்தையும் பெற்றுத் தந்தது. அவை என் பல பிறப்புகளில் கழிந்த போதிலும், இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. அதற்காகவே நான் இந்த அனந்த சரசில் நீராட வந்தேன். வந்த இடத்தில் உன்னைக் கண்டேன். இங்கே வந்து அத்தி வரதனை தரிசிப்பதோடு பிறருக்கு உபகாரமாக எதையாவது செய்திடும் போது அந்த புண்ணிய பலன் நம் கணக்கில் ஏதுமிருந்தால் அவற்றை நீக்கும். அதனாலேயே பிறருக்கு நித்யமும் பயன்படும் விதமாக ஏதாவது செய்வது என் வழக்கம். இந்த அடிப்பைடயில் வால்மீகிக்கு ராமநாமத்தை உபதேசித்தேன். பிரகலாதனுக்கோ கருவில் இருக்கும்போதே அஷ்டாட்சர மந்திரம் உபதேசித்தேன். துருவனுக்கும் விஷ்ணு மந்திர உபதேசம் செய்தேன். உனக்கு இன்று சங்கீத கிரந்தத்தை அளித்திருக்கிறேன்’’ என விளக்கம் அளிக்கவும் தியாகய்யரின் விழிகள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. ‘‘ஐயனே... நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என தோன்றுகிறது. உங்கள் தரிசனம் வாய்த்தது போல் என் பிராணனே வடிவான ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனமும் கிடைத்தால் என்னை விட முக்தன் இருக்க முடியாது’’ என்றார் தியாகய்யர். ‘‘நிச்சயம் விருப்பம் ஈடேறிடும். எப்போது அத்தி வரத தரிசனம் வாய்த்து விட்டதோ அப்போதே பிறப்புக்கான விடுதலை உறுதியாகி விட்டது. மனிதர்கள் கடைத்தேறுவதற்காக மட்டும் அமைந்த தலமல்ல. தேவர்களும் இங்கு வந்து அனந்த சரசில் நீராடி எம்பெருமானின் அருளுக்கு ஆட்படுகிறார்கள். இன்று எனக்கும், உனக்கும் கிட்டியது போல்’’ என்ற நாரதரை, அக்குளக்கரையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் தியாகய்யர். அவரால் பெத்த பெருமாள் கடைத்தேற்றம் பெற்றான். அக்கோயிலிலேயே ராமானுஜர் தொண்டாற்றியது போல் நீர் இறைப்பது, உழவாரப்பணி புரிவது என வரத பக்தனாக மாறினான். அவனது மாற்றம் விலகிய மனைவி, மக்களை அவன்வசம் திரும்பக் கொண்டு வந்து சேர்த்தது. நலம் கிடைக்க காரணமான அத்தி வரதரின் ஸ்துால தரிசனம் அடுத்து எப்போது நிகழ்ந்தாலும் அப்போது வரும் பக்தர்களில் ஆயிரம் பேருக்காவது அன்னம் பாலிப்பது என சங்கல்பம் செய்து கொண்டான். அவனது எண்பதாவது வயதில் அத்தி வரதர் குளத்தை விட்டு திரும்பவும் வெளிப்பட்டு அவனுக்கு காட்சி தந்தார். அவனைப் போல லட்சக்கணக்கானோர் தரிசித்தனர். அவ்வேளையில் தன் சங்கல்பப்படி பக்தர்களுக்கு உணவளித்து பாவங்களுக்கு பெத்த பெருமாள் கழுவாய் தேடினான்.
கலியுகத்தில் அத்தி வரத தரிசனம் என்பது மகத்தான வாய்ப்பு. காட்டில் தவம் புரிந்து புலன்களை அடக்கி நாமத்தைச் சொல்லி அடைய வேண்டிய யாவும் அத்தி வரதனை தரிசிப்பவருக்கு ஒரு நொடியில் வாய்த்து விடும். அதற்காக எனக்கு கோடி வேண்டும், ராஜ்ஜியம் வேண்டும், நான் ராஜாவாக வேண்டும் என்று வியாபார பேரம் போல் பிரார்த்தனை இருத்தல் கூடாது. இந்த வரங்களை எல்லாம் மேலே சன்னதியில் இருக்கும் தேவராஜனிடம் கேட்கலாம். அவன் அதற்குத் தான் இருக்கிறான். அதே சமயம் தகுதி இன்றி அவனிடம் இருந்து சுலபமாக வரங்களை பெற முடியாது. அத்தி வரதன் நம் முக்திக்கு உரியவன். மீண்டும் பிறவாமையை தருபவன். ஒரு மனிதனின் பூரண ஆயுள் காலம் 120 ஆண்டுகள். அந்த இருமுறையில் ஒரு முறை இகத்திற்கானது. மற்றது பரத்துக்கானது. இதற்கு நம் பூர்வ கர்மமும் இடமளிக்க வேண்டும். பூர்வ கர்மம் என்பது முன்ஜென்ம வினைப்பாடுகள். அதில் நாம் ஏழு ஜென்மம் எடுத்து தீர்க்க வேண்டிய கணக்கிருந்தால் அத்தி வரத தரிசனம் வாய்க்காது. அந்த வினைக்கணக்கின் வழியே கிரகங்கள் செயலாற்றி அத்தி வரதனின் நினைப்பே தோன்றாது செய்து விடும். சிலருக்கு தங்கள் வாழ்வில் மூன்று முறை தரிசிக்கும் பேறு கிட்டும். பதினைந்து வயதில் தரிசித்தவருக்கு 55, 95 வயதுகளில் வாய்ப்பு அமையும். அப்படி மூன்று முறை தரிசித்தவர்கள் பலருண்டு. இவர்கள் தங்கள் ஜென்மத்தை கடைத்தேற்றுவதோடு தங்கள் சந்ததிகளுக்கும் அதை உறுதி செய்பவர்கள் ஆவர். நல்ல விதி இருந்தால் ஒருவர் அயல்நாட்டில் அத்திவரதன் பற்றியே அறியாதிருந்தாலும் தரிசனம் வாய்த்து விடும். ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது காஞ்சிபுரத்தில் தங்கினார். அப்போது அத்தி வரதன் குளத்தில் இருந்து வெளிப்பட்டு தரிசனம் தந்து கொண்டிருந்தான். அலை மோதிய கூட்டம் வெளிநாட்டுக்காரரை கவர்ந்தது. கூட்டத்தோடு கூட்டமாக போய் தரிசித்தார். அவர் பொறுத்த வரையில் வரதனை காட்சிப்பொருளாகத் தான் பார்த்தார். ஆனால் அந்த காட்சியே அவரை பெரிதும் மாற்றிட, அதன் பின் திரும்பத் திரும்ப தரிசித்தார். பக்தர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதே காலகட்டத்தில் அத்தி வரதன் கோயிலுக்கு அருகில் குடியிருந்த ஒருவர் விபத்தால் கால்கள் முறிந்த நிலையில் படுக்கையில் கிடந்தார். இவரால் அத்தி வரதரை தரிசிக்க இயலவில்லை. பக்கத்திலேயே இருந்தாலும் தரிசிக்க கொடுப்பினை வேண்டும் என்பதற்கு இவர் உதாரணம் என்றால் வெளிநாட்டுக்காரர் தொலைவில் இருந்தாலும் தரிசிக்க முடிந்தவர் என்பதற்கு உதாரணமாகி விட்டார். இப்படி அத்திவரதன் குறித்து சிந்திக்க எவ்வளவோ விஷயங்கள்! பிரம்மனின் யாகத்தின் போது மூலவராக விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட எம்பெருமானின் திவ்ய ரூபம் யுகங்கள் கடந்து வணங்கப்பட்டு வருவது மகா அதிசயம். சோதனைகளும், வேதனைகளும் நேரிட்ட போதிலும் அத்திவரதனின் மகத்துவமோ, மகாத்மியமோ துளியும் குறையவில்லை. அது குறையவும் குறையாது. மண்டலத்திற்கு ஒருமுறை என்ற தரிசனம் ஒரு தருணத்தில் மாற்றத்திற்கு உள்ளானது. அப்போது ஸ்தானீகராக இருந்த ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். அவருக்கு அத்தி வரதனை தரிசித்து மோட்சம் பெற வேண்டும் என்பது விருப்பம். ஆனால் வரதன் வெளிப்பட நான்கு ஆண்டு காலம் கணக்கில் இருந்தது. முதியவரான அவர் அனந்த சரசுக்குள் இறங்கி வரதன் கிடக்கும் பேழையாவது தரிசிக்க வேண்டும் என மூச்சடக்கி நீந்திப் பார்த்தார். முடியவில்லை. அவரது பக்தியைக் கண்டு மனம் இரங்கிய வரதன் கோயிலின் பிரதான ஸ்தானீகர், பட்டர் இருவரின் கனவிலும் தோன்றி அந்த ஆண்டே தான் வெளிப்பட விரும்புவதாக கூறினான். அவர்களும் அத்தி வரதனை தரிசனத்திற்கு ஆட்படுத்தினர். அந்த நாளை கோயில் உதயபானு மண்டபத்தில் கல்வெட்டாக பொறித்து வைத்தனர். அந்த வகையில் 1781 ஜூலை 30, தமிழ் பிலவ ஆண்டில் வரதர் காட்சியளித்ததை அறிய முடிகிறது. இரண்டாம் சரபோஜி மன்னரின் ஆட்சிக்காலமான அந்த நாளில் பத்து லட்சம் மக்கள் தரிசித்தனர். இன்று போல போக்குவரத்து வசதிகளோ, சாலை வசதிகளோ அன்று கிடையாது. ஆனாலும் மாட்டு வண்டி, குதிரைகள் மீது பயணித்தும், கால்நடையாகவும் காஞ்சிக்கு வந்தனர். நெடுந்தொலைவில் இருந்து வந்து உடனே ஊர் திரும்ப மனம் வருமா? எனவே காஞ்சியிலேயே தங்கி தினமும் எம்பெருமானை சேவித்தும், ஆடியும், பாடியும் மகிழ்ந்தனர். சிலர் காஞ்சியை தங்கள் சொந்த மண்ணாக கருதி தங்கியும் விட்டனர். இப்படி தங்கிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்றும் காஞ்சியில் ஆயிரக்கணக்கில் உள்ளனர். கடந்த நுாற்றாண்டில் 1937, 1979 ஆண்டுகளில் அத்திவரதர் குளத்தில் இருந்து வெளிப்பட்டு அனைவருக்கும் அருளாசி வழங்கினான். இந்த இரு தருணத்திலும் எம்பெருமானை தரிசித்த பல சான்றோர்களில் இன்று மூன்றாவது முறையும் தரிசனம் செய்து நம்முடன் இருப்பவர் அகோபில மடத்தின் ஆஸ்தான ஜோதிடர்.ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள். மூன்று முறை ஒருவர் வரதனை தரிசிப்பது என்பது இகம், பரம் கடந்து வைகுண்டத்தில் நித்ய சூரியாக திகழப் போகிறார்கள் என்பதற்கு சான்று. ஒருவர் தரிசனம் செய்யச் செல்லும் போது அத்திகிரி அருளாளன் வரலாற்றை அறிந்த நிலையில் தரிசிப்பது பெரும் மகிழ்வையும், நெகிழ்வையும் தந்திடும். வாழ்க வரதன் புகழ்! வளர்க வைணவ நெறி!! |
|
|
|