|
ஏழைப்பெண் ஒருத்தி கிருஷ்ணரின் பக்தையாக இருந்தாள். துவாரகைக்கு சென்ற அவள், ‘‘ உனக்கு சேவை செய்வதை தவிர வேறு மகிழ்ச்சி இல்லை. எனக்கு ஏதாவது வேலை கொடு’’ என்றாள். அவள் அதிர்ச்சியடையும் விதமாக ஒரு கோணிப்பையை கொடுத்த கிருஷ்ணர், ‘‘நான் செல்லும் இடமெல்லாம் துாக்கி வா! இன்னொரு விஷயம், உன்னைத் தவிர மற்றவர் கண்ணுக்கு இது தெரியாது! என்றார். பக்திப்பூர்வமாக எதையாவது செய்ய நினைத்தால், இப்படி அழுக்கு மூட்டையை சுமக்க விடுகிறாரே! என அவள் வருந்தினாள். சுமக்க சிரமப்பட்ட நேரத்தில் அவ்வப்போது கிருஷ்ணர் கைகொடுத்தார். இப்படியே ஒருமாதம் கழிந்தது. ‘‘நீ சுமந்தது போதும்; மூட்டையை இறக்கி வை’’ என்ற கிருஷ்ணர், ‘‘மூட்டைக்குள் என்ன இருக்கிறது என பார்ப்போமா?’’ என்று சொல்லி சிரித்தார். முடிச்சு தானாக அவிழ்ந்து பொன்னும் மணியுமாக சிந்தியது. பொறுமையுடன் துாக்கிய உனக்கான பரிசு வைத்துக்கொள்! என்றார். ‘‘ மன்னித்துவிடு கிருஷ்ணா! உண்மை தெரிந்திருந்தால் சுமையாக தெரிந்திருக்காது. சுகமாக இருந்திருக்கும்’’ என்று அழுதாள். இப்படித்தான் நமக்குரிய வாழ்க்கையை கடவுள் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார். அதை சுமையாக நினைப்பதும் பொக்கிஷமாகப் பார்ப்பதும் நம் மனதில் தான் உள்ளது. இதை உணர்ந்தால் சுமை சுகமாக மாறும்.
|
|
|
|