Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தன்னையே கொல்லும் சினம்
 
பக்தி கதைகள்
தன்னையே கொல்லும் சினம்


“கண்ண என்ன பொடனிலயா வச்சிருக்க?அறிவு வேணாம்? முன்னாடி கார் போய்க்கிட்டிருக்கறது தெரியுதுல்ல? பாத்து வர வேணாம்? பராக்கு பாத்துக்கிட்டே வண்டி ஓட்டவேண்டியது… முன்னால நிக்கற வண்டில இடிக்க வேண்டியது. . மனுஷனாய்யா நீ? “
நெரிசலான சாலையின் நடுவே நின்றிருந்த அந்தச் சொகுசுக்காருக்குச் சொந்தக்காரர் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்த இருசக்கர வாகன இளைஞன் அழாக்குறையாகக் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவர் விடவில்லை. கெட்ட வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்த ஆரம்பித்தார்.
“அவன் தப்பு செஞ்சிட்டான். யார்தான் தப்பு செய்யல? அதுக்காக இப்படியாக் கத்துவாங்க? கோபத்தக் கட்டுப்படுத்த முடியாதுன்னா உருப்படாமப் போயிருவோம்.”
என மனவோட்டத்தைக் கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது.  என் வண்டிக்கு அருகில் கூடை துாக்கிக்கொண்டு போன ஒரு பெண் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
“அடுத்தவருக்கு அறிவுரை சொல்வது சுலபமப்பா. அதை உன் வாழ்க்கையில் செயலில் காட்டுவதுதான் கஷ்டம். உன் கோபத்தைப் பற்றி எனக்குத் தெரியாதாக்கும்?”
“தாயே!” என்று கதறியபடி வண்டியை விட்டு இறங்கினேன்.
“இன்னும் இரண்டு மணி நேரத்தில் உனக்கு இதே போல் ஒரு சூழ்நிலை உருவாகும். நீ என்ன செய்கிறாய் என்று பார்க்கிறேன்.”
அவள் மறைந்துவிட்டாள்.
அன்று மதியம் ஒரு கல்யாண மண்டபத்தில் விருந்துக்காகச் சென்றிருந்தேன். வாசலில் செக்யூரிட்டி யாரும் இல்லை. காரை அங்கே நிறுத்திவிட்டு அருகே உள்ள கடையில் பரிசுப் பொருள் வாங்க வெளியே சென்றுவிட்டேன்.
திரும்பி வந்தபோது காருக்கு அருகில் ஒரு செக்யூரிட்டி நின்றுகொண்டிருந்தான். என்னையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். கார் அருகில் நான் சென்றதும் கத்த ஆரம்பித்தான்.
“என்ன சார் வெளையாடறீங்களா? நீங்க பாட்டுக்கு வந்தீங்க, காரை நிறுத்தினீங்க. கைய வீசிக்கிட்டுக் கெளம்பிட்டீங்க.  நானும் உங்களக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க திரும்பியே பார்க்கல. இத உங்க சொந்த வீடுன்னு நெனச்சிட்டீங்களோ?”
புசுபுசுவென்று வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு பேசினேன்.
“நான் இந்த மண்டபத்துக்குத்தான் வந்திருக்கேன். இன்னிக்கு சாயங்காலம் நடக்கப்போற திருமண வரவேற்பு சம்பந்தமா மதியம் விருந்துக்குக் கூப்பிட்டிருக்காங்க.”
“இந்த வெவரத்த எங்கிட்ட சொல்லிட்டு வெளிய போகலாம்ல?”
அதற்குமேல் என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொங்கிவிட்டேன்.
“செக்யூரிட்டின்னா கதவுகிட்ட இருக்கணும். உள்ள நுழையற வண்டிய வாசல்லயே நிறுத்தி வெவரம் கேக்கணும். அதவிட்டு உள்ள எங்கேயோ கதை பேசிக்கிட்டு இருந்துட்டு ஒரு மணி நேரம் கழிச்சிக் கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?  ”
“ஆமா இவரு பெரிய விஐபி. உங்கள வரவேற்க நாங்க வெயில்ல காய்ஞ்சிக்கிட்டு வெளிய நிக்கணும் பாருங்க!”
நான் இன்னும் பெரிதாகக் கத்தினேன். அவனும் கத்தினான். நல்ல வேளை யாரோ வந்து கைகலப்பு நடப்பதைத் தவிர்த்தார்கள். எப்படியோ உள்ளே போய்விட்டேன். நிகழ்வில் கலந்துகொண்டேன். நண்பர்கள், உறவினர்களிடம் சிரித்துப் பேசினேன். ஆனால் மனதில் அமைதியில்லை. அந்த செக்யூரிட்டி ஆசாமியைக் கொலை செய்தால் என்னவென்று ஆத்திரம் வந்தது.
விருந்து உண்ண அமர்ந்திருந்தேன். சுவையாகத்தான் இருந்தது. எனக்குத்தான் பிடிக்கவில்லை.  
“ஊருக்குத்தான் உபதேசம் போலருக்கே!” குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். சாதம் பரிமாறுபவள் வேடத்தில் சக்தி நின்றுகொண்டிருந்தாள்.
“எல்லோரும் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். உன் மனதில் இனம்”
“பேசாமல் அந்த ஆளைக் கொன்றுபோட்டால் என்னவென்று தோன்றுகிறது, தாயே!”
“ஏனப்பா. சாதம் சாப்பிட்டு அலுத்துப்போய்விட்டதோ? களி தின்ன வேண்டுமென்று ஆசையோ?”
கைகூடக் கழுவாமல் எழுந்து நின்று அவள் காலில் விழுந்தேன்.
“உன்னைவிட அதிகமாக அவன் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறான். பாவம் அவனால் வெயிலில் அதிக நேரம் நிற்கமுடியாது. சில நிமிடங்கள் நிழலில் நிற்கலாம் என்று அவன் உள்ளே வந்த நேரத்தில் நீ வண்டியை நிறுத்திவிட்டுப் போய்விட்டாய். உனக்குச் செல்வாக்கு இருக்கிறது. அவனுடைய மேலதிகாரியிடம் நீ புகார் செய்தால் அவனுடைய வேலை போய்விடும். அதை நினைத்து அவன் இன்னும் பதட்டப்பட்டுக்கொண்டிருக்கிறான். அவனுக்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் எல்லாம் இருக்கிறது..”
“நான் என்ன செய்ய வேண்டும், தாயே!”
“சூழ்நிலையை விளக்கிச் சொல்லிவிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். ஆனால் ஒரு விஷயம். இனிமேல் அடுத்தவர் கோபப்படும்போது அவர்களுக்கு அறிவுரை சொல்லாதே. அதற்கு உனக்கு யோக்கியதை இல்லை.”
அன்னை மறைந்துவிட்டாள்.
நான் மண்டபத்தை விட்டு வெளியேறியபோது அவன் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாசலில் நின்றுகொண்டிருந்தான். நேராக அவனிடம் சென்றேன். அவன் கைகளை அழுந்தப் பற்றிக்கொண்டேன்.
“என்னை மன்னித்துவிடுங்கள். நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. முழுத் தவறும் என் மேல்தான். நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக இப்படி வெயிலில் நிற்கவேண்டாம். உள்ளே நில்லுங்கள். கதவைப் பார்த்தபடி நில்லுங்கள். யாராவது வந்தால் ஓடி வந்து விசாரியுங்கள். சரியா? மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்கிறேன்.”
“மன்னிப்புங்கறது பெரிய வார்த்தை சார். நீங்க அதெல்லாம் கேக்கக் கூடாது. நடந்தத மறந்துட்டேன் சார். சந்தோஷமா போயிட்டு வாங்க சார்.”
காரில் அவனைக் கடந்து சென்றபோது விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தான். அன்புடன் ஏற்றுக்கொண்டேன்.
இது நடந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. அன்று அதே கல்யாண மண்டபத்திற்கு ஏதோ ஒரு விவரம் கேட்கப் போகவேண்டியிருந்தது. கார் உள்ளே நுழையும்போது செக்யூரிட்டி ஓடி வந்து வணக்கம் சொன்னான். ஆறுமாதங்களுக்கு முன்னால் சண்டைபோட்ட அதே ஆள். வண்டியை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு வந்தபோது என் கையைப் பிடித்துக்கொண்டு பேசினான்.
“நீங்க சத்தம் போட்டதும் நல்லதாப் போயிருச்சி சார். பாத்தீங்களா? நான் உக்கார வசதியா ஒரு கட்டடம் கட்டிக் கொடுத்திருக்காங்க. நல்லாக் காத்தோட்டமா இருக்கு சார். நீங்க நல்லா இருக்கணும் சார். உங்களுக்கு என்ன வேலைன்னு சொல்லுங்க சார். நானே உள்ளே போய் முடிச்சிக் கொடுக்கறேன்.”
வேலையை முடித்துக்கொண்டு மண்டபத்தைவிட்டு வெளியே வந்தபோது ஒரு பெண் காரை நிறுத்தினாள். நான் சுதாரிப்பதற்குள் சுவாதீனமாக முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்
“நடந்ததைப் பார்த்தாயா? முதலில் கோபத்தில் கத்தினாய். அதனால் அவன் காயப்பட்டான். நான் சொன்னதைப் புரிந்து கொண்டு கவுரவம் பார்க்காமல் அந்த மனிதனிடம் மனம் உருகி மன்னிப்புக் கேட்டாய். நீ மட்டும் அன்று அதைச் செய்திருக்கவில்லையென்றால் அவனுடைய உடல் நலம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். உன் சினம் அவனை அழித்திருக்கும். அந்தப் பாவம் உன்னைப் பாடாய்ப் படுத்தியிருக்கும்.  நீ மன்னிப்பு கேட்டது அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது. அதனால்தான் அவன்  உன் பக்க நியாயத்தை புரிந்து கொண்டு தன் மேலதிகாரிகளிடம் பேசினான். அவர்கள் உடனே அவனுக்கு வசதியாகக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டார்கள். அவன் பணிக்காலம் முடியும் வரை நிம்மதியாக வேலை பார்ப்பான் உன்னை நன்றியுடன் நினைத்துக்கொண்டிருப்பான்.
“உனக்கு ஏதாவது வரம் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன். “
“ஒன்று போதாது, தாயே! இரண்டு வேண்டும்.”
“பேராசைக்காரனப்பா நீ! சரி, முதல் வரமாக, உன்னை நாடி வருவோரின் துன்பத்தைத் தீர்க்கும் வல்லமையைக் கொடுக்கட்டுமா?”
“வேண்டாம் தாயே! என்றென்றும் உங்கள் கொத்தடிமையாக இருக்கும் பேற்றைக் கொடுங்கள். அதுவே முதல் வரம்.”
“இரண்டாவது...’’
“என்னால் அடுத்தவருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் யாரும் துன்பப்படக்கூடாது என்ற வரத்தைக் கொடுங்கள். என்னைத் துன்புறுத்துபவர்களைக்கூட நான் மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக்கூடாது என்ற என்ற வரத்தை உங்களிடம் யாசிக்கிறேன், தாயே!”
வெள்ளிக்காசுகளைத் தரையில் கொட்டிவிட்டதைப்போல் அன்னை கலகலவென்று சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar