|
மங்கலம் நிறைந்த புராணமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது வடிவேலனின் வரலாறு. பார்வதி கல்யாணத்தில் ஆரம்பமாகும் கந்த புராணம் தெய்வயானை, வள்ளி திருமணத்தில் நிறைவு பெறுகிறது ‘‘புராணங்களின் நிறைவு கல்யாணமாக அமையும். கந்தபுராணத்தில் முதலும், முடிவும் கல்யாண வைபோகம் தான். இந்திராணி, ரதிதேவிக்கும் மாங்கல்யத்தைப் பொலியச் செய்த புராணம் இது. கந்த புராணத்தை படிப்பவர்களும், கேட்பவர்களும் சவுபாக்கியம் பெறுவர். மனதில் நினைக்கும் கோரிக்கை நிறைவேறும். முருகப்பெருமானின் வரலாறை கேட்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வர்’’ என்கிறார் கிருபானந்த வாரியார். இந்திரர் ஆகிப் பார்மேல் இன்பமுற்று இனிதுமேவி சிந்தையில் நினைந்த முற்றி சிவகதி அதனிற்சேர்வார் அந்தமில் அவுணர்தங்கள் அடல் கெடமுனிந்த செவ்வேள் கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்து ஓதுவாரே! என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். கயிலாயத்தில் தொடங்கும் கந்தபுராணம் கயிலாயத்திலேயே நிறைவு பெறுகிறது. அகில உலகங்களையும் இயக்கும் சிவபெருமானும், அம்பிகையும் கயிலாய மலையில் வீற்றிருந்தனர். பொன்னால் செய்த பிரம்பைக் கையில் ஏந்தியபடி நந்திதேவர் கைலாய மலையைக் காவல் புரிந்து கொண்டிருந்தார். முப்பத்து முக்கோடி தேவர்களும், நான்முகன், திருமால், சித்தர்கள், முனிவர்கள், அஷ்ட திக்கு பாலகர்கள் வணங்கி மகிழ்ந்தனர். இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் என பலவிதமான வழிபாடுகளால் வெள்ளியங்கிரி விளங்கியது. வணங்குபவர்களின் வழிபாடுகளும், தும்புரு, நாரதர், கந்தர்வர் முதலியோரின் சங்கீதங்களும் நிறைவுற்றது. அம்மையும் அப்பனும் ஏகாந்தமாக இருந்த நேரத்தில் மனதில் ஏதோ எண்ணியபடி வணங்கினாள் அம்பிகை. ‘வைகறையில் முதல் வணக்கம் உன்னுடையது தானே! இப்போது எதற்கு இரண்டாவது வணக்கம்?’’ கேட்டார் சிவன். ‘‘வரம் ஒன்று எனக்கு தர வேண்டும். அதுவும் இப்போதே வழங்க வேண்டும் ஐயனே!’’ ‘‘பதினாறு பேறுகளையும் பக்தர்களுக்கு வரங்களாக வழங்கும் உனக்கா வரம் வேண்டும்?’’ ‘‘ஆம்...சுவாமி! இப்போது என் பெயர் ‘தாட்சாயணி’ என்று தானே இருக்கிறது. ‘தட்சனின் மகள்’ என்ற அர்த்தம் கொண்டுள்ள அவப்பெயர் நீங்கி, வேறிடத்தில் என் அவதாரம் நிகழ வேண்டும். தங்களை நிந்தனை செய்த தட்சன் என் தந்தை என்பதை நினைத்தாலே மனம் கூசுகிறது. தாங்களே இதமான மருந்து கொடுத்து இதயப் புண்ணை ஆற்ற வேண்டும்.’’ ‘‘தேவி! கொடுமைகள் அகன்று நன்மைகள் தழைக்கத் தானே உன் கோரிக்கை என்பதை அறிவேன். பர்வதராஜனான மன்னர் இமவான் உன்னை மகளாக அடைய வேண்டும் என தவமிருந்து வருகிறான். பர்வதராஜனின் புதல்வியாக அவதரித்து ‘பார்வதி’ என பெயர் பெறுவாயாக! ஐந்து வயதாகும் வரை இமவானிடமும், அவன் மனைவி மேனையிடமும் வளர்ந்துபின் என்னை நோக்கித் தவத்தில் ஈடுபடு. தக்க தருணத்தில் ஆட்கொள்கிறேன்! சிவபெருமானின் உத்தரவு கிடைத்ததும் அம்பிகையின் உருவம் காற்றில் கரைந்தது. இமய மலையில் அழகிய தடாகம் ஒன்றும், அதில் ஆயிரத்தெட்டு இதழ்கள் கொண்ட தாமரை பூத்திருந்தது. அந்த தாமரையும் தோற்கும் அழகுடன் தாட்சாயணி என்னும் அம்பிகை அதில் குழந்தையாகத் தவழ்ந்தாள். சிவனை விட்டு சிறிது நேரம் கூட பிரியாதவள் தட்சனுடைய மகள் என்னும் அவப்பெயர் நீங்க வேண்டுமென கணவனைப் பிரிந்து கைக்குழந்தையாகித் தவழ்ந்தாள். அப்பகுதியில் தவம்புரிந்த இமவான் காலைப்பொழுதில் அங்கு வந்தான். குழந்தையின் அழுகுரல் கேட்டது. தடாகத்தில் பூத்திருக்கும் தாமரை மலர் மீது இன்னொரு தாமரையாக இளம்குழந்தை! தவம் பலித்தது என்று தணியாத ஆசைடன் குழந்தையை எடுத்து உச்சி முகர்ந்தான். மேனை – அவன் மனைவி. அனைத்துக் குணநலன்களும் வாய்ந்த அழகரசி. அடுக்கி வைக்க ஆயிரம் பொருட்கள் இருந்தாலும் அதைக் கலைத்து விளையாட மழலைச்செல்வம் இல்லையே என்ற மனக்குறைதான் அவளுக்கு. ‘சிவன் நமக்குத் தந்த வரம் இந்த வரலட்சுமி’ என சொல்லி முடிக்கும் முன்பே குழந்தையை வாரி அணைத்தாள் . ‘என்னைக் கலி தீர்த்தே – உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! இன்பக் கதைகள் எல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வதண்டோ? மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல் வைர மணிகள் உண்டோ? என குழந்தையை உச்சி முகர்ந்து மெச்சினாள். மலையரசனாகிய இமவானின் மகள் என்ற பொருளில் ‘பார்வதி’ என பெயர் சூட்டி வளர்த்தனர். ஐந்து வயதானதும் எண்ணும், எழுத்தும் கற்பிக்க நல்ல நாள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர் பெற்றோர். ஆனால் மகளோ அடம் பிடித்தாள். ‘எனக்கு தவச்சாலை அமைத்துக் கொடுங்கள்; சிவபெருமானை நோக்கி தவம் செய்யப் போகிறேன்’ என்றாள். அவதார ரகசியத்தை இமவானும், மேனையும் அவ்வளவு சீக்கிரத்தில் அறிய முடியுமா என்ன? சிவநிந்தனை செய்த தட்சனின் மகள் என்னும் அவப்பெயர் நீங்கியது. பார்வதி என்ற சிவப்பெயர் பதிவாகி விட்டது. அம்பிகை கேட்ட வரம் பலித்து விட்டது. இனியும் நாதனைப் பிரிந்து எத்தனை நாட்கள் இமய மலையில் இருப்பது? சிவனோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்று எண்ணிய பார்வதியின் விருப்பப்படி தவச்சாலை அமைக்கப்பட்டது. தன் வயதில் இருக்கும் சிறுமியர் பலர் சூழ்ந்திருக்க தவத்தை தொடங்கினாள் பார்வதி. நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! – என பார்வதி ஓதிய மந்திரத்தை இமயமலைச் சிகரங்கள் எதிரொலித்தன!
|
|
|
|