|
கும்பகோணத்தில் மளிகைக்கடை நடத்தியவர் குமரேசன் செட்டியார். அவர் மனைவி சிவகாமி ஆச்சி. குழந்தை இல்லாததால் சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்தனர். எந்த பணியில் ஈடுபட்டாலும் அவர் உதடுகள் ‘சிவ சிவ’ என்னும் திருநாமம் ஜபித்தபடி இருக்கும். தினமும் காவிரியில் நீராடி விட்டு, சிவன் கோயில்களுக்கு சென்ற பின் மனைவி சமைத்ததும் அன்னதானம் செய்வார். ஒருநாள் மழை பெய்ததால் யாரும் உணவு கேட்டு வரவில்லை. மகாமக குளக்கரை அருகே சாமியார் ஒருவர் தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். அவருக்கு அன்னதானத்திற்கு அழைத்தார். கணவர் சாமியாருடன் வருவதைக் கண்ட சிவகாமி, ‘‘ஐயா! தங்களுக்கு பிடித்த காய்கறியை சொன்னால், உடனடியாக சமையலை தொடங்குவேன்’’ என்றார். பதிலளிக்காமல் காய்கறிகள் விளையும் கொல்லைபுறம் நோக்கி நடந்தார் சாமியார். அங்கே கீரைகள் நன்றாக வளர்ந்திருந்தன. ‘கீரைத்தண்டு சாம்பாரும், முளைக்கீரை கூட்டும் சமைத்தால் போதும்’ என்றார். உடனே குமரேசனும் கீரை பறிக்க பாத்தியில் இறங்கினார். சாமியாரும் அவருக்கு உதவ முன்வந்தார். அங்கு நின்றிருந்த சிவகாமி இருவர் பறித்த கீரைகளை தனித்தனியாக வாங்கினார். இரண்டையும் தனித்தனி பாத்திரங்களில் சமைத்து, சாமியார் பறித்த கீரையை மட்டும் சிவபெருமானுக்கு நைவேத்யம் செய்தார். இதைக் கண்ட சாமியாருக்கு பெருமை பிடிபடவில்லை. தான் பறித்த கீரைக்கு முக்கியத்துவம் தரவே, இப்படி செய்வதாக கருதினார். சாப்பிட அமர்ந்த சாமியார் இது பற்றிக் கேட்ட போது, ‘‘ஐயா! என் கணவர் சிவ நாமம் சொல்லி பறித்ததால் முளைக்கீரை அப்போதே சிவனுக்கு அர்ப்பணமாகி விட்டது. அதனால் நைவேத்யம் செய்யவில்லை. நீங்கள் மவுனமாக கீரை பறித்ததால் நைவேத்யம் செய்ய வேண்டியதாயிற்று’’ என விளக்கினார். தம்பதியரின் சிவபக்தி முன்னர் துறவு ஒன்றும் பெரிதல்ல என நெகிழ்ந்தார் சாமியார். சிவனடியார்களான இந்த தம்பதியர் ஒரே நாளில் உயிர் விட்டது கண்டு ஊரார் அதிசயித்தனர். 1938ல் கும்பகோணத்தில் வாழ்ந்த இவர்கள் செய்த அன்னதானம் பற்றி காஞ்சிமகாபெரியவர் பெருமையாக குறிப்பிடுவார்.
|
|
|
|