கிருஷ்ணகிரியை ஒட்டிய குருகும்லாபுரத்தைச் சேர்ந்தவர் கிரிதேவர். இவர் தன் குருநாதரின் உத்தரைவை ஏற்று திருவண்ணாமலையில் உள்ள மடத்தில் சிவபூஜை செய்து வந்தார். தினமும் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பூஜைக்குரிய தீர்த்தத்தை மண்பாத்திரத்தில் எடுத்து வருவார். ஒருநாள் மண் பாத்திரம் கை தவறி விழுந்து உடைந்தது. மடத்தில் வேறு பாத்திரமும் இல்லை. அப்போது ‘‘கிரிதேவா! கவலை வேண்டாம். தீர்த்தத்தை கைகளில் அள்ளிக் கொள். அதைக் கொண்டு அபிேஷகம் செய். பாத்திரம் கொண்டு அபிேஷகம் செய்வது போலவே அது காட்சியளிக்கும்’’ என அசரீரி ஒலித்தது. கிரிதேவரும் அப்படியே செய்தார். அன்று முதல் ஊர் மக்கள் அவரை ‘பாணி பாத்திர சுவாமி’ என அழைக்கத் தொடங்கினர். ‘பாணி’ என்றால் ‘தண்ணீர்’ என்பது பொருள். ஒருநாள் மடத்திற்கு பக்தர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு உணவு தயாரிக்க பணமில்லை. அவருக்கு உதவிட தண்ணீர் பாத்திரத்தில் தங்கக் காசுகள் வரவழைத்தார் அண்ணாமலையார். அதன் மூலம் அவர்களுக்கு உணவிட்டார். கன்னட சிவாச்சார மரபைச் சேர்ந்த இவரது மடம் திருவண்ணாமலை பாணிபாத்திர தேவர் மடம் என அழைக்கப்படுகிறது.
|