|
இமவானும், மேனையும் இமை கொட்டாமல் தங்களின் மகள் செய்யும் தவத்தைக் கண்டு மகிழ்ந்தனர். ‘‘மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்’’ என்றபடி பார்வதியும் காந்தம் போல தியானத்தில் ஆழ்ந்தாள். மண்ணுலகில் பார்வதி தவம் நிகழும் அதே வேளையில், விண்ணுலகில் சிவபெருமானும் தவம் மேற்கொள்ளும் சூழல் உருவானது. ஏன் தெரியுமா? நான்முகனான பிரம்மாவுக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என நான்கு புதல்வர்கள். நான்கு வேதங்களிலும் கரை கண்டவர்கள் இவர்கள். ‘கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு’ என்பார்கள். ஆனால் இவர்கள் கற்றது உலகளவு. நால்வரும் ஒருமுறை சிவபெருமான் முன்னிலையில் வணங்கி நின்றனர். ‘பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னை திரிபுரங்கள் தீயெழ திண்சிலை கைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே! ‘‘சிவபெருமானே! நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என அனைத்தும் அறிந்த தங்களிடம் விளக்குவது அதிகபட்சம் தான். இருந்தாலும் விண்ணப்பிக்க வேண்டியது கடமை அல்லவா! நாங்கள் படிக்காத புத்தகங்கள் இனிமேல் பதிக்கப்பட வேண்டிய புத்தங்கள் தான். அவ்வாறே கேட்காத விரிவுரைகளும் இனிமேல் நிகழ்த்தப்பட வேண்டியவை தான்! கசடறக் கற்றோம். காதாரக் கேட்டோம். தங்களின் முன்னிலையில் தற்பெருமையா என எண்ணாதீர்கள். சகலமும் அறிந்தும் எங்களின் மனம் சஞ்சலப்படுகிறது. அலைபாயும் மனதை நிறுத்தும் ‘மனோ மவுனம்’ என்னும் மகத்தான நிலை அடைய எண்ணுகிறோம். அதற்கு தங்களிடம் உபதேசம் பெறவே வந்துள்ளோம்! நால்வரின் கோரிக்கையை கேட்ட சிவபெருமான் புன்னகைத்தார். கல்லால மரத்தடியில் தெற்கு திசை நோக்கியபடி அமர்ந்து சைகையாலேயே அவர்களுக்கு தட்சிணாமூர்த்தி என்னும் பெயரில் உபதேசம் செய்தார். ‘‘கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறங்கம் முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்! தட்சிணாமூர்த்தியான சிவன் விரல்கள் மூலம் விளக்கிய விஷயம் என்ன? கட்டை விரலை ஆள்காட்டிவிரல் தொட்டுக் கொண்டிருக்க மற்ற மூன்று விரல்கள் பிரிந்திருக்க ‘ஞான முத்திரை’ வழியே மவுனமாக பாடம் சொல்லத் தொடங்கினார். ஐந்து விரல்களில் கட்டை விரல் தான் கடவுள்! எப்படி தெரியுமா? ஒன்றாகி, உடனாகி, வேறாகி விளங்குவதே கடவுள் தத்துவம். ஐந்து விரல்களில் ஒன்றாகவும், அதே சமயத்தில் தனித்தும் இருப்பது கட்டைவிரல். எந்த பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் கட்டைவிரலின் துணையின்றி செயல்பட முடியாது என்பதைக் காட்டுவது கட்டைவிரல். மனிதர்களைச் சுட்டிக் காட்ட உதவும் ஆள்காட்டி விரல் உயிரைக் குறிக்கிறது. ஐந்து விரல்களில் உயரமானது நடுவிரல். நானே உயர்ந்தவன் என்பதால் நடுவிரல் ஆணவம். மோதிரம் அணிந்து கொள்ளும் விரல் கன்மம் அதாவது நல்வினை, தீவினையை குறிப்பது. சுண்டு விரல் மாயை என்னும் நிலையாமையை குறிக்கும். கடவுளோடு உயிர் சேர வேண்டுமானால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றும் விலக வேண்டும் என்பதே சின்முத்திரை சொல்லும் செய்தி! பிரம்மாவின் புதல்வர்கள் நால்வரும் பேரின்பத்தின் உச்சத்தை உணர்ந்தனர். புலன்கள் ஒரு புள்ளியில் சங்கமிக்க சிவயோக சமாதியில் சங்கமித்தனர். ‘‘ஞானங்கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடண்டி நமசிவய வரையேறி நாவின்ப ரசமதான ஆனந்த அருவி பாய நாதங்களொடு குலாவி விளையாடி ஊனங்கள் உயிர்கள் மோத நான் என்பதறிவிலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும் ஓர் அந்தம் மருவி ஞான மாவிஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலமதாட அருள் தாராய்!’’ சிவனும், சீடர்கள் நால்வரும் சித்திரம் போல ஆடாமல் அசையாமல் மோன நிலையில் மூழ்கினர். அந்த நேரத்தில் பிரம்மா, திருமால், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசித்தனர். எது பற்றி தெரியுமா? ‘விண்ணுலகமாகிய இங்கும் தவம்! பூலோகத்தில் பார்வதியின் தவம்! அப்படியானால் எப்படி தீரும் நம் துன்பங்கள்?’ முதல்வனான சிவனை விலக்கி அவருக்கு உரிய அவிர் பாகத்தை வழங்காமல் யாகம் நடத்தினான் தட்சன். ஆடம்பரம் மிக்க அவனது அலங்காரங்களில் மயங்கி நாமும் அதில் பங்கேற்றோம். அந்த தீவினையே இப்போது சூரபத்மன் வடிவில் நம்மை துன்பப்படுத்துகிறது. தீவினை தீரும் வரை பொறுமை காக்கத் தான் வேண்டும். ‘‘ என்னிடம் புதல்வன் ஒருவன் தோன்றுவான். அவனால் அசுரர் குலம் அடியோடு அழியும். தேவலோகம் நன்மை பெறும். திருமுருகன் அவதரித்தால் அற்புதங்கள் நிகழும்’’ என முன்பே சிவன் நமக்கு உறுதி அளித்துள்ளார். இப்போது பரமசிவன் ஒரு பக்கம். பார்வதி மறு பக்கம் என தனித்தனியே தவமிருந்தால் பாலகன் தோன்றுவது எப்படி? நம் துன்பம் தீர்வது எப்படி என்று பிரம்மா, திருமால், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் யோசனையில் மூழ்கினர்.
|
|
|
|