Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காம ஆட்சி காமாட்சி
 
பக்தி கதைகள்
காம ஆட்சி காமாட்சி

‘எத்தனை ஓய்வாக உட்கார்ந்திருக்கிறாய் தாயே.. இடது கையில் கரும்பு வில்... வலது கையில் மலர்ந்த தமரை.. கூடுதலாகக் கிளி. பச்சைப் பட்டாடை. மாலை அலங்காரம். பாச அங்குசம், பத்மாசன நிலையில் கவலையின்றி உட்கார்ந்திருக்கிறாய் நீ... உன் பிள்ளைகள் நாங்கள் மட்டும் நிற்காமல், உட்காராமல், உண்ணாமல், உறங்காமல், பேசாமல், சிரிக்காமல் ஓட்டமும் நடையுமாக இருக்கிறோமே... என்னதான் செய்வது அம்மையே...’
மனசு வெதும்பி கேட்டேன் காஞ்சி காமாட்சியிடம். இன்னமும் அதிகமாகப் புன்னகைத்தாள்.
‘‘அது எப்படி தாயே. ஊர் முழுக்க ஒற்றைப் பெண்ணரசியாக நீயே இருக்கிறாய்? உன் நிம்மதியின் ரகசியம் என்ன தாயே? சந்தோஷத்தின் ரகசியம் என்ன தாயே?’
என் அறியாமைக் கேள்வி நீண்டது. காஞ்சி காமாட்சி அம்மன் அழகி, பேரழகி, உலக அழகி, பிரபஞ்ச அழகி, காலாகால அழகி, யுகாந்திர அழகி, புன்னகை அழகி, கருணை அழகி, காருண்ய அழகி இப்படி எத்தனையோ நீளமாய்ச் சொல்லலாம்.
எத்தனை சொன்னாலும் வார்த்தைகளின் போதாமைதான் புலனாகிறது. இன்னமும் சொல்லி முடிக்க முடியாத, இன்னமும் சொல்லித் தீராத அழகின் முழுமை அவள். முழுமை அழகி அவள்.
ஐம்பத்தொரு சக்தி பீடங்கள், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்னும் முப்பெரும் சக்தி தத்துவம், பந்தகாசுரன் என்னும் அசுரனை அழித்துத் தலையைக் கொய்த தேவி, கருணைக் கடலாகவும் இருக்கிறாள். பதினெட்டு கைகளில் ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாகவும் இருக்கிறாள்.
ஆக்ரோஷ ஆட்சியும் அவளே.... சாந்தம் மிக்க காமாட்சியும் அவளே... இப்படி இரு துருவ வேறுபாடு கொண்ட தத்துவம் எப்படி புரியும்?  அதை உணரும் மெய் ஞானம் நமக்கு உண்டா?
காமாட்சி மீது துர்வாச முனிவர் இரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம். பரசுராமர் ஆயிரத்து ஐநுாறு பாடல்கள் பாடியிருக்கலாம். ஆதிசங்கரர் ஐநுாறு பாடல்கள், தவுமி ஆச்சார்யார் ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம். ஆனால் இன்னும் பாடித் தீராதவள் அவள்.
இத்தனை பாடல்களிலும் இருப்பவள். இந்தப் பாடல்களைத் தாண்டியும் இருப்பவள். ‘தாயே’ என்ற ஒற்றை வார்த்தையிலும் ஒடுங்கி இருப்பவள். ‘காமாட்சி’ என்ற கடல் வார்த்தையிலும் விரிந்து இருப்பவள். அடடா... ஆஹா.. எத்தனை தத்துவங்களைத் தன்னுள் இருத்தியிருக்கிறாள்? தானே தத்துவமாகி இருக்கிறாள்? தானே தத்துவத்தை விட்டு விலகியும் இருக்கிறாள்.
கண்களில் கருணை நிறைந்தவள் காமாட்சி அல்லது காமத்தை ஆட்சி செய்து, தன் கட்டுக்குள் கொண்டு வந்தவள் காமாட்சி எனலாம். தர்க்கங்களும், வியாக்கியானங்களும், பாடல்களும், துதிகளும் அம்மைக்கு புல்லரிப்பும் புளகாங்கிதமும் தருமா? அப்படி புகழ்ச்சியில் சிலிர்ப்பவளா அம்மை? இல்லையே.. எல்லாமே நம் மனசுக்காக. நிம்மதிக்காக. சந்தோஷத்துக்காக.
மனநல மருத்துவரிடம் போகாமல் நம்மைக் காக்கின்ற மாமருந்து அவள்.  உடல்நல மருத்துவரிடம் போகாமல் காக்கின்ற கருணை மருந்து அவள்.  குடும்பநல ஆலோசகரிடமோ, வழக்கறிஞரிடமோ போகாமல் காக்கும் தராசுத் தத்துவம் காமாட்சி அம்மன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட திருத்தலம் காஞ்சிபுரம். தொண்டை மண்டலத் தலைநகர். அதிலும் சிறப்பாக, ‘நகரங்களுள் காஞ்சி’ என திரும்பிய திசையெல்லாம் திருக்கோயில்கள். பட்டுச் சேலைகளின் தாய் வீடு. கர்நாடக இசையின் மும்மூர்த்திகள், பாபநாசம் சிவன் பாடிய அருள் பிரதேசம். எல்லாம் சரிதான். இத்தனை பரபரப்புக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லாத தோரணையால், பத்மாசனமிட்டு அம்மை அமர்ந்திருப்பது ஏன்? எல்லாவற்றையும் வெறுமனே வேடிக்கை பார்க்கும் சத்திய சாட்சியாக இருப்பது தான் அம்மையின் தத்துவமா?
நமது ஆசைகள், விருப்பங்களை நிறைவேற்றும் காம ஆட்சி காமாட்சி. தங்க கோபுரத்தின் ஆனிப்பொன் வெளிச்சம் சூரிய ஒளியால் இன்னமும் தகதகக்கிறது. காற்றும், வெளிச்சமும், கதம்ப வாசமும், குங்கும நேசமும் ஒருசேர மனசை நெகிழ வைக்கிறது. தெப்பக் குளத்தில் நீர் நிறைந்திருந்ததே மனசுக்கு நிறைவு அளிக்கிறது. நுாறுகால் மண்டபம் பார்க்க நுாறுகண்கள் கிடைத்தாலும் போதாது என்னும் ஏக்கம் மனசில் எழுகிறது.
மவுனத்தின் துணையோடு ஏதேதோ சிந்தனைகள் எழுந்தன. எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை பாதங்கள் இந்தப் பிரகாரத்தில் நடந்திருக்கும்? எத்தனை கோடிக் கண்கள் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கடந்திருக்கும்? எத்தனை ஆயிரம் கைகள் அம்மையின் அருளை யாசித்திருக்கும்? எத்தனை ஆயிரம் கவலைகளும், ஆசைகளும் தீர்ந்ததும், அம்மையின் கருணையை யோசித்திருக்கும்? கோடிகோடியாய்க் காமம் சூழ, வாழ்வதாகப் பெயர் பண்ணும் நம்மால் காமகோடி காமாட்சித் தாயின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளத்தான் முடியுமா?
பந்தகாசுரன் பந்தம் என்னும் அசுரன். இடியாப்பச் சிக்கல் மாதிரி பந்தத்துக்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். அதனால் விளையும் நெருப்புச் சூழலிலிருந்து ‘என்னைக் காப்பாற்று’ என அம்மையிடம் முறையிடுகிறோம். நம் காலில், கையில், கண்ணில், சொல்லில், செயலில், சிந்தனையில் எத்தனை எத்தனை அரூபக் கட்டுகளும், இரும்பு வளையங்களும் நம்மைச் சுற்றி நாமே போட்டிருக்கிறோம்?
மீண்டும் மீண்டும் வலி என்னும் கடலுக்குள் மூச்சடைத்து மூழ்குகிறோம். வேதனை என்னும் கடலுக்குள் மூச்சடைத்து மூழ்குகிறோம். இதிலிருந்து விடிவு காலமே இல்லையா? வேறேதும் தீர்வு இல்லையா என ஏங்குகிறோம்?
‘மனசு அலை பாயாம என் கையப் புடிச்சிக்கிட்டு வா! இல்லேன்னா விழுந்துடுவ...’
அங்குமிங்கும் ஓடிய மகளிடம் ஒரு பெண் சொல்வது காதில் விழுந்தது. அட...இதுதானே காமாட்சி அம்மன் தரும் அசரீரி வாக்கு. பத்மாசனத்தின் நிச்சலனம் எப்படி கை கூடும்? சூழலின் தாக்கத்தை என்னுள் ஆக்கிரமிக்க விடமாட்டேன் என்று தாமரை மலர் மூலம் சொல்கிறாள் அம்மை. சேற்றில் மலரலாம். முளை விடுகிற இடம் சேறும் சகதியுமான அஞ்ஞானக் குளமானாலும் அதிலும் மலரலாம். மலர்ச்சிதான் தாமரைப்பூவின் அடையாளம் என்பதற்காகவே அம்மையின் கையில் தாமரை.
மனசுக்குள் சேறும், சகதியும் கொட்டிக் கிடப்பவர்கள்தான் நாம். நிர்மலமான மனசு வாய்க்க ஓராயிரம் வாசலும், வழியும் காணக் கிடைத்தாலும், இருட்டுப் பள்ளத்தில் உழலுவதையே மனசு விரும்புகிறது ரகசியமாக. அதுவும் காமாட்சிக்குத் தெரியும். அதனால் தான் தாமரை ஆசனம். சேற்றிலும் முழுமையின் உச்சமான தாமரை ஜீவிப்பதே நமக்கான சேதி.
பிறப்பு, இருப்பு, வாழ்க்கை, வார்த்தை, காதல், காமம், இல்லறம், தாம்பத்யம், துறவு, துறவின்மை, பூமி, பிரபஞ்சம் என எல்லாம் தான். சேற்றில்தான் நாம் இருந்தாக வேண்டும். இதிலிருந்து தப்பித்தலோ, தவிர்த்தலோ கிடையாது. ஆனால் தாமரையாக மனசை மலரச் செய்யலாம். ஏதோ ஒரு கீற்று, ஏதோ ஒரு நல்ல குணம், ஏதோ ஒரு வார்த்தை, ஏதோ ஒரு செயல். நமது அடையாளமாக வேண்டும்.
எத்தனை புயல் அடித்தாலும் சரி. எத்தனை எரிமலை வெடித்தாலும் சரி. ‘‘என் இயல்பு இதுதான்’’ என்பதாக ஒன்றைச் சிக்கெனப் பிடித்து நம் மனசுக்குள் இருக்கும் அசுரனை அழிப்பதே காமாட்சி தத்துவம். அசுரன் மார்பில் ஒரு காலும், கழுத்தில் ஒரு காலும் வைத்துத் தலையைக் கொய்தல் என்பதே காமத்தை நிர்மூலமாக்கிய காமாட்சி தத்துவம்.
 பற்று, ஆசைகள் இவற்றின் மீது கொண்ட காமத்தால் இந்த வாழ்க்கை நமக்கு ஏற்பட்டது. வாழ்க்கை அசுரனாக, சேறாக  இருக்கட்டும். சேறும் நாம் தான். அசுரனும் நாம் தான். ஒருத்தருக்கு சந்தனமாக இருக்கும் நாம், வேறொருவருக்கும் சேறாக இருப்போம். ஒருத்தருக்கு தேவதையாக இருக்கும் நாம் வேறொருவருக்கு அசுரனாக இருப்போம். எந்த நிலையில் இருந்தாலும் மனசு அன்றலர்ந்த பூவாக சலனமில்லாத பத்மாசனமாக இருப்பதே காஞ்சி காமாட்சி சொல்லும் ரகசியம். பட்டு நிலத்தின் மகாராணி அவள். நம் மனசு பட்டுப் போகமாலிருக்கச் சொல்லும் மகாராணி அவள். தாமரைப்பூ பட்டாக இருப்பதே அம்மையின் பிள்ளைகள் நாம் என்பதன் அடையாளம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar