|
காட்டிலுள்ள மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தினான் பக்தன் ஒருவன். ஒருநாள் மரம் வெட்டும் போது காட்டில் கிழட்டு நரி ஒன்றைக் கண்டான். அதற்கு கால் ஊனமாக இருந்தது. இது எப்படி மிருகங்களை வேட்டையாடும் என எண்ணி ஆச்சரியப்பட்டான். அப்போது புலி உறுமும் சத்தம் கேட்டது. பயந்து போன விறகு வெட்டி அருகில் நின்ற மரத்தில் ஏறினான். மான் ஒன்றை வேட்டையாடிய வந்த புலி, அதை தின்பதற்காக வந்தது தெரிந்தது. மானின் மாமிசத்தை புசித்து விட்டு மீதியை அப்படியே விட்டு சென்றது. புலி சென்றதை உறுதி செய்து விட்டு, மீதி மாமிசத்தை சுவைத்தது நரி. இதைக் கண்ட விறகுவெட்டி, கால் இல்லாத நரிக்கு படியளக்கும் சிவபெருமான், பக்தனான எனக்கு உணவளிக்க மாட்டாரா என்ன? நான் ஏன் கஷ்டப்பட்டு விறகு வெட்ட வேண்டும் என கோடரியுடன் வீட்டுக்கு வந்தான். ஆனால் யாரும் அவனுக்கு உணவளிக்கவில்லை. ஒருவேளை என் பக்தியை சிவபெருமான் உணரவில்லையா என எண்ணி இரவு சிவன் கோயில் வாசலில் அமர்ந்து வேண்டினான். ‘‘கால் இல்லாத நரிக்கு உணவளிக்கிறாயே! எனக்கு மட்டும் ஏன் உணவளிக்கவில்லை?’’ என அழுதான். அப்படியே கண் அயர்ந்து துாங்கி விட்டான். அவனது கனவில் தோன்றி, ‘‘காட்டில் இருந்த நரியிடம் இருந்து பாடம் கற்றது உன்னுடைய மூடத்தனம். தனக்கு தேவையானதை உழைத்து அடைவதோடு, தனக்கு மிஞ்சியதை பிறருக்கும் கொடுக்க வேண்டும் என புலியைப் பார்த்து நீ கற்றிருக்க வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை வைப்பதோடு முதலில் உன்னை நீ நம்ப வேண்டும்’’ என்று சொல்லி மறைந்தார் சிவபெருமான். கண்விழித்த விறகு வெட்டி இனிமேல் தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்வேன் என சபதமிட்டு நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
|
|
|
|