Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கவிஞனின் இன்பங்கள்
 
பக்தி கதைகள்
கவிஞனின் இன்பங்கள்

 புகழ் பெற்ற திரையிசைக் கவிஞனின் அறையில் நான் அமர்ந்திருந்தேன். புத்தகங்கள், படங்கள் என்று அறையெங்கும் கவிதை மணம் கமழ்ந்தது. என்னை ஏன் இங்கு வரவழைத்தான்?
என் முன் அமர்ந்திருந்த கவிஞனுக்கு 35 வயதிருக்கும். வேட்டி, ஜிப்பாவில் அழகாக இருந்தான். அழகு, புகழ், கவிதை புனையும் ஆற்றல், மணமாகாதவன் –  பெண்களெல்லாம் இவனை மொய்த்து விடுவார்களே!
‘‘கடவுளை நம்பாதவன் நான். என்னிடம் கவிதை இருக்கிறது. செல்வம் இருக்கிறது. பெண்கள் என்மேல் வந்து விழுகிறார்கள். தினமும் ஒரு பெண்ணோடு சுகித்திருக்கிறேன். மது அருந்துகிறேன். யாரையும் ஏமாற்றவில்லை. யாரையும் துன்புறுத்தவில்லை. நியாயமாகச் சம்பாதித்த பணத்தை என் சுகங்களுக்காகச் செலவழிக்கிறேன். நான் இன்பம் துய்த்தால் என்ன? சிற்றின்பச் சேற்றில் சிக்காதே; பேரின்பமே நிலையானது என ஆன்மிகவாதிகள் சொல்கிறார்களே. ஏன்? என் வாழ்க்கை முறை தவறா?’’
கவிஞனின் பெண் உதவியாளர் எனக்குப் பழச்சாறு கொண்டு வந்தாள்.
‘‘இதை அருந்துங்கள். ஐந்து நிமிடத்தில் வருகிறேன்.’’
கவிஞன் வெளியேறியதும் அந்தப் பெண் உதவியாளர் என் தலையில் கை வைத்தாள்.
‘‘உன்னை இங்கு வரவைத்ததும் நானே. இவனிடம் பேச வைப்பதும் நானே. நீயே உன் அறிவைப் பயன்படுத்தி பதில் சொல்லப்போவது போல் கவலைப்படுகிறாய்?’’
‘‘தாயே!’’ பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
‘‘மனம் அன்பால் நிரம்பியிருக்கட்டும். நான் ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு உள்ளே வருவேன். அதுவரை நீ பேசாதே. அப்புறம் நான் பார்த்துக்கொள்கிறேன்.’’
கவிஞன் திரும்பி வந்தான்.
‘‘பதிலை யோசித்துவிட்டீர்களா?’’
‘‘இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.’’
மீண்டும் அந்தப் பெண் உதவியாளர் வந்தாள்.
‘‘ஐயா... பால்காரர் முன் பணம் கேட்கிறார்.’’
‘‘எவ்வளவு?’’
‘‘பத்து லட்சம். அவர் மகளுக்குத் திருமணம் வைத்திருக்கிறாராம். பால் ஊற்றிக் கழித்துவிடுவேன் என்கிறார்’’
‘‘மாதம் பால் செலவு எவ்வளவு ஆகிறது?’’
‘‘எட்டாயிரம் ரூபாய்’’
‘‘முன் பணத்தைக் கழிக்கப் பத்து வருடம் ஆகுமே! அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் கொடுங்கள். கல்யாணத்திற்குப் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய் தரலாம்.’’
எனக்கு மட்டும் கேட்கும்படி ‘ம்.. ஆரம்பமாகட்டும்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள் பச்சைப்புடவைக்காரி.
‘‘முடிந்த வரையில் துாய தமிழில் பேசுங்கள்.’’ என்றான் கவிஞன்.
‘‘கவிஞரே!  இந்த உலகில் இலவசம் என்று எதுவுமில்லை. பால்காரரிடம் காசு கொடுத்துத்தான் பாலை வாங்குகிறீர்கள். அதேபோல் உங்கள் உயிர்ச்சக்தியை விலையாகக் கொடுத்துத்தான் இன்பங்களை வாங்குகிறீர்கள்.
‘‘பால்காரர் கேட்ட முன் பணத்தை ஏன் தர மறுத்தீர்கள்? குறுகிய காலத்தில் அந்த அளவுக்கு அவரால் பால் கொடுக்க முடியாது என்பதால்தானே?  அதேபோல் நீங்கள் உங்கள் உயிர்ச்சக்தியை  எவ்வளவு கொடுத்தாலும் குறிப்பிட்ட அளவுதான் இன்பங்களை அனுபவிக்க முடியும். குறுகிய காலம் மட்டுமே அனுபவிக்கும் சாதாரண இன்பங்களுக்காக விலைமதிப்பில்லாத உங்கள் உயிர்ச்சக்தியை  விலையாகக் கொடுப்பது புத்திசாலித்தனம் ஆகுமா? பால்காரர் விவகாரத்தில் காட்டிய புத்திசாலித்தனத்தை உங்கள் ஆன்மிக வளர்ச்சியில் காட்ட மறுக்கிறீர்களே?’’
‘‘எனக்குக் கடவுள், ஆன்மா, முற்பிறவி இதில் எல்லாம் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. எனக்கு சொர்க்கம், மோட்சம், ஞானம் எல்லாம் தேவையில்லை. நான் இப்படியே மது, மாது என்று சுகமாக வாழ்ந்துவிட்டுப் போகிறேனே!’’
‘‘நீங்கள் இப்போது எட்டாம் வகுப்பு படிக்கிறீர்கள். நீங்கள் அமரும் இருக்கை வசதியாக இருக்கிறது. வகுப்பறை உங்களுக்கு மிக பிடித்திருக்கிறது. கூடப் படிக்கும் நண்பர்களை, வகுப்பு ஆசிரியரைப் பிடித்திருக்கிறது. அதற்காக வாழ்க்கை பூராவும் எட்டாவது வகுப்பில் இருப்பீர்களா? ஒன்பது, பத்து என மேல் வகுப்புக்கு முன்னேற மாட்டீர்களா? ‘‘
கவிஞன் திகைத்தான்.
‘‘உங்கள் வாழ்க்கை முறையில் பெரிய ஆபத்தும் இருக்கிறது.  அளவோடு மது, தினமும் ஒரு பெண் என்று நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை விரைவில் திகட்டி விடும். உங்கள் தேடல் இன்னும் தீவிரமாகும். அடுத்த கட்ட இன்பத்திற்குப் போகவேண்டும் எனத் துடிப்பீர்கள். இந்தத் தேடலாலும், துடிப்பாலும்தான்  பிரபலங்கள் பலர் போதை மருந்து, ஊசிக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். நீங்களும் அப்படி தொலைக்கப் போகிறீர்களா என்ன?’’
கவிஞன் அதிர்ந்தான்.
‘‘பேசாம காவி டிரஸ் போட்டுக்கிட்டு சாமியாராயிரட்டுமா?’’ வெறுப்புடன் சொன்னதால் அவனது துாய தமிழ் தொலைந்ததை கவனித்தேன்.
‘‘வச்சாக் குடுமி; செரைச்சா மொட்டைங்கிற மனப்போக்கு வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா வாழ்க்கை முறையை மாத்திக்கங்க.
‘‘முதல் படியா ஒரு நாள்ல ரெண்டு மணி நேரமாவது மத்தவங்க மீது எப்படி அன்பாக இருப்பதுன்னு யோசியுங்க. யாருக்கு எந்த மாதிரி உதவி செய்ய முடியும்னு பாருங்க. மத்த நேரத்துல நீங்க மது, மாதுவோட இருங்க. உங்க மாதிரி கவிதை எழுதும் திறமையும், செல்வச் செழிப்பும் யாரோ ஒருவருக்குத்தான் வாய்க்கும். இதை வச்சு ஊருக்கு எப்படி நல்லது செய்ய முடியும்னு யோசிங்க. முக்கியமா உங்க வாழ்க்கையில  அர்த்தமுள்ள உறவுகளைத் தேடுங்க. திருமணம் செஞ்சிக்கலாம். அது வேண்டாம்னா குழந்தையை தத்தெடுத்து வளக்கலாம். நல்ல நண்பர்களைத் தேடலாம். மனித உறவுகள்லதான்  மகத்தான பாடத்தை கத்துக்க முடியும். அப்போதான் தினமும் மது, மதுங்கற இந்த எட்டாம் வகுப்பைத் தாண்டி மேல போகலாம்.  படிப்படியா மேல போய் ஒருநாள் பச்சைப்புடவைக்காரியின் காலடியைச் சேருவீங்க.’’
சொன்ன போது நாக்கைக் கடித்துக் கொண்டேன். இவன் நாத்திகனாயிற்றே! இவனிடம் அன்னையின் பெயரைச் சொல்லிவிட்டேனே!
‘‘ஒண்ணு சொல்லட்டுமா? நீங்க பச்சைப்புடவைக்காரியை நம்பாமல் இருக்கலாம். ஆனா உங்களை முழுசா அவ நம்பறா. அதனாலதான் இப்படி கவிதை புனையும் ஆற்றல் கொடுத்திருக்கா. செல்வச் செழிப்போட வாழ வச்சிருக்கா. எல்லாத்தையும் கொடுத்தவ சீக்கிரம் கடவுள் நம்பிக்கையைக் கொடுக்கட்டும்.’’
கவிஞன் அமைதியாக இருந்தான். அவனுக்கு கண்ணீர் அரும்பியது. முகத்தில் அசாதாரணத் தெளிவு. பேச்சில் மீண்டும் துாய தமிழ் மலர்ந்தது
‘‘அந்த நம்பிக்கையை பச்சைப்புடவைக்காரி ஏற்கனவே கொடுத்துவிட்டாள். ஊரில் உள்ளவர்களின் லாபம், நட்டக் கணக்குகளோடு உழன்று கொண்டிருக்கும் உங்களை வைத்தே மகத்தான உண்மையைப் புரிய வைத்திருக்கிறாள் என நினைக்கும் போது  அழுகை வருகிறது.’’
‘‘அழுங்கள். உங்கள் கண்ணீரை பச்சைப்புடவைக்காரிக்குக் காணிக்கையாக்குங்கள். அவள் உங்களை எந்தச் சமயத்திலும் கைவிடமாட்டாள். அதற்கு நான் உத்தரவாதம்’’
பத்து நிமிடம் கழித்து கவிஞனிடம் விடைபெற்றேன். வீட்டு வாசலில் பெண் உதவியாளர் நின்றிருந்தாள். விழுந்து வணங்கினேன்.
‘‘நன்றாகப் பேசினாயப்பா. சரியான வழிகாட்டுதல். அவன் நிலை உயர்ந்துவிடும். நீ செய்த நல்வினையின் காரணமாக உனக்கு ஒரு ஊழிக்காலம் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் தருகிறேன்.
‘‘தாயே...உங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?’’
‘‘என்னப்பா சொல்கிறாய்?
‘‘கவிஞனுக்கு பதவி உயர்வு. அவனுக்குப் புரிதலைத் தந்த எனக்கு பதவியிறக்கமா?’’
‘‘பதவியிறக்கமா?’’
‘‘நடிக்காதீர்கள் தாயே! கையில் கிளி தாங்கிய ஒரு கோலக்கிளிக்குக் கொத்தடிமை என்ற மிக உயர்ந்த பதவியை வகிக்கிறேன். சொர்க்கம் என்பது என்னைப் பொருத்தமட்டில் பதவியிறக்கம்தான். சொர்க்க போகம் என்ற சேற்றில் என்னைத் தள்ளிவிடாதீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்.’’
அன்னை கலகலவென சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar