|
ஒருமுறை கடவுள் மனிதர்களுக்கு காட்சியளித்து வரம் தர விரும்புவதாக தெரிவித்தார். அங்கிருந்த பத்து பேர் ஒவ்வொருவராக விருப்பத்தை தெரிவித்தனர். ‘‘பெரிய பிஸினசும், கை நிறைய பணமும் வேண்டும்’’ என்றான் முதல் மனிதன். இரண்டாம் மனிதன், ‘‘ அதிகாரம் மிக்க பதவியை அடைய வேண்டும்’’ மூன்றாம் மனிதன், ‘‘ நடிகராகி மக்கள் மத்தியில் புகழுடன் வாழ வேண்டும்’’. நான்காவதாக நின்ற பெண், ‘‘அழகியான என்னைக் கண்டு உலகம் மயங்க வேண்டும்’’ இப்படி அவர்களுக்கு வரம் அளித்தபடி வந்தார் கடவுள். ஆனால்
கடைசி நபர் மட்டும் தயங்கியபடி, ‘‘கடவுளே! நிம்மதி, மன நிறைவுடன் நான் வாழ வேண்டும்’’ என்றான். அதைக் கேட்ட அனைவரும் சிரித்தபடி, ‘‘ விருப்பம் நிறைவேறினால் மனநிறைவு வந்து விடுமே?’’ என கிண்டல் செய்தனர். அப்போது கடவுள், ‘‘ என்னிடம் வரம் பெற்றவர்கள் இங்கிருந்து கிளம்பலாம்’’ என சொல்லி விட்டு பத்தாம் நபரிடம், ‘‘நீ மட்டும் சற்று நேரம் காத்திரு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது. சிறிது நேரம் கழித்து வருகிறேன்’’ என சொல்லி அங்கிருந்து புறப்பட்டார். பத்தாம் நபருக்கு கடவுள்
என்ன தரப் போகிறாரோ என வரம் பெற்றவர்கள் அறிய விரும்பினர். பத்தாம் நபர் மீது பொறாமை ஏற்படத் தொடங்கியது. வரத்தை மறந்து விட்டு மன நிம்மதியை இழந்தனர்.
ஆனால் பத்தாம் நபர் பொறுமையுடன் காத்தான். தன்னிடம் கடவுள் பேசப் போகிறார் என்ற எண்ணத்தால் மனம் நிறைவு ஏற்பட்டது. நீங்கள் தான் அந்த பத்தாவது மனிதனா? இல்லை பத்தாது (போதாது) என்னும் மனிதனா? எண்ணமே நம் வாழ்வைத் தீர்மானிக்கிறது. பேராசை ஒழிந்தால் நிம்மதி என்னும் பொக்கிஷம் கிடைக்கும்.
|
|
|
|