|
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்தான் கர்ணன். ‘‘தந்தையே...என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டும் என பாரதப் போரில் ஈடுபட்டேன்.
ஆனால் என்னை தந்திரமாக கிருஷ்ணன் கொன்று விட்டான்’’ என வருந்தினான்.
‘‘செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் தான். ஆனால் அதையும் விட விசேஷ தர்மத்தின் வடிவாக இருப்பவன் கிருஷ்ணன். ‘‘க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்’’ என்றே சொல்வர். விசேஷ தர்மத்துக்கும், சாமான்ய தர்மத்துக்கும் முரண்பாடு வரும் போது விசேஷ தர்மத்தையே நாம் ஏற்க வேண்டும்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது தர்மம் என்றாலும் விஷ்ணு பக்தனான பிரகலாதன் தன் தந்தை இரணியனின் பேச்சைக் கேட்டானா? இல்லையே... நரசிம்மர் என்னும் விசேஷ தர்மத்தை அல்லவா ஏற்றான்!
விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி செலுத்தும் சாமான்ய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமான ஸ்ரீராமனைச் சரணடைந்தான். தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின் வரத்திற்கு பரதன் உடன்பட்டானா?
சாமான்ய தர்மங்களை பின்பற்ற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் முரண்பாடு வரும் போது விசேஷ தர்மத்தையே ஏற்க வேண்டும்.
அந்த வகையில் கிருஷ்ணனே அனைத்து தர்மத்திற்கும் ஆதாரமான விசேஷ தர்மம் என்பதை உணர்ந்து கொள்’’ என்றார்.
தர்மமே வடிவமான மகாவிஷ்ணுவுக்கு ‘வ்ருஷாகபி:’ என்று பெயருண்டு. ‘வ்ருஷாகபயே நமஹ’ என ஜபித்து வழிபட்டால்
முரண்பட்ட சூழலில் சரியான முடிவு எடுக்கும் சக்தி கிடைக்கும்
|
|
|
|