|
ராமரின் முன்னோர்களில் ஒருவரான அம்பரீஷ மகாராஜா ஏகாதசி விரதத்தை அக்கறையுடன் மேற்கொள்வார். விரதம் முடிந்ததும் பக்தர் ஒருவருக்கு அன்னமிட்ட பின்னர் தான் உணவருந்துவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த போது கோபக்காரரான துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரை தன்னுடன் சாப்பிட அழைத்தார் மகாராஜா. நதியில் நீராடி அன்றாட பூஜையை முடித்துவிட்டு வருவதாக கிளம்பினார் துர்வாசர். நீண்ட நேரமாகியும் வரவில்லை. ஏகாதசி திதி முடிய சில நிமிடமே இருந்ததால் அம்பரீஷருக்கு என்ன செய்வது என தெரியவில்லை. துர்வாசரை விட்டு விட்டுச் சாப்பிட்டால் கோபம் கொள்வாரே என வருந்தினார். சாப்பிடாமல் போனால் திதி முடிந்து விடும் என்பதால் பெரியவர்களின் ஆலோசனைப்படி சிறிது துளசி தீர்த்தம் குடித்து விரதத்தை முடித்தார். இதையறிந்த துர்வாசர், தன்னை மதிக்காமல் விரதம் முடித்த அம்பரீஷன் மீது பூதம் ஒன்றை ஏவினார். அது அவரைக் கொல்ல கிளம்பிற்று. உடனே மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் அங்கு தோன்றி பூதத்தைக் கொன்றதோடு துர்வாசரைத் துரத்த தொடங்கியது. பிரம்மாவைச் சரணடைய சத்தியலோகத்திற்கு ஓடினார் துர்வாசர். சக்கராயுதத்தை தன்னால் தடுக்க முடியாது என்றார் பிரம்மா. அதன் பின் சிவபெருமானிடம் செல்ல, அவரும் சக்கரத்தை தடுக்கும் உரிமை தனக்கு இல்லை என மறுத்தார். இறுதியில் வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். ‘‘ ஏகாதசி விரதமிருக்கும் அடியவர்களை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை. ஆகையால் அம்பரீஷனிடமே மன்னிப்பு கேட்டால் நன்மை கிடைக்கும்’’ என்றார் மகாவிஷ்ணு. ஏகாதசி விரதத்தின் மகிமையை உணர்ந்த துர்வாசர் உடனே பூலோகம் திரும்பினார். அம்பரீஷரின் கருணையால் உயிர் தப்பினார்.
|
|
|
|