|
அவளுடையது நந்தவனம். கவிதை வனம். அவளை சக்தி என்று சொல்லலாமா? கவிஞர் என்று சொல்லலாமா? தேவி என்று சொல்லலாமா அப்படியும் சொல்லலாம். ஆனால் அவளுக்கு பெண் தெய்வங்களுக்கு இருப்பது போல ஆறு, எட்டு, பன்னிரண்டு கைகள் எல்லாம் இல்லையே... அதனால் என்ன? பரவாயில்லை. இரு கைகளுடன் உன்னதம் பெற முடியும் என மானிடர்களுக்கு உணர்த்தியவள் அவள். கைகளில் ஆயுதம் தாங்காமல் கவிதை தாங்கிய சக்தி. எழுதுகோல் தாங்கிய சக்தி. கவிதையும், கற்பனையும், பாக்களும், அழகியலும் சக்தி அருளுவது என்பது உண்மையானால், சக்தியின் அருளை முழுவதுமாகப் பெற்று மற்றவருக்கும் முக்தி திசையைக் காட்டுபவள் நிச்சயமாக மாபெரும் சக்திதான். அவளது மேன்மை, உன்னதம் கேள்விக்குட்பட்டால் – சக்தி என்ற தத்துவமே கேள்விக்கு உட்படும். சக்தி வழிபாடு மனதை உன்னதமாக்குவது. சன்னதமாக்குவது. உன்மத்தமாக்குவது. இந்த மூன்று படிமநிலையும், பாவனை நிலையும் அவளின் திருத்தலத்தில் நிச்சயமாக நிகழும். ஸ்ரீவில்லிபுத்துார் நந்தவனத்தின் மலர்களை, செடிகளை, கொடிகளை, பசுமையை, வனத்தை, வனப்பை என் உயிர்மூச்சில் நிறைத்தேன். இந்த துளசி வனமே அவள் குழந்தையாக மலர்ந்த இடம். அவளைத் தாங்கிய பூமி. அவளின் பக்தி அனுபவத்தை பெற்ற பூமி. தந்தையான விஷ்ணுசித்தர் வாழ்வின் மூலம் கடவுள் தரிசனம் ஓங்கிய பூமி. ஆண்டாள் கோயில் எப்போதும் எனக்கு தாய்மடி. அந்த தலம், காற்று, சுகந்தம், மலர்மாலை, துளசி, செவ்வந்தி, கிளி, கொண்டை, பச்சைப் பட்டாடை, கண்ணாடி மாளிகை, கிணறு, ஊஞ்சல், திருப்பாவை, நாச்சியார் திருமொழி, ஆடிப்பூரம், பூமித்தாயின் மகள் அந்த ஆண்டாள், என் ஆண்டாள், நம் ஆண்டாள் தானே சக்தியின் அவதாரம். ஸ்ரீவில்லிபுத்துாரின் மண்ணே திருமண்ணாகும். காற்றே உயிர்க்காற்றாகும். ஆண்டாள் கோயில் கோபுரமே வாழ்க்கை கோபுரமாகும். ஆண்டாளின் நந்தவனமே விடியலின் மலர்ச்சியாகும். ஆண்டாளின் தரிசனமே முக்தி; மோட்சம்; வீடு பேறு. ஆண்டாள் கோதை ஆகிறாள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆகிறாள். ஆடிப்பூர அன்னை ஆகிறாள். குழற்கோதை ஆகிறாள். கிளிப்பெண் ஆகிறாள். தமிழ்ப்பேச்சி ஆகிறாள். திருப்பாவை அம்மை ஆகிறாள். சுரும்பார்க் குழற்கோதை ஆகிறாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒற்றைப் பெண்ணரசி ஆகிறாள். கண்ணனை ஆண்டவள் ஆகிறாள். சக்தி ஆகிறாள். தமிழ் ஆகிறாள். ‘‘மாதங்களில் நான் மார்கழி’ என்னும் உயிர் மூலம் ஆகிறாள். ஆண்டாள் கோயிலின் பழமையை, துாண்களின் பிரம்மாண்டத்தை, கோயிலின் விஸ்தீர்ணத்தை எத்தனை முறை தரிசித்தாலும் அலுக்காது. சலிக்காது. மூச்சு விடுதலும், கண் சிமிட்டுதலும் யாருக்காவது விருப்பம் இல்லாமல் போகுமா? அது போன்ற பித்துநிலை ஏற்படக் காரணம் 108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவளின் திருத்தலம் அது. அக்கினி சக்தி உண்டு. ரவுத்திர சக்தி உண்டு. ஆக்ரோஷ சக்தி உண்டு. ஆண்டாள் ஆனந்த சக்தி. பிச்சிநிலை சக்தி. அதனால் அழகின் முழுவடிவமாக ததும்பி நிற்கும் பரமானந்தத்தின் முழுவடிவமாக, பரவசத்தின் முழுவடிவமாக ஆண்டாள் நிற்கிறாள். 11 நிலைகள், 11 கலசங்கள், 196 அடி உயர கோயில் கோபுரம் வண்ணமும், வனப்புமாக நமக்கு உணர்த்துவது என்ன தெரியுமா? நம்முள் குறைந்தது 11 நற்குணங்கள், 11 பெருமைகள் நிறைவதான சிறப்பை நிறைத்துக் கொள்ள வேண்டும். 196 அடி உயரத்துக்கு அடுக்கி வைத்தாலும் குறைவு படாத நல்ல எண்ணங்கள், நல்ல சொற்கள், நல்ல செயல்களால் நம்பிக்கைகளால் பொங்கிப் பூரணமாக வேண்டும். வடபத்ரசாயி கோயில் ஆண்டாள் கோயில், பெரியாழ்வார் நந்தவனம், கண்ணாடி மாளிகை காணக்காண மனம் உருகும். ஆண்டாள் என்னும் பெரும் சக்தியிடம் நெருப்பு இல்லை. ஆக்ரோஷம் இல்லை. ரவுத்திரம் இல்லை. அம்மையின் மென்மையும், மேன்மையும், திருமணக் கனவு காணும் பருவ வயதுச் சிறுமியின் திருவருளாகவே உணரப்படுகிறது. உணர்த்தவும் படுகிறது. ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகை சொல்லும் பிரபஞ்ச ரகசியம் உணர மனப்பக்குவம் வேண்டும். ஆயிரம் வலிகளோடும், குறைகளோடும், வேதனைகளோடும் கண்ணாடி மாளிகையில் நுழைகிறோம். நாம் ஒற்றை உருவமாக நுழைவோம். அங்குள்ள கண்ணாடிகளில் ஆயிரக்கணக்கான உருவங்களாக நம்மை பார்ப்போம். அந்த ஆயிரக்கணக்கான உருவங்களுக்கும் இரண்டு இரண்டு கண்கள். அத்தனை ஆயிரக்கணக்கான கண்களுக்குள்ளும் ஆயிரமாயிரம் பிம்பங்கள். இந்த தத்துவம் எதை உணர்த்துகிறது? நம் மனதில் கோபம், பொறாமை, ஆக்ரோஷம், அகங்காரம் எல்லாம் இருக்கிறது. உள்ளங்கை அளவு இதயத்துக்குள் உருவமே இல்லாத அரூப மனசுக்குள் தான் இவ்வளவு அழுக்குகளும் அடைந்து கிடக்கின்றன. மனசு என்னும் பரணில் பல்லாயிரம் அடைசல்கள், ஓட்டை உடைசல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. ஆயிரம் ஆயிரம் படிமங்களாக மனம் என்னும் படித்துறையில் பாசி படிந்து கிடக்கிறது. அதை சுத்தமாக்கிக் கண்ணாடி போல மனதை களங்கமற்றதாக்கினால் கண்ணாடி அறையின் ஆயிரம் சூரிய வெளிச்சம் நம் வாழ்விலும் விடியும் என்ற தத்துவமே கண்ணாடி அறை. ‘என்னால் இயலவில்லை தாயே... நீயே கதி.. நீயே விதி’’ என்று ஆண்டாளிடம் சரணாகதி அடைந்தால் போதும். ஒற்றை உருவத்தைக் கண்ணாடி அறை ஆயிரம் உருவங்களாக நமக்குக் காட்டுகிறது. நமக்குள் இத்தனை ஆன்ம சக்தி. மனித சக்தி ஒளிந்திருக்கிறது. அதைக் குண்டலினி சக்தியாக மேலேற்று. உன் உயிருக்கு உரமேற்று. உன் முயற்சிக்கு நெருப்பேற்று. நிச்சயமாக வலிகளெல்லாம் உளிகளாகும். மூடிய கதவு திறக்கும் வழிகளாகும். நீ என்பது ஒற்றை நீ அல்ல. உன் பாட்டன், முப்பாட்டன், முன்னோர்கள் என்ற நீண்ட பரம்பரையின் அத்தனை வீர்யமும் உனக்குள் இருக்கிறது. நீயும் முயற்சி என்னும், பயிற்சி என்னும், உறுதி என்னும் மாலையைச் சூட்டிக் கொள். சாதனையோடு ஐக்கியமாவாய். வெற்றியோடு ஐக்கியமாவாய். இந்த வாழ்க்கைத் தத்துவம் தான் கண்ணாடி அறை மூலம் ஆண்டாள் அம்மை சொல்லும் பெண்வேதம். நாச்சியார் கீதை. வாழ்க்கை என்னும் குருேஷத்திரப் போரில் வியூகத்தை எப்படி வெல்ல? இதற்கான சூட்சுமமம்தான் கண்ணாடி அறைத் தத்துவம். மார்கழி தேவியான ஆண்டாள் திருப்பாவை தெய்வமாக, நாச்சியார் சக்தியாக, இல்லத்தரசிகளின் நம்பிக்கையாக, வழிபாட்டு அம்மையாக, சரணாகதித் தாயாக, தமிழின் கதியாக, வாழ்வெனும் நதியாக இருக்கிறாள். அம்மைக்குப் பட்டும், பவளமும் காணிக்கை தர வேண்டாம். எளிய, வலிய துளசி இலை போதும். பாவைத் தமிழ் போதும். ஆண்டாள் கையில் இருக்கும் கிளி சொல்வதைச் சொல்லும் கிளி அல்ல. சுயம் பேசும் கிளி. திருப்பாவை என்றும், நாச்சியார் திருமொழி என்றும் சுயம் பேசிய கிளிதான் ஆண்டாள் அம்மை. கவிதைப் பூக்களால் ஆண்டாள் மட்டும் தான் சக்தி உணர்த்துகிறாள். மார்கழி நோன்பின் தத்துவம் வாழ்க்கைத் தத்துவம். ஆண்டாள் என்னும் பெரும்தெய்வம் – ஏகி, அனேகி என எல்லாமானவள். ஏதுமற்றவள். படிம நாயகி, கவிதைக் கிளி, இந்த மார்கழி மாதம் மட்டுமல்ல எப்போதும் ஆனவள். நம் எல்லோருக்குமானவள்.
|
|
|
|