|
மத்யந்தனர் மகன் மழனுக்கு குருவாக இருந்து வேதங்களைக் கற்றுக் கொடுத்தார். ‘‘தந்தையே! பிறவியில் இருந்து விடுபட்டு கடவுளை அடைய தவம் செய்வது தானே வழி?’’ எனக் கேட்டான் மழன். ‘‘தவம் செய்தால் சொர்க்கம் தான் கிடைக்கும். பக்தியுடன் சிவபூஜை செய்பவர்களுக்கே மறுபிறவி ஏற்படாது. சிதம்பரம் என்னும் தில்லை வனத்தில் குடியிருக்கும் சிவனை வழிபடு. உன் விருப்பம் நிறைவேறும்’’ என்றார். சிவபூஜை செய்வதற்காக மழன் தில்லைவனத்தில் தங்கினான். அங்கிருந்தவர்கள் ‘மழ முனிவர்’ என அவனை அழைக்கத் தொடங்கினர். தினமும் பூப்பறித்து சிவபூஜை செய்யத் தொடங்கினார். பூஜையின் போது ஏதாவது பூ அழுகி இருந்தால் முனிவர் வருத்தப்படுவார். ‘‘அப்பனே! அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் ஏற்படுமே! காலையில் வண்டுகள் பூக்களில் உள்ள தேனைக் குடிப்பதால் பூக்கள் எச்சில் பட்டு விடுகின்றன. இரவில் பறிக்கலாம் என்றால் மரம் ஏற முடியாமல் கால் வழுக்குகிறது. இருளில் கண்கள் தெரிவதில்லை. நல்ல பூக்களை பறிக்க வழிகாட்ட வேண்டும்’’ என சிவனிடம் வேண்டினார். சிவபெருமானும் அவரின் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். ‘‘ வாழ்நாள் முழுவதும் உம்மை பூஜிக்கும் பாக்கியம் வேண்டும். வழுக்காமல் மரம் ஏறும் விதத்தில் புலியைப் போல வலிமையான காலும், கைகளில் நகமும் வேண்டும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் பூக்களை பறிக்க ஏதுவாக இருக்கும்’’ என்றார். சிவனும் அப்படியே வழங்கினார். புலிக்கால் முனிவர் என்னும் பொருளில் மழமுனிவர் ‘வியாக்ர பாதர்’ எனப்பட்டார். இப்படி வியாக்ரபாதர் தினமும் பூப்பறித்து சிவபூஜை செய்த காலத்தில் வைகுண்டத்தில் ஒருநாள் மகாவிஷ்ணுவின் பாரம் தாங்க முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தை கேட்டபோது, ‘‘ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள தில்லை வனத்தில் நடனமாடும் சிவபெருமானை தரித்ததால் மனம் பூரித்தேன். அதனால் தான் என் உடலில் பாரம் அதிகமானது’’ என்றார் மகாவிஷ்ணு. அந்த நடனக் காட்சியை தானும் தரிசிக்க வேண்டும் என ஆதிசேஷன் ஆசைப்பட்டார். மகாவிஷ்ணுவும் அனுமதி அளித்தார். பூலோகத்தில் வாழ்ந்த அத்திரி மகரிஷி, அனுசூயா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிறவியிலேயே ஆன்மிக ஞானம் கொண்ட பதஞ்சலி, தில்லை வனத்தில் வாழும் புலிக்கால் முனிவரைச் சந்தித்தார். இருவரும் சிவபெருமானின் நடனத்தைக் காணும் நோக்கத்தில் தவமிருக்கத் தொடங்கினர். அதற்குரிய நன்னாளும் வந்தது. ஒரு மார்கழி திருவாதிரை அதிகாலையில் பேரொளி ஒன்று முனிவர்களின் கண்ணுக்கு தெரிந்தது. நந்திகேஸ்வரரின் கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடினார். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் அதைக் கண்டு மகிழ்ந்தனர். அவரே சிதம்பரத்தில் நடராஜர் என்னும் பெயரில் கோயில் கொண்டிருக்கிறார்.
|
|
|
|