|
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக பார்வதியுடன் மணம் புரிந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் ஏறினார். இருவரும் கயிலாயம் புறப்பட்டு சென்றனர். அங்கு பொன் ஆசனத்தில் புதுமணத் தம்பதிகள் பொலிவுடன் அமர்ந்தனர். ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமலை வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!’ கடவுளான சிவபெருமானும் மனிதர்களைப் போல சாஸ்திர முறைப்படி சடங்குகள் செய்து அக்னி சாட்சியாக திருமணம் செய்தது ஏன் செய்தார்? மலைஅரையன் பொற்பாவை வாணுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ! உலகறியத் தீ வேளாது ஒழிந்தனனேல் உலகனைத்தும் கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ! வேத நெறியே மேலானது. உலகம் அதனை பின்பற்ற வேண்டும். இதற்கு சிவபெருமானும் விதிவிலக்கு கிடையாது என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம். திருமணம் நடந்து பல நாட்கள் கடந்தும் நம் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையே.... சூரபத்மனை அழிக்க ஒரு வீரன் தோன்றுவது எப்போதோ என இந்திரன் மனம் கலங்கினான். சிவபெருமானின் திருவுள்ளம் என்ன என்பதை அறிய யாரை அனுப்பலாம் எனக் கேட்டார் பிரம்மா. வாயுதேவனை அனுப்பலாம் என்றனர் தேவர்கள். சிவபெருமானை பார்க்க பயந்தான் வாயுதேவன். மன்மதனுக்கு நேர்ந்ததை எண்ணி கலங்கினாலும் சிவனருளால் பிழைத்தானே என ஆறுதல் கொண்டான். கங்கையில் நீராடி மலர்களின் மகரந்தங்களை சுமந்தபடி கயிலாயம் சென்றான் வாயு. ‘பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவி பைங்கடி மயிலை முல்லை மல்லிகை பந்தர் தாவிக் கொங்கலர் மணம் கூட்டுண்டு குளிர்ந்து மெல்லென்று சென்று வாயுதேவனை நில் என்று’ வாயுவை வாசலிலேயே நிறுத்தினார் நந்திதேவர். சிவபெருமானின் எண்ணத்தை அறியவே என்னை இங்கு அனுப்பியதாக தெரிவித்தான் வாயுதேவன். அருள்புரிவதே சிவபெருமானின் ஒரே நிலைப்பாடு. அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வழிபடுங்கள்; ஆராய்ச்சி செய்ய வேண்டாம் என எச்சரித்து அனுப்பினார் நந்திதேவர். ‘‘இவறலும் இகலும் இன்றி யார்க்கும் ஓர் பெற்றித்தாகி அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்கும் சிவனை யாம் வெறுத்தல் குற்றம் சிறந்த நோன்பு இயற்றிடாதே தவறு செய்தனம் என்று எம்மை நோவதே தக்கது என்றார்’’ இதன்பின்னர் தேவர்களை அழைத்த பிரம்மா, ‘‘அவரவர் செய்த நல்வினை, தீவினைக்கு ஏற்ப இன்பம், துன்பத்தை வழங்கும் சிவபெருமானின் நடுவுநிலையை புரிந்து கொள்ளுங்கள். ஆற்றில் வெள்ளம் வந்தாலும் நம்மிடம் உள்ள பாத்திரம் அளவுக்குத் தானே தண்ணீர் எடுக்க முடியும். கிண்ணம் கையில் உள்ளவனுக்கு அண்டா தண்ணீர் எப்படி கிடைக்கும்? செய்த தவறை எண்ணி நோகத் தான் வேண்டும். நாம் அனைவரும் தீர்வு வேண்டி கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிடுவோம்’’ என்றார். கைகளை உச்சியில் குவித்தபடி கயிலைநாதரான சிவபெருமானை வணங்கினர். ‘‘சிவசிவ ஹர ஹர தேவா நமோநம தரிசன பரகதி ஆனாய் நமோநம திசையினும் இசையினும் வாழ்வே நமோநம செஞ்சொல்சேரும் திருதரு கலவிமணாளா நமோநம திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் தம்பிரானே!’’ ‘‘சிவபெருமானே...அசுரர்களுக்கு முடிவு காலமும், தேவர்களுக்கு விடிவு காலமும் ஏற்பட அருள்புரிய வேண்டும். தாங்கள் உங்களுக்கு நிகரான ஒரு மைந்தனை தோற்றுவிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர். ‘ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவம் ஒப்பும் ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி வேதமும் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை நீ தரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்.’ அவர்களின் விண்ணப்பத்தை ஏற்ற சிவபெருமான் தன் ஐந்து முகத்தோடு, மறைந்திருக்கும் ஆறாவது முகமான ‘அதோ முகத்தையும்’ காட்டினார். அந்த ஆறுமுகங்களிலும் நெற்றிக்கண்களைத் திறந்தார். சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என ஐந்து முகங்கள் கொண்ட சிவபெருமானுக்கு, ஞானியரின் கண்களுக்கு மட்டுமே தெரியும் இன்னொரு முகம் உண்டு. அதுவே ‘அதோமுகம்’ எனப்படும். ‘வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி ஐந்து முகத்தோடு அதோமுகமும் தந்து திருமுகங்கள் ஆறாகித் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப’ நெற்றிக்கண்கள் வழியாக வந்த தீப்பொறி விண்ணுலகம் எங்கும் பரவியது. சிவபெருமானின் செயலுக்கு காரணம் தெரியாத தேவர்கள் விழித்தனர். தீயின் வெப்பம் தாங்க முடியாமல் ஆளுக்கொரு பக்கம் ஓடினர். சிவனின் அருகில் அமர்ந்திருந்த பார்வதியும் பயந்து ஓடினாள். அவளின் பாதச்சிலம்புகள் தெரித்து விழுந்தன. ‘அஞ்சாதீர்கள்’ என அபயம் காட்டி ஆறு தீப்பொறிகளையும் தன் முன்னர் வரச் செய்தார் சிவபெருமான். வாயு, அக்னியை அழைத்து, ‘நீங்கள் இருவரும் இந்த தீப்பொறிகளைத் தாங்கி கங்கை நதியில் சேருங்கள். கங்கை அவற்றை சரவணத்தில் சேர்ப்பாள் என்றார். தீப்பொறிகளைத் தாங்கும் வலிமையை உங்களுக்கு வழங்குகிறேன். வாயு, அக்னி இருவரும் விடை பெற்ற பின் தேவர்களை நோக்கி, ‘‘நீங்கள் அனைவரும் இமயமலைச் சாரலில் உள்ள சரவணப் பொய்கைக்கு செல்லுங்கள். அங்கே தீப்பொறிகள் ஆறும் அழகிய குழந்தைகளாக மாறும். அதன்பின் உங்கள் துன்பம் யாவும் தீரும்’’ என்றார். இந்திரன், திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். சரவணப் பொய்கையைச் சூழ்ந்து நின்றனர். ‘‘கடவுளின் திருவிளையாடலை யாரால் அறிய முடியும்... தீப்பொறிகள் என பயந்தோம். ஆனால் அதுதான் அசுரர்களை அழிக்கும் நெருப்பு. நமக்கோ சுவை விருந்தை ஆக்கித் தரும் நெருப்பு. ஜோதி வடிவமாக சிவகுமாரன் அல்லவா தோன்றப் போகிறான்’’ என தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ‘சுருதிப் பொருளே வருக! துணிவே கனலே வருக! கருதிக் கருதிக் கவலைப்படுவார் கவலைக் கடலைக் கடிவாய் வருக! என தேவர்கள் பாடினர்.
|
|
|
|