|
ஒருநாள் மாலையில் காட்டுப்பகுதியில் இருந்த ராமர் கோயிலுக்குச் சென்றார் துளசிதாசர். வழிபாட்டை முடித்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார். தியானம் கலைந்த போது நள்ளிரவு ஆகிவிட்டது. அதன் பின் குடிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் புளியமரம் ஒன்று இருந்தது. அதைக் கடக்கும் போது சருகுகள் காற்றில் பறந்தன. திடீரென சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட துளசிதாசர் பயத்தில் நின்றார். “துளசிதாசா...பயப்படாதே” எனக் குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை. “நான் உன் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்” என்றது அக்குரல் “நீங்கள் யார்” என்று கேட்டார். . “நான் வேதம் கற்ற அந்தணன். வித்தையைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்காத பாவத்தால் பேயாய் அலைகிறேன். பக்தியில் சிறந்த உனக்கு உதவி செய்ய விரும்புகிறேன்” என்றது அக்குரல். “ராமரை நேரில் தரிசிக்க வேண்டும். இதுவே என் விருப்பம்” என்றார் துளசிதாசர். “இது என் சக்திக்கு மீறிய செயல். இருந்தாலும் வழி சொல்கிறேன். நாராயண க்ஷேத்திரம் என்னும் ஊரில் ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது. முதியவர் வடிவில் அனுமன் அங்கு வருகிறார். அவரைக் கண்டால் விருப்பம் நிறைவேறும்” என பதிலளித்தது. “வழிகாட்டியதற்கு நன்றி” என்ற துளசிதாசர் புறப்பட்டார். மறுநாள் நாராயண க்ஷேத்திரம் சென்ற போது ராம பட்டாபிஷேக வர்ணனை நடந்தது. துளசிதாசர் அங்குள்ள கூட்டத்தில் முதியவர் ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். கட்டுமஸ்தான தேகத்துடன் ஒருவர் இருப்பதைக் கண்டார். ‘இவர் தான் ராமபக்தரான அனுமன்’ என மனதில் பட்டது. கூட்டம் கலைந்ததும் துளசிதாசர் அவரைப் பின் தொடர்ந்தார். அவரின் காலைப் பிடித்து, “அஞ்சனை மைந்தரே! என் மீது இரக்கம் காட்டுங்கள். ராம தரிசனத்திற்கு வழிகாட்டுங்கள்” என வேண்டினார். ஆசியளித்த முதியவர்,“சித்திர குகைக்குச் சென்று தங்கினால் ராம தரிசனம் கிடைக்கும்” என்று சொல்லி மறைந்தார். அங்கிருந்து துளசிதாசர், காமத்கிரி மலைப்பகுதியிலுள்ள சித்திரகுகைக்கு சென்றார். அங்கு குடில் அமைத்து ராமனை வழிபட்டு வரத் தொடங்கினார். ஒருநாள் கனவில் தோன்றி, “துளசிதாசா! நாளை உனக்கு ராமதரிசனம் கிடைக்கும்” என ஆசியளித்தார் ஆஞ்சநேயர். மறுநாள் அதிகாலையிலேயே ராமனின் வரவுக்காக காத்திருந்தார். சந்தனக்கட்டையை அரைத்து சந்தனக் குழம்பு தயாரித்து வைத்திருந்தார். சூரியோதய நேரத்தில் கையில் வில்லும், தோளில் அம்புமாக சிறுவனாக ராமபிரான் வந்தார். மெய் மறந்தார் துளசிதாசர். “எனக்கு சந்தனத் திலகம் இடுவீர்களா?” என்று கேட்டான் சிறுவன். சந்தனத்தை சிறுவனின் கன்னங்களில் தடவிய துளசிதாசர், விரலால் நெற்றியில் திலகம் இட்டார். சிறிது நேரம் அவருடன் விளையாடி மகிழ்ந்தார் ராமர். இதற்கு பின்னரே ‘ராம சரித மானஸ்’ என்னும் காவியத்தை துளசிதாசர் எழுத தொடங்கினார்.
|
|
|
|