|
அந்த எழுத்தாளர் சாதித்துவிட்டார். அவரது புத்தகங்கள் அமோகமாக விற்கின்றன. சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது அவருக்கு கிடைத்திருக்கிறது. அவருடைய பதிப்பாளர் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட விழாவிற்குச் சென்றிருந்தேன். ஆளாளுக்கு எழுத்தாளரைப் பாராட்டிய போது, அவர் புத்தகங்கள் விற்ற கணக்கைச் சொன்னபோது, அவர் அள்ளிக்குவித்த விருதுகள், பரிசுகளையும் பட்டியலிட்டபோது என் மனதின் ஓரத்தில் ஏக்கம் துளிர் விட்டது. இது போன்ற வெற்றிகளைக் காணாமலேயே என் காலம் முடிந்துவிடுமோ? இடையே ஒரு அறிவிப்பு கேட்டது. யாருடைய காரோ வழியை மறித்துக்கொண்டு நிற்கிறது எனத் தெரிவித்தனர். காரின் எண்ணைக் கேட்டதும் அதிர்ந்தேன். அது என் கார் அல்லவா? வெளியே ஓடினேன். கார் அதற்குரிய இடத்தில்தான் நிறுத்தப்பட்டிருந்தது. ‘‘இப்படியா காரை நிறுத்திட்டுப் போவாங்க? அறிவு வேணாம்?’’அதிகாரத் தொனியில் பெண் காவலர் ஒருவர் கேட்டதும் கோபம் வந்தது. ‘‘காரைத் தப்பான இடத்தில் நிறுத்தினால்கூடப் பரவாயில்லை. மனதைத் தப்பான இடத்தில் நிறுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்’’ பச்சைப்புடவைக்காரியை இனம் கண்டு கொண்டு அவளது காலில் விழுந்தேன். ‘‘இந்த எழுத்தாளன் வெற்றி பெற்று விட்டதாக நீ நினைக்கிறாயா?’’ ‘‘இவருடைய புத்தகங்கள் லட்சம் பிரதிகள் விற்கின்றன. பல இலக்கிய விருதுகளை வாங்கிவிட்டார். இதைவிட வேறு என்ன வெற்றி வேண்டும்?’’ ‘‘அவன் இருக்கட்டும். நீ எழுத்தில் வெற்றி பெற்றிருக்கிறாயா?’’ நிறைவுடன் வாழ்கிறேன் என்பதைத் தவிர வெற்றி, சாதனை போன்ற வார்த்தைகளை என் ஆடிட்டர் தொழிலுக்கும் பயன்படுத்த முடியாது. எழுத்திற்கும் பயன்படுத்த முடியாது. ‘‘அவன் வெற்றி பெற்றுவிட்டான். நீ பெறவில்லை. இதுதானே உன் ஏக்கம்?’’ ‘‘அந்த எழுத்தாளர் வெற்றி பெறவில்லை என்று சொல்கிறீர்களா?’’ ‘‘இல்லை, வெற்றியை எடைபோட நீ தவறான எடைக்கற்களைப் பயன்படுத்துகிறாய் என்றே சொல்கிறேன். விருதுகளிலும் பரிசுகளிலும் வெற்றி இல்லை. உன் புத்தகங்களின் எண்ணிக்கையிலும் இல்லை’’ ‘‘பின்?’’ ‘‘உனக்குச் சொன்னால் புரியாது. செய்முறை விளக்கம் காட்டுகிறேன். விழிப்புணர்வுடன் இரு’’ பத்து நாட்களுக்குப் பின் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் என்னைத் தேடி வந்தார். ‘‘பக்கத்துலதான் சார் இருக்கேன். போன வருஷம் எனக்கு வரவேண்டிய ரீபண்டு ஐயாயிரம் இன்னும் வரல சார். ஏன்னு பாத்துச் சொல்ல முடியுமா?’’ ‘‘உங்க ஆடிட்டரை கேட்க வேண்டியதுதானே?’’ ‘‘அவருக்கு உடம்பு சரியில்ல... அதான்.. .. ’’ ‘‘அவர் பெயர் என்ன?’’ சொன்னார். எனக்கும் தெரிந்தவர்தான். ஆனால் அவ்வளவாகப் பழக்கமில்லை. ஆசிரியையின் கணக்குகளைப் பார்த்தேன். தணிக்கையாளர் தவறான படிவத்தைத் தாக்கல் செய்திருந்தார். அதனால்தான் வரவேண்டிய ரீபண்ட் வரவில்லை. ‘‘உங்க ஆடிட்டர்கிட்ட சரியான பார்ம்ல ரிட்டர்னப் போடச் சொல்லுங்க’’ சரி, சரி என்று தலையாட்டிவிட்டுப் போனார் ஆசிரியை. பத்து நாட்கள் கழித்து மீண்டும் அந்த ஆசிரியை தேடி வந்தார். இந்த வருட வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்து தரமுடியுமா என்று கேட்டார். அவருடைய தணிக்கையாளருக்கு என்ன ஆயிற்று?
|
|
|
|