|
சரவணப் பொய்கையில் தாமரை மலரில் ஓராறு முகமும், ஈராறு கரமும் கொண்டு அனைவரும் மகிழ தெய்வீகப் பொலிவுடன் உதித்தது திருமுருகக் குழந்தை! அருவமும் உருவம் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகக் கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல் நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடும் நிமல மூர்த்தி அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே! ஆகாயம், பூமி, காற்று, நெருப்பு, தண்ணீர் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கை தான் நாம் அனைவரும். நம்மை காத்தருளும் வண்ணமாகவே முருகப்பெருமானின் தோற்றமும் நிகழ்ந்துள்ளது. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்ட ஒளிச்சுடர் வானத்தில் பரவி, பின் காற்றின், நெருப்பின் கைகளால் ஏந்தப்பட்டு, கங்கை நீரில் தவழ்ந்து சரவணத்தில் உருப்பெற்றது. ஞானம், ஐஸ்வர்யம், சக்தி, பலம், வீர்யம், தேஜஸ் என்னும் அருட்குணங்களே ஆறுமுகங்களாக ஒளிர்ந்தன. சரவண பொய்கையில் செந்தாமரை மலரில் வேத ஆகமங்களுக்கும் எட்டாத பரம்பொருள் நம் வேண்டுகோளுக்கு இரங்கி பச்சிளங்குழந்தையாக தவழ்வதை தேவர்கள் பார்த்துக் களித்தனர். ஆறுமுகக் குழந்தையைப் பல முறை பார்த்தும் திருமாலுக்கு நிறைவு ஏற்படவில்லை. குழந்தையைத் தரிசித்தபடி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். பக்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன்! செயல் மாண்டடங்கப் புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித் தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே! ஆறுமுகக் குழந்தையை பார்த்துப் பரவசம் அடைந்த தேவர்கள் ஆறு பெண்களை அழைத்தனர். சப்தரிஷிகளில் வசிஷ்டர் தவிர்த்த மற்ற ஆறு முனிவர்களின் மனைவியர்களே கார்த்திகை பெண்கள். இவர்களை ஆரல் மகளிர் என்றும் சொல்வர். குழந்தை முருகன் ஆறு வடிவங்களில் அவர்களின் கைகளில் தவழ்ந்தார். பாலுாட்டியும், தாலாட்டியும் பலவித விளையாட்டுகள் காட்டியும் பக்குவமுடன் வளர்த்தனர் கார்த்திகைப் பெண்கள். வைகாசி விசாகத்தில் தோன்றியதால் ‘விசாகன்’ என்றும், தீப்பொறியாக கங்கையில் மிதந்து வந்ததால் ‘காங்கேயன்’ என்றும் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் ‘கார்த்திகேயன்’ என்றும் மாறாத இளமை கொண்டவர் என்பதால் ‘குமரப்பெருமான்’. மாரன் என்னும் மன்மதனை விட அழகில் சிறந்தவர் என்பதால் ‘குமாரன்’ என்றும் அழைக்கப்படுகிறார். சரவணப் பொய்கையில் அவதரித்ததால் ‘சரவணபவன்’ என்றும் இவரை போற்றுவர். கார்த்திகைப்பெண்கள் ஆறுபேரின் தோள்களிலும் ஆறு குழந்தைகளாக விளங்கினான். ‘ஞாலம் ஏற்றி வழிபடும் ஆறுபேர்க்கு மகவென நாணல் பூத்த படுகையில் வருவோனே!.... என்றும் உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர் ஒருவர் ஒருவர்க்கு ஓர் ஓர் புத்திரன் ஆனவனும் – என்றும் தித்திக்கும் திருப்புகழால் அருணகிரியார் போற்றுகின்றார். பிறக்கும் குழந்தையின் முதல் செய்கை அழுகை தானே! குழந்தை அழுதால் தான் கூடி நிற்பவர்கள் சிரிப்பார்கள்! மகிழ்வார்கள் ஆனால் ஆறுமுகக் குழந்தையின் முதல் அழுகை கேட்டும் நமக்கு முடிவு காலம் வந்து விட்டதே என எண்ணி அசுரர்கள் அழுதார்கள். ‘விடிவு காலம்’ தொடங்கி விட்டது என தேவர்கள் மகிழ்ந்தார்கள். கந்தர் அலங்காரச் செய்யுள் இக்காட்சியைக் காட்டுகிறது. திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை விரும்பிக் கடல் அழு குன்று அழ சூர் அழ விம்மி அழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆறு குழந்தைகளும் விளையாடிக் களித்தனர். குழந்தை ஒன்று விழுந்தும், எழுந்தும், வளைந்தும், நெளிந்தும், தவழ்ந்தும், தடுமாறியும், அழுதும், சிரித்தும் விளங்குவதைப் பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும். இங்கோ ஆறு குழந்தைகள்! ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள். கொண்டாடும் தெய்வமே குழந்தைகளாக அவதரித்ததால் சரவணப் பொய்கை சந்தோஷப் பூஞ்சோலையாக விளங்கியது. ஆடஓர் உருவம் செங்கை அறைய ஓர் உருவம் நின்று பாட ஓர் உருவம் நாடிப் பார்க்க ஓர் உருவம் ஆங்கண் ஓட ஓர் உருவம் ஓர்பால் ஒளிக்க ஓர் உருவம் யாண்டும் தேட ஓர் உருவமாகிச் சிவன் மகன் புரிதல் உற்றான். மழலைகளின் விளையாட்டில் தவ முனிவர்களின் தர்ம பத்தினிகள் அறுவரும் மெய் மறந்தனர். தேவர்களையும், உலக உயிர்களையும் காக்கும் பொருட்டு வந்த தெய்வக் குழந்தைகளே! உங்களையே காத்து வளர்க்கும் பொறுப்பை நாங்கள் பெற்றதும் தெய்வீக நிலை தானே! கண்வளராய்! கண்வளராய்! வேதம் உனைத் தேட வேள்விகளும் உனைத்தேட வாதம், வான், தீ வையம் நீர் உனைத் தேட பாதம் பதித்தனையே பெருங்கருணை என்ன சொல்ல! சங்கை எதுவுமின்றிச் செவிலித்தாய் என்றிருக்கும் மங்கை எம் மடியில் பின்னவனே! நீ படுத்துச் செங்கை விரல் தடவிச் செங்காம்பில் வாய் வைக்கச் கொங்கை செய்த தவம் கொஞ்சமோ செவ்வேளே! சரவணப் பொய்கையில் அக்னிப் பொறிகள் ஆறுமுகக் குழந்தையாக மாறிய போதே நவ வீரர்களின் தோற்றமும் நிகழ்ந்தது. சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தபோது ஏற்பட்ட வெப்பத்தை தாங்க முடியாத பார்வதி ஓடினாள் அல்லவா! அப்போது அவளது திருவடிச் சிலம்பில் இருந்து நவரத்தினங்கள் சிதறின. சிதறிய ஒன்பது ரத்தினங்களில் சிவபெருமானின் உருவம் பிரதிபலிக்க ஒவ்வொரு மணியில் இருந்தும் ஒரு சக்தி வடிவம் தோன்றியது. அந்த ஒன்பது சக்தியர்களிடம் இருந்து நவ வீரர்கள் என்னும் ஒன்பது வீரர்கள் தோன்றினர். மாணிக்கம், முத்து, புஷ்பராகம், கோமேதகம், வைடூர்யம், வைரம், மரகதம், பவளம், நீலம் முதலான ஒன்பது மணிகளில் இருந்தும் உருவான நவசக்தியருக்கு முறையே வீரவாகு, வீர கேசரி, வீர மகேந்திரர், வீரமகேஸ்வரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என ஒன்பது மைந்தர்கள் பிறந்தனர். நவசக்தியரின் வியர்வையில் இருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர். ‘‘பார்வதி! நவமணிகள் பிரகாசத்தோடும், கட்டமைப்பான தோற்றத்தோடும் பிறப்பிலேயே சிறப்பு மிக்க இந்த வீரர்களும் நம் மைந்தர்கள். அறிவும், ஆற்றலும் மிக்க இவர்கள் நந்தி கணத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்றார் சிவபெருமான். பரிவும், பாசமும் மீதுார நவவீரர்களையும் பார்த்தாள் பார்வதி. சிவபெருமான் ஒளிவீசும் வாள்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்து, ‘நீங்கள் அனைவரும் லட்சம் வீரர்களுடன் சேர்ந்து முருகப்பெருமானின் படைவீரர்களாக பணிபுரியுங்கள்’ என்று வாழ்த்தினார்.
|
|
|
|