|
பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோயிலுக்கு அருகில் நீலோபா என்னும் இளைஞர் குடியிருந்தார். தம்புராவும் கையுமாக பண்டரிநானின் பெருமைகளைப் பாடியபடி இருப்பார். நீலோபாவுக்கு திருமணம் நடந்தது. விவசாயத்தில் கிடைத்த குறைந்த வருமானத்தில் குடும்பம் நடந்தது. பெண் குழந்தை பிறந்தது. அவள் திருமண பருவத்தை அடைந்தாள். நகை ஏதும் சேர்க்கவில்லையே என்று நீலோபாவின் மனைவி வருத்தப்பட்டாள். ‘ பாண்டுரங்கன் பார்த்துக் கொள்வான்’ என நீலோபா சமாதானம் சொல்வார். வசதியான இடத்தில் மாப்பிள்ளை அமைந்தார். சமையல், மேளம், பந்தல் என்று அனைத்திற்கும் முன்பணம் கொடுத்தார். திருமணத்திற்கு முதல்நாள் உறவினர்கள் வரத் தொடங்கினர். ஆனால் சமையல்காரர்கள் மட்டும் கடைசி வரை வரவில்லை. ‘‘பாண்டுரங்கா! இது என்ன சோதனை!’’ என நினைக்கும் போது ஒரு இளைஞர் அருகில் வந்தார். கலைந்த கேசம், கசங்கிய வேட்டி, தோளில் துண்டு அணிந்தபடி காட்சியளித்தார் அவர். ‘‘ஐயா! இந்த வீட்டில் ஏதாவது வேலை கிடைக்குமா?’’ எனக் கேட்டார். ‘‘அப்பா.. சமையல் ஆள் வராமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். சமைக்கத் தான் ஆள் வேண்டும்’’ என்றார் நீலோபா. ‘‘ நீங்கள் சொன்னால் உடனே தயாரிப்பேன்’’ என்றார் இளைஞர். தயாரான இளைஞர், ‘‘யாரும் சமையற்கட்டிற்குள் எட்டிப் பார்க்க வேண்டாம்‘’ என்று தெரிவித்தார். என்ன ஆச்சரியம்! திருமண சடங்குகள் ஒருபுறம் மும்முரமாக நடக்க மறுபுறம் உணவு தயாரானது. விருந்தினர்கள் சாப்பிட்டு மகிழ்ந்தனர். நன்றி சொல்ல இளைஞரைத் தேடினார் நீலோபா. அவரைக் காணவில்லை. எங்கே போயிருப்பார் என நினைத்தபடி பண்டரிநாதர் கோயிலை நோக்கி ஓடினார். அவரால் நம்ப முடியவில்லை. இளைஞர் கட்டியிருந்த வேட்டி, துண்டும் பாண்டுரங்கனின் இடுப்பில் இருந்தது. வந்தவர் பாண்டுரங்கனே என்பதை அறிந்து கீர்த்தனைகள் பாடி அழுதார் நீலோபா. ஊரார் வியந்தனர்.
|
|
|
|