|
ஆசிரியர் அர்ஜூனன் திடீரென வகுப்பிற்குள் நுழைய விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மவுனம் ஆயினர். ஹோம் ஒர்க் நோட்டுகள் மேஜையில் அடுக்கப்பட்டிருந்தன. நோட்டை சரிபார்க்கத் தொடங்கினார் ஆசிரியர். பாடம் எழுதாத மாணவர்கள் பயந்தபடி நிற்க, அவரோ யாரையும் தண்டிக்கவில்லை. நின்ற மாணவர்களைப் பார்த்து, ‘‘ விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பிலும் அக்கறை வேண்டும். ேஹாம் ஒர்க் செய்ய வில்லை என்றால் நீங்கள் தான் வருத்தப்பட வேண்டும். இனி மேலாவது வீணாக பொழுது போக்காதீர்கள். நாளை ேஹாம் ஒர்க் முடிக்காமல் வரக் கூடாது’’ என கண்டிப்பான குரலில் கூறினார். ‘‘ேஹாம் ஒர்க் செய்கிறோம் சார்!’’ என உறுதியளித்தனர். வகுப்பை நோட்டமிட்ட ஆசிரியரின் கண்ணில் பட்டான் கிருஷ்ணன். ‘‘என்னடா கிருஷ்ணா! நெற்றியில் சந்தனம் குங்குமம் எல்லாம் பலமா இருக்கு!’’ என்றார். ‘‘சார்.. குலதெய்வத்துக்கு மாலை போட்டு விரதம் இருக்கேன். வரும் பவுர்ணமியன்று முடிக்காணிக்கை செலுத்துறதா வேண்டுதல்’’ என்றான். ‘‘சரி உட்கார்’’ என்று சொல்லி விட்டு கணக்குப் பாடத்தை ஆரம்பித்தார். வழக்கமாக ஆசிரியர் அர்ஜூனன்ஒரு கணக்கை நடத்துவார். அதன்பின் மாணவர் ஒருவர் போர்டில் கணக்கை செய்து காட்ட வேண்டும். ‘‘ கிருஷ்ணா! நீ தான் இந்தக் கணக்கை செய்து காட்டணும்’’ என்றார். கிருஷ்ணன் புத்தகத்தைத் திருப்பி விடையை பார்த்துக் கொண்டான். தனக்குத் தான் தெரியுமே என அலட்சியமாக செய்யத் தொடங்கினான். ஆனால் விடை வரவில்லை. தயங்கி நின்றான். ‘‘கிருஷ்ணா! ஒரு விஷயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். எல்லா விஷயத்திற்கும் இது பொருந்தும். கடவுளை வழிபட விரதம், ஒழுக்கம் எல்லாம் கடைபிடித்து செல்கிறாயே அது போல, கணக்கு பாடத்தில் தேற்றம், சமன்பாடுகள், சூத்திரம் என்றிருக்கிறது. முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் செய்ய ஆரம்பித்தால் விடை தானாக வரும்’’ என்றார். அப்போது வகுப்பு முடிந்ததற்கான மணி ஒலித்தது. ஆசிரியர் அர்ஜுனன் கிளம்பினார். அடி, உதை என்றிருக்கும் ஆசிரியர் அன்பாக தத்துவம் சொல்வதைக் கேட்ட மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர். ‘‘ஏண்டா! பாரதத்தில பகவான் கிருஷ்ணர் தத்துவ உபதேசம் செய்ய அர்ஜூனன் கேட்பார். இங்கோ அர்ஜூனன் சொல்ல கிருஷ்ணர் கேட்கிறாரே!’’ என கிண்டல் செய்தனர். அன்று முதல் வகுப்பை அக்கறையுடன் கவனித்தான் கிருஷ்ணன்.
|
|
|
|