|
சுவாமிமலையில் முருகன் மீது பக்தி கொண்ட ஒரு தம்பதியர் இருந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. ‘‘ முருகா! கருணை புரிய மாட்டாயா?’’ என சஷ்டி விரதம் இருந்து வழிபட பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதை ‘முருகம்மை’ என அழைத்தனர். பக்தியுடன் வளர்ந்தாள் முருகம்மை. எழுந்தாலும் முருகா, உட்கார்ந்தாலும் முருகா என எப்போதும் முருகனின் திருநாமத்தை உச்சரித்தாள். மகளைக் கண்ட பெற்றோர் மகிழ்ந்தனர். திருமண வயதை அடைந்ததும், இளைஞரான தனஞ்செயனுக்கு திருமணம் முடித்தனர். கணவரின் மனம் கோணாமலும், மாமியார், நாத்தனாரை அனுசரித்தும் வாழ்ந்தாள்.
மனைவி மீது தனஞ்செயனுக்கும் அன்பு அதிகம். இதை பொறுக்காத அவரது சகோதரி, ‘‘ அம்மா! மனைவியின் முந்தானையை பிடித்தபடி தனஞ்செயன் சுற்றுகிறான். இப்படியே போனால் அவன் வருமானத்தை எல்லாம் அவள் சுருட்டிக் கொள்வாள். உன் கதி என்னாகும்?’’ என அம்மாவை துாண்டினாள். முருகம்மையை பழி வாங்க வேண்டும் என மாமியாரும், நாத்தனாரும் முடிவு செய்தனர். எப்பேர்ப்பட்ட மனிதனையும் கால நேரம் ஆட்டிப் படைக்கும். முருகம்மை மட்டும் தப்ப முடியுமா! தனஞ்செயனின் வியாபாரத்தில் அடிக்கடி நஷ்டம் ஏற்பட, அவன் வெளிநாட்டுக்கு வேலை தேடிப் புறப்பட்டான். அதற்கு முன்னதாக வீட்டு வேலைக்கு முருகன் என்னும் பணியாளனை நியமித்தான். கணவரின் நினைவிலேயே நாளைக் கழித்தாள் முருகம்மை. முருகபக்தையான அவள் அடிக்கடி ‘முருகா, முருகா’ என சொல்வதை பயன்படுத்தி, வேலைக்காரன் முருகனுக்கு இவளுடன் தொடர்பு இருப்பதாக மாமியாரும், நாத்தனாரும் வசை பாடினார். ஊர் திரும்பிய தனஞ்செயனும் இதை நம்பி அவளது கைகளை வெட்டினான்.
‘‘உன் திருநாமத்தை சொன்னதற்கு பலன் இது தானா... முருகா!’’ எனக் கதறினாள். களங்கத்தை போக்க முருகனை வேண்டி பட்டினி கிடந்தாள்.
நேரில் காட்சியளித்த முருகன் கைகளை வளரச் செய்தார். தனஞ்செயன் தவறுக்காக மன்னிப்பு கேட்டான். விதியை யாரால் வெல்ல முடியும் எனக் கணவரைத் தேற்றினாள். மாமியார், நாத்தனாருக்கு தண்டனை கொடுக்க வேண்டாம் என முருகப்பெருமானிடம் வேண்டினாள். நீண்ட ஆயுள், உடல்நலத்துடன் வாழும் பேறு பெற்ற முருகம்மையார் வாழ்வின் இறுதியில் முருகப்பெருமானின் திருவடியை அடைந்தாள்.
|
|
|
|