|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » வாசகியும் வாடிக்கையாளரும் |
|
பக்தி கதைகள்
|
|
‘‘நாளைக்கு உங்களைப் பார்க்க ராதிகான்னு ஒரு பொண்ணை அனுப்பி வைக்கறேன். ரொம்ப பாவப்பட்ட கேசு சார். இன்னும் நாற்பது வயசு கூட ஆகல. ரெண்டு குழந்தைங்க. புருஷன் திடீர்னு இறந்துட்டாரு. நிறைய கடன். ஒரே சொத்து அவங்க வீடுதான். அதை விக்கறதுக்கு விலை பேசிட்டாங்க. எக்குத்தப்பா வருமானவரி கட்டணுமாமே? ஏதாவது பார்த்து செஞ்சி கொடுங்க, சார்’’ பேசியவர் என் நெருங்கிய நண்பர். அவர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன். மறுநாள் காலை பத்து மணிக்கு ராதிகா வந்தாள். ஆள் பார்க்க லட்சணமாக இருந்தாள். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. வரவேற்று அமர வைத்தேன். ‘‘பச்சைப்புடவைக்காரியப் பத்தி எழுதறது.. . ..’’ ‘‘நானே தான்.’’ ‘‘ஏன் சார் பொய்யா எழுதித் தள்றீங்க? பச்சைபுடவைக்காரி நம் மீது அன்பப் பொழியறா. நம்மளைக் காப்பாத்தறதே அவதான். அவ கருணையில்லாம நாம வாழமுடியாது, இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு வெட்கமா இல்ல? ‘‘ 104 வயசுல கொரோனா வந்தவங்க எல்லாம் கல்லுக்குண்டு மாதிரி இருக்கும் போது என் புருஷன் மட்டும் ஏன் சார் 42 வயசுல அநியாயமாச் சாகணும்? ஊரைச் சுத்திக் கடன். வீட்ட வித்துத்தான் கடனை அடைக்கணும். ரெண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கணும். நாள் தவறாம அவளைக் கும்பிட்டதுக்கு நல்லா வச்சி செஞ்சிட்டா சார் உங்க பச்சைப்புடவைக்காரி. ராட்சசி.. வஞ்சகி...’’ நான் கத்தினேன். ‘‘நிறுத்துங்க. நீங்க என் வாடிக்கையாளரா வந்திருக்கீங்களா வாசகியா வந்திருக்கீங்களா?’’ அவள் அதிர்ந்தாள். ‘‘வாசகியா வந்திருந்தா உடனே வெளியே போயிருங்க. என்னைக் கொத்தடிமையாக் கொண்டவளைப் பழிச்சிப் பேசற வாசகி எனக்குத் தேவையில்லை. வாடிக்கையாளரா வந்திருக்கீங்கன்னா உங்க வரி விவகாரங்களை மட்டும் பேசுங்க.’’ சில நொடிகள் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். பல கேள்விகள் கேட்டேன். ஆவணங்களைக் கொண்டு வரச் சொன்னேன். அரை மணி நேரம் கழித்து என்னிடம் விடைபெறாமல் விருட்டென்று போய் விட்டாள். அன்று இரவு மனம் போன போக்கில் நடந்து சென்றேன். பச்சைப்புடவைக்காரியின் மீது ராதிகா வீசிய சுடுசொற்களையே மனம் அசைபோட்டது. அவளுக்கு ஏன் இப்படி கொடுமை நடக்க வேண்டும்? கணவன் வேலை பார்த்த அலுவலகத்தில் கருணை அடிப்படையில் விரைவில் வேலை கிடைக்கும் என நண்பர் சொல்லியிருந்தார். வீடு விற்று வரும் பணத்தில் கடனை அடைத்துவிட்டு வசதியாக வாழலாம். என்றாலும் இந்த 40 வயதில் தனிமை நரகம் கொடுமையல்லவா? வேகமாக வந்த கார் ஒன்று என்னை உரசுவது போல அருகில் நின்றது. ‘‘இந்த விலாசம் எங்கே என சொல்ல முடியுமா?’’ வாங்கிப் பார்த்தேன். ‘மீனாட்சியம்மன் கோயில், மதுரை’ என எழுதப்பட்டிருந்தது. நீட்டி முழக்கி வழி சொல்லப்போனவன் வழி கேட்ட அழகியின் முகத்தில் இருந்த குறும்புச் சிரிப்பை வைத்து அவளை அடையாளம் கண்டேன். விழுந்து வணங்கினேன். ‘‘ராதிகாவின் கர்மக் கணக்கை காட்டட்டுமா? அவள் ஏன் இந்த வயதில் இந்தத் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என முற்பிறவிகளில் நடந்ததை வைத்து விளக்கட்டுமா?’’ ‘‘வேண்டாம் தாயே! விளக்கத்தைக் கேட்டுத்தான் உங்களை நம்பவேண்டுமென்றால் என் அடிமைத்தனத்திற்கு அர்த்தமில்லாமல் போகும்.’’ ‘‘வேறு என்ன வேண்டும் உனக்கு?’’ ‘‘தாயே! அவள் உங்களை ராட்சசி, வஞ்சகி என்றெல்லாம் சொல்லிவிட்டாள்..’’ ‘‘அது எனக்குச் செய்யப்பட்ட அர்ச்சனையப்பா. எனக்கு வருத்தமில்லை.’’ ‘‘ஆனால் என் மனம் துடிக்கிறது தாயே! அவளை அடக்க முடிந்ததே ஒழிய பதிலடி கொடுக்கமுடியவில்லை. அவள் நாக்கைப் பிடுங்கும் வகையில் கேள்வி கேட்க வேண்டும். அதே சமயம் அதுவே அவளுக்கு வழிகாட்டுதலாகவும் துணையை இழந்து தவிக்கும் அவளுக்கு ஆறுதலாகவும் இருக்கவேண்டும்.’’ ‘‘அவ்வளவுதானே! இன்னும் இரண்டு நாளில் உன்னைப் பார்க்க வருவாள். அப்போது அவள் கணவர் பற்றியும் கோடி காட்டுகிறேன். உன் வார்த்தைகள் உனக்கும் அமைதியைக் கொடுக்கும். அவளையும் வாழ வைக்கும். உன் மனதில் அன்பு குறையாமல் பார்த்துக் கொள்..’’ பச்சைப்புடவைக்காரி மறைந்தாள். அன்று ராதிகா என்னைப் பார்க்க வந்திருந்தாள். சிக்கலான வருமானவரிக் கணக்கை விளக்க முயன்றுகொண்டிருந்தேன். என்ன முதலீடுகள் செய்ய வேண்டும், எப்படி வரி கட்டவேண்டும் என ஒரு மணி நேரத்துக்கு வகுப்பே நடத்தினேன். என்னைப் பார்த்துக் கை கூப்பினாள் ராதிகா. ‘‘ஐயா நீங்க சொல்றது எதுவுமே புரியல. புரியணுங்கற அவசியமும் இல்ல. நான் உங்கள முழுசா நம்பறேன். எத்தனை செக் வேணும்னாலும் கையெழுத்துப் போட்டுத் தரேங்கய்யா. நீங்களே எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சிக் கொடுத்திருங்கய்யா.’’ அந்தச் சமயம் பார்த்து அறைக்கதவு தட்டப்பட்டது. ‘‘சார் உங்களுக்குத் தபால் வந்திருக்காம். நீங்கதான் கையெழுத்துப் போட்டு வாங்கணுமாம்.’’ உதவியாளர் சொன்னார். அடுத்த நிமிடம் காக்கி நிறப் புடவையும் ரவிக்கையும் அணிந்த தபால்காரி உள்ளே நுழைந்தாள். என்னிடம் கடிதத்தைக் கொடுத்தாள். ராதிகா சுவரில் இருந்த மீனாட்சி படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது தன் கையில் இருந்த காகிதங்களால் என் தலையில் செல்லமாகத் தட்டினாள் தபால்காரி. வந்திருப்பவள் யாரெனத் தெரிந்தது. என்ன பேச வேண்டும் என்றும் புரிந்தது. ராதிகாவைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன். ‘‘நீங்க எனக்கு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. நான் செய்யற வேலைக்குக் காசை வாங்கிட்டுப் போயிருவேன். என்ன நம்பிக் கையெழுத்துப் போட்ட செக் புத்தகத்தைக் கொடுக்கவும் தயாரா இருக்கீங்க. ஒருவேளை நான் மோசடிப் பேர்வழியா இருந்தா எல்லாப் பணத்தையும் எடுத்துக்கிட்டு உங்களை நடுத்தெருவுல நிக்க வச்சிரலாம், தெரியும்ல?’’ ‘‘உங்களப் பார்த்தா அப்படிச் செய்யறவராத் தெரியலங்கய்யா.’’ ‘‘இந்த சாதாரண வருமானவரிக்கணக்கே உங்களுக்குப் புரியல. உங்களுக்கு எப்படிம்மா சூட்சுமமான கர்மக்கணக்கு புரியும்? வரிக்கணக்கு புரியலேன்னா அது தெரிஞ்ச என்னை நம்பி உங்க மொத்தப் பணத்தைக் கொடுக்கவும் தயாரா இருக்கீங்க. அதே மாதிரி கர்மக் கணக்குப் புரியலேன்னா அந்தக் கணக்கப் போடறவள நம்பி உங்க வாழ்க்கைய ஏன் அவகிட்ட ஒப்படைக்க மாட்டேங்கிறீங்க? ஒரு கணக்குப் பிள்ளையை நம்பற அளவுக்கு அந்தக் கனகவல்லியை ஏன் நம்ப மாட்டேங்கறீங்க? ‘‘ரெண்டு லட்ச ரூபாய் வரி கட்டச் சொன்னேன். சரின்னு சொன்னீங்க. அதே மாதிரி அவ உங்களுக்கு ஒரு துன்பத்தக் கொடுத்தா. ஒரு வகையில அது நீங்க கட்ட வேண்டிய வரிதான். அத ஏன் ஏத்துக்க மாட்டேங்கறீங்க? ‘‘உங்க புருஷன் பெரிய குடிகாரன். பல பெண்களோட தொடர்பு இருந்தது. அதனாலதான் அவ்வளவு கடன். உங்க புருஷன் இன்னும் இருபது வருஷம் உயிரோட இருந்திருந்தா உங்க வாழ்க்கையே நாசமாப் போயிருக்கும். ஆனா இப்போ பாருங்க கவர்மெண்ட் வேலை, வீடு வித்த பணம்னு வசதியா வாழப் போறீங்க. உங்க குழந்தைங்கள நல்லபடியா வளர்க்கப் போறீங்க. இதுதாம்மா பச்சைப்புடவைக்காரி போட்ட கணக்கு.‘‘ ராதிகாவை அழ வைத்துவிட்டேன். கதவு லேசாகத் திறந்தது. தபால்காரி என்னைப் பார்த்துக் கையை உயர்த்தி ஆசியளித்து மறைந்தாள். இப்போது நானே அழ ஆரம்பித்தேன்.
|
|
|
|
|