|
அன்பே சிவம் என்கிறார் திருமூலர். ‘சிவம்’ என்பதற்கு ‘வீரம்’ என்றும் பொருள் உண்டு. நாயன்மார்களில் பலர் உள்ளம் உருகி பக்தியில் ஈடுபட்டனர். இதற்கு மாறாக சிலர் சிவ வழிபாடு, சிவன் அடியார்களுக்கு இடையூறு செய்பவர்களை மீது கோபம் கொள்ளத் தயங்கியதில்லை. இவர்களுக்கு அரசு, ஆட்சி, அதிகாரம் பற்றிய பயம் கிடையாது. சிவபக்தி மட்டுமே பெரிதாக தோன்றியது. சிவனை நிந்திப்பவர்களை முரட்டுத்தனமாகத் தண்டித்தனர். இவர்களின் வீரம் கண்ட சிவன் வீடு பேறு அளித்து மகிழ்ந்தார். அவர்களில் ஒருவரே ‘சண்டேஸ்வர நாயனார்’ எனப்படும் விசார சருமர். சோழ நாட்டில் உள்ள திருசேய்ஞலுாரில் வாழ்ந்த எச்சதத்தன் என்னும் அந்தணரின் மகனாக பிறந்தார். முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இளமையிலேயே வேதங்களை கற்றார். ஏழுவயது சிறுவனான விசார சருமன், ஒருநாள் விசாரசருமன் தன் நண்பர்களுடன் திடலில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு ஆயன் ஒருவன் பசுக்களை முரட்டுத்தனமாக அடிப்பதைக் கண்டு வருந்தினார். சிவபூஜைக்கு தேவையான ‘பஞ்ச கவ்யம்’ என்னும் பால், தயிர், வெண்ணெய், நெய், சாணம் என ஐந்து பொருட்களைத் தரும் பசுக்களை வதைப்பது பாவம் என பசுக்களின் உரிமையாளரிடம் தெரிவித்ததோடு அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். புல்வெளியில் பசுக்களை மேயவிட்டு, தண்ணீர் காட்டி அன்பைப் பொழிந்தார். விசாரசருமர் அருகில் நின்றாலே பசுக்கள் தாமாக பாலைச் சொரிந்தன. ஆற்று மணலில் சிவலிங்கத் திருமேனி அமைத்து பால் அபிேஷகம் செய்து தினமும் வழிபாடு செய்தார். ஒருநாள் இதைக் கண்ட முட்டாள் ஒருவன் , ‘விசாரசருமன் பசும்பாலை மண்ணில் ஊற்றி விளையாடுகிறான்’ என விசாரசருமரின் தந்தையான எச்சதத்தனிடம் தெரிவித்தான். மறுநாள் காலையில் அவர் மகனுக்கு தெரியாமல் மாடுகளைப் பின்தொடர்ந்தார். ஆற்றங்கரையில் இருந்த குரா மரத்தின் பின்புறம் ஒளிந்து நின்றார். வழக்கம் போல் விசாரசருமர் மண் லிங்கம் அமைத்து அபிஷேகம் செய்யத் தொடங்கினார். எச்சத்தன் ஒரு கோலால் மகனின் முதுகில் அடித்ததோடு, பால் இருந்த பானையை காலால் உதைத்தார். வெகுண்ட எழுந்த விசாரசருமர், ‘‘ பூஜைக்காக இருந்த பாலை எட்டி உதைத்த உம்மை தண்டிப்பேன்!’’ என்று கையில் கோலை எடுத்தார். அது ‘மழு’ என்னும் ஆயுதமாக மாறவே தந்தையின் கால்களை வெட்டி எறிந்தார். அந்த இடத்திலேயே எச்சதத்தன் இறந்தார்.பின் சிவபூஜையை தொடர்ந்தார் விசாரசருமர். அப்போது சிவன் அம்மையப்பராக காளை வாகனத்தில் காட்சியளித்து, ‘‘பிள்ளாய்! இனி யானே உமக்குத் தந்தையானோம். சிவனடியார்களுக்கு நீயே தலைவன் ஆவாய். யான் உண்பன, உடுப்பன, அணிவன அனைத்தும் உனக்கே ஆகுக. உனக்கு சண்டேஸ்வரர் என்னும் பதவியும் அளித்தோம்!’’ என வரம் கொடுத்தார். தன் சடையில் சூடிய கொன்றை மாலையை விசாரசருமரின் தலை மீது சூட்டினார். தந்தை எச்சதத்தனும் சிவனருளால் உயிர் பெற்றார். சிவன் கோயில்களில் கருவறைக்கு அருகில் சண்டேஸ்வரர் சன்னதி இருக்கும். திருவிழா காலங்களில் பஞ்சமூர்த்தி புறப்பாட்டின் போது சண்டிகேஸ்வரர் சுவாமியோடு வீதிகளில் எழுந்தருள்வார். கோயிலில் சிவனுக்கு தினமும் சாற்றப்படும் பூமாலைகள், ஆடைகள், நிவேதனங்கள் இவருக்கு உரியதாகும். தைமாத உத்திர நட்சத்திரத்தன்று(பிப்.1) அன்று கோயில்களில் நடக்கும் குருபூஜையில் பங்கேற்று சண்டேஸ்வரர் அருள் பெறுவோம்.
|
|
|
|