|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » வெற்றிக்கான சூத்திரம் |
|
பக்தி கதைகள்
|
|
சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கியதால் இடது கையை இழந்தான். ஆனால் அவனுக்கு ஜூடோ கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. குறையைப் பொருட்படுத்தாமல் குருநாதர் ஒருவரின் உதவியை நாடினான். அவரும் பயிற்சி அளிக்க சம்மதித்தார். முதல் நாள் பயிற்சிக்கு வந்தான் சிறுவன். அவனுக்கு மற்றவர்களைப் போல இரண்டு கைகள் இல்லையே என்ற தயக்கம் வரக் கூடாது என்பதற்காக புத்திசாலி எறும்பின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை விவரித்தார். ஒருநாள் எறும்பு ஒன்று இரை தேட புறப்பட்டது. நீளமான பொரி ஒன்று அதற்கு கிடைத்தது. அதை வாயில் கவ்வியபடி நடந்தது. புற்றுக்குச் செல்லும் பாதையில் சிறு விரிசல் ஒன்று குறுக்கிட்டது. அதை எறும்பால் தாண்ட முடியவில்லை. சற்று நேரம் யோசித்த எறும்பு, பொரியை அந்த விரிசலின் மீது வைத்து அதன் மீது ஏறிக் கடந்தது. பின் தன் உணவை இழுத்துச் சென்றது. நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தை பாலமாக மாற்றிக் கொண்டு முன்னேற வேண்டும். அந்த எறும்பிடம் உள்ள தன்னம்பிக்கை உனக்கும் இருந்தால் எப்படிப்பட்ட துன்பத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவாய்’’ என்று சொல்லி பயிற்சியைத் தொடங்கினார். வலது கையால் ஓங்கி குத்தும் ஒரே ஒரு வித்தையை சொல்லிக் கொடுத்தார். இப்படியே ஓரிரு மாதம் கடந்தது. அப்போதும் அதே பயிற்சி தொடர்ந்தது. ஒருநாள் சலிப்புடன் சிறுவன், ‘‘குருநாதா! இந்த பயிற்சி மட்டுமே கற்றால் போதுமா... போட்டியில் எப்படி வெற்றி பெற முடியம்?’’ என்று கேட்டான். ‘இது போதும் உனக்கு’ என்றார் அழுத்தமுடன். இப்படியே பயிற்சிக் காலம் முடிந்தது. போட்டிக்கு சிறுவனை அனுப்பி வைத்தார். ஒரு கையுடன் வந்திருக்கும் சிறுவனைக் கண்ட மற்ற வீரர்கள் ஏளனத்துடன் பார்த்தனர். ஆனாலும் நம்பிக்கையுடன் களம் இறங்கி முதல் பரிசை தட்டிச் சென்றான் சிறுவன். பலசாலிகளையும் கூட ஆக்ரோஷமாக அவன் வீழ்த்தியதை அவனாலேயே நம்ப முடியவில்லை. ‘‘எப்படி குருவே! ஒற்றை கையுடன் ஒரே ஒரு குத்துப்பயிற்சியைக் கற்ற எனக்கு வெற்றி கிடைத்தது?’ எனக் கேட்டான். ‘‘இரண்டு காரணங்கள். ஒன்று நீ கற்றது ஜூடோவின் கடினமான குத்துப்பயிற்சி. இன்னொன்று இதை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை எதிராளி மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. பலவீனம் என்று எதுவுமில்லை. பலவீனத்தை எப்படி பலமாக மாற்றுவது என்பது தான் வெற்றிக்கான சூத்திரம்’’ சிறுவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. குருநாதரின் பாதங்களில் விழுந்து நன்றி சொன்னான்.
|
|
|
|
|