Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பெண்ணுரிமை அம்மை காந்திமதி
 
பக்தி கதைகள்
பெண்ணுரிமை அம்மை காந்திமதி

எனக்கு அம்மையை ரொம்பப் பிடிக்கும். ரொம்ப என்றால்? சிறுமியாக இருந்தபோது சொன்ன பதில் நினைவிருக்கிறது. ஒரு கையில் அல்வாவும், மறுகையில் விளையாட்டு பொம்மையுமாகக் கோயிலுக்குப் போன அந்த நாட்களில் குட்டிக் கைகளை அகலமாக விரிந்துக் காட்டினேன் குழந்தைத்தனமாக. அப்புறம் வாழ்க்கை நகர நகர அம்மை என்னைத் தனது விளையாட்டு பொம்மையாக்கி வாழ்வில் உருட்டி, புரட்டி, அழுத்தி, நிமிர்த்திக் சிரிக்கிறாள். இப்போது கேட்டால் கைகளை வானமளவுக்கு விரிக்கத் தோன்றாது.
என் இதயம் அம்மைதான்... என்பேன்.
என் மனசு அம்மைதான்... என்பேன்.
ஒருகை அளவுதானா? என்று கேட்கலாம். அரூபமானதுதானா? என்றும் கேட்கலாம். இருக்கட்டும். நிதர்சனம் புரிந்து, அறியாமை தெளிந்த பின்பு இந்தப் புரிதல் கைகூடியிருக்கிறது.
சிறு கையளவுள்ள இதயம்தான் வாழ்வின் ஆதாரம். அரூபமான மனசுதான் உயிர்ப்பின் ஆதாரம். எனவே அம்மை இரண்டுமாக இருக்கிறாள் என்பது அவளே உயிரின் ஆதாரம். உயிர்ப்பின் ஆதாரம் என்பதன் நீட்சிதானே? எனவே இப்போதெல்லாம் மனசு பரபரப்பதில்லை. பதட்டப்படுவதில்லை நின்று நிதானித்து அம்மையை சிந்திக்க முடிகிறது.
அன்றைக்கும் அப்படித்தான். அப்பனின் உயிர்த்துளியாக அம்மையின் கருத்துளியாக உருப்பெற்ற நாளின், நொடியின், அணுவின் அணுவாக என்னுள் நிறைந்திருக்கும் திருநெல்வேலிக் காற்றும் நீரும், மண்ணும், மகத்துவமும், குங்குமத்தின் செந்நிறமும், திருநீற்றின் வெண்ணிறமும், தமிழின் பண்ணிறமும், பிரவகித்த பொழுது அது. அம்மையின் முன்னால் நான் இருந்தேன். என்னை மறந்தேன். எல்லாம் துறந்தேன். நெகிழ்ந்தேன். மகிழ்ந்தேன். பித்தாகிப், பிச்சியாகி, நிற்க முடியாமல் தளர்ந்தேன். அம்மை முன்னால் மறுபடியும் மறுபடியும் ஜனனமாகி மலர்ந்தேன்.
அவள் திருநெல்வேலி காந்திமதி அம்மை. வடிவுடை அம்மை. திருக்காமக்கோட்டுடைய நாச்சியார். அவளைப் பார்க்க இரண்டு கண்கள். அவளைத் தரிசிக்க இரண்டு கண்கள் போதாதே என்ற பரிதவிப்பில் குழைந்தேன். அடுத்த நொடி, தலையோடு காலாகக் கண்கள் முளைக்க தலையோடு காலாக ஆயிரக்கணக்கான கண்கள் முளைக்க அத்தனை இரட்டைக் கண்களாலும் அம்மையை என் ஊனுக்குள் நிரப்பினேன். என் இதயத்தில், என் மனசில், என் நேற்றில், என் இன்றில், என் நாளையில் நிரப்பினேன்.
காந்திமதி அம்மையின் வைரமணிமுடி, ராக்கொடி, மூக்குத்தி, கால்சிலம்பு, புல்லாக்கு, மணிமாலை, பட்டுச்சேலை, ரோஜாமாலை எல்லாவற்றோடும் அவளை ஆரத்தழுவி இடுப்பில் அமர்த்திக் கொள்ளத் தவித்தேன். அவளின் நின்ற கோலம் எனக்கான ஆலம். எனக்கான ஞாலம். எனக்கான காலம். எனக்கான கோலம். அவளின் சன்னதிக்குள் யுகாந்திர ஜில்லிப்பு, சிலிர்ப்பு, பனிப்பாறையின் தெளிப்பு எல்லாமே உணர முடியும். சபலங்கள் கரையும், வேலைகள் கரையும், அலைபாய்தல் கரையும், துவளுதல் கரையும். அம்மையின் தாய்மடிக்குள் நம் எல்லாம் கரையும்.
‘‘எத்தனை காலமாக இப்படி நிற்கிறாய் தாயே. கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளேன். உன் காலை நீவி விடவா? உன் காலைப் பிடித்து விடவா? உட்கார் தாயே.. உட்கார் அம்மையே.. உட்கார் தங்கமே...’
அம்மையைச் சீராட்டினேன். அருள்பாலித்தே தீருவேன் என்று பிடிவாதமாக நிற்கும் அம்மை. காந்திமதி அப்படித்தான். மதுரை மீனாட்சி அப்படித்தான். ஆண்டாளும் அப்படித்தான். கன்னியாகுமரி தாயும் அப்படித்தான். நம்மின் காப்புக்காக, நம்மின் சிறப்புக்காக நிற்கும் அம்மைகள்.
கோயில்களில் சம்பிரதாயங்களும் சடங்குகளும் பெரும்பாலும் பாவனைகள் என்றாலும் பாவனைகளே மனதை நெகிழ்த்தும். சிந்தனைகளை முகிழ்த்தும் என்பதும் அம்மை விதித்தது தானே?
அந்த உச்சிப்பகல் பொழுதில் பரபரப்பு. அன்னை ஈசனுக்கு உணவு பரிமாறுதல் என்கிற பாவனையா? சடங்கா? சம்பிரதாயமா? எல்லாம் கலந்ததா? எல்லாம் கடந்ததா? எதுவானால் என்ன? அம்மைதானே ஈசனுக்கும் அன்னபூரணி. அன்னத்தோடு நாம் உண்ணுவது போன்றே சகல பதார்த்தமுமாக அமுது படைக்கிறாள் அம்மை.
‘சிவனுக்கு அமுது தந்து பசியாற்றுதல் உனக்கும் நித்தியக்கடமையா தாயே... இல்லறத்தின் கடமைப்பொறுப்பு உனக்கும் உண்டா?’
கேள்விகளோடு அமுது செல்லும் திசையெல்லாம் பின்னால் போனேன்.
கைக்குழந்தை ஒன்று தொடர்ச்சியாக வீறிட்டு அழுதது. பூஜைகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறதென்று அருகிருந்தவர்கள் கொஞ்சம் எரிச்சலானதில் – அம்மா கடுகடுத்தாள்.
‘எல்லா நேரமும் நைநைன்னு அழுகை சாமி பார்க்க விடாம...’
‘ஏட்டி.. பசிக்கற புள்ளைக்குப் பால் குடுக்காம, சாமி பாக்கறதா முக்கியம்? ஓரமா உக்காந்து பசியாத்து. சாமி எங்கயும் போயிடாது..’
யாரோ பெரிய மனுஷி அம்மாக்காரியை அதட்டினாள்... இது இது இதுதானே தாயே நீ சொல்லும் பதில்? இப்போது புரிகிறது. பசிக்கிற வயிற்றுக்குப் பசியாற்றும் அமுதசுரபிகள் என்பதுதானே பெண்மைக்கு அம்மை வழங்கியிருக்கும் உன்னதம். அந்தத் தாய்மை ஜீவநதி வற்றிப் போகக் கூடாது என்பதுதானே காந்திமதி அம்மை தத்துவம்.
தெளிவின் வெளிச்சம் தந்தாள் அம்மை. காந்திமதி அம்மை தலத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன். அனாதி காலத்தின் சத்தியசாட்சி அவள். ஆதி அந்தமும் அவளே. ஆதி அந்தம் இல்லாதவளும் அவளே. முக்காலமும் அவளே. முக்காலம் கடந்தவளும் அவளே. கற்காலம், நற்காலம், எக்காலம் எல்லாமானவள். எல்லாவற்றுக்கும் அப்பாலும் ஆனவள் இந்த அன்னம் பரிமாறும் அம்மை.
நெல்லை மழைநீர் அடித்துப் போகாமல் காத்த பெரும்சக்தி காந்திமதி – பசியில் இருந்து உயிர்களை காக்கும் அருட்சக்தி.  உயிர்களின் பசி போக்க அப்பனும் அம்மையுமாக அருளும் பேரன்பே இக்கோயிலின் அடையாளமாகிறது.
850 அடி நீளம், 756 அடி அகலம் கொண்டது இக்கோயில். 450 டன் எடையுள்ள தேர் கொண்ட கோயில். அதன் உயரம் 85 அடி.  தேர்ச்சக்கரங்களின் இரும்பு அச்சுகள் லண்டனில் செய்யப்பட்டவை. பிரம்மாண்டமான தேரை எந்திரம் மூலம் இயக்காமல், பக்தர்கள் தானே இழுத்துத் வலம் வரச் செய்கிறார்கள். 520 அடி நீளம், 63 அடி அகலம் 1000 துாண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், பொற்றாமரைக் குளக்கரையில் சரஸ்வதி ஞான வெளிச்சமாக, ஞான விருட்சமாக இருக்கிறாள் என பல பெருமைகள் இக்கோயிலுக்கு உண்டு.
பன்னிரண்டு மாதமும் விழாக்கோலம் பூணுகிறாள் காந்திமதி அம்மை. மூங்கில் விருட்சமாக, வேணு வனமாக, தாருகா வனமாக, சதுர்வேதி மங்கலமாக 2000 ஆண்டுகள் பழமையான திருத்தலத்தில் அம்மை வீற்றிருக்கும் பாவனையும், கோலமும் மறை பொருளாக எதைச் சொல்கிறது என்னும் நினைப்புடன் ஆயிரங்கால் மண்டபத்தின் பிரம்மாண்டத்தில் கரைந்தேன். ஆயிரங்கால் மண்டபம், சிற்பங்கள், சிற்ப வேலைப்பாடுகள், மேற்கூரையின் மரவேலைப்பாடுகள்,  தாமிரபரணித்தாய் சன்னதி என எல்லாமே பிரமிப்பாக இருந்தது. தன்னில் நீராடும் தாமிரபரணி என்று புகழ்வது போல பெண்மை என்னும் ஜீவநதி தன்னில் தானே மூழ்கி, முத்துக் குளித்து, புடம் போட்டு, ஆடகப் பொன்னாக, அபூர்வ பிறவியாக உயர வேண்டும் என்பதையும் அம்மை சொல்கிறாள்? அதைத்தாண்டி அம்மை சொல்லும் ரகசிய வேதம் என்ன? பரிதவிப்போடு நெல்லையப்பர் சன்னதியிலிருந்து சங்கிலி மண்டபம், கல்மண்டபம், அம்மா மண்டபம் வழியாக காந்திமதி அம்மை சன்னதிக்குள் மீண்டும் நுழைந்தேன்.
எத்தனை ஆயிரம் பக்தர்கள் இந்த இணைப்பு மண்டபம் கடந்து போயிருப்பார்கள்? எத்தனை பரவசம் ஒவ்வொருவருக்கும்? எத்தனை நிறைவு ஒவ்வொருவருக்கும்?
‘கண்ணி விட்டுப் போயிடக் கூடாது அல்லவா... தனித்தனியா இருந்தாலும் கண்ணி இறுக்கமா இருக்கணும்லா...’   என்று ஒருவர் இன்னொருவரிடம் பேசியபடி செல்வதைக்கண்டு அதிர்ந்தேன். ஆஹா... இதுதானே அம்மையின் அசரீரி வாக்கு.
நெல்லையப்பருக்குத் தனிகோபுரம், தனி சன்னதி. காந்திமதி அம்மைக்குத் தனி கோபுரம். தனி சன்னதி. இரு சன்னதிகளையும் இணைப்பது சங்கிலி மண்டபம் என்னும் கண்ணி மண்டபம்.
 கணவன், மனைவி என்றாலும், இருவரும் அவரவருக்கான வெளி, இடம், பீடம், ஆற்றல் என்றிருத்தல் வாழ்வின் ஆசுவாசம்.  மனைவியைக் கணவன் அடையாளமின்றி ஆக்குவது அல்ல இல்லறம். அவளின் மேன்மைக்கான மரியாதையை, கவுரவத்தைக் கணவன் தர வேண்டும். ஆண், பெண், கணவன், மனைவி இருவருமே தனித்தனி ஆளுமைகள். இல்லறம் என்னும் கல்மண்டபம் அவர்களை இணைக்கலாம். இறுக்கக்கூடாது. நொறுக்கக்கூடாது. பெண் பீடம் அவளுக்கானதே என்னும் பெண்ணுரிமைப் போராளியாக வாழ்வின் ரகசியம் சொல்கிறாள் காந்திமதி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar