Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குனியாத தலைக்கு ஒரு குட்டு
 
பக்தி கதைகள்
குனியாத தலைக்கு ஒரு குட்டு

சிவபெருமானை வணங்கி திருவருள் பெறுவதற்காக பிரம்மா கயிலாயம் வந்தார். ‘தான் படைப்புக் கடவுள்’ என்னும் பெருமிதம் அவர் முகத்தில் பொங்கியது.
கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணங்களோடு தேவர்கள் புடைசூழ பிரம்மா கயிலயாயம் வந்த போது முருகப்பெருமான் நவ வீரர்களோடு உலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவருடன் வந்திருந்த அனைவரும் பாலமுருகனைப் பணிந்து வணக்கம் தெரிவித்தனர். ஆனால் பிரம்மா மட்டும் கண்டும் காணாமல் சென்றார்.
சிவபெருமானை பணிந்து கும்பிட்ட பிரம்மா,  ‘குழந்தையாகிய முருகனுக்கு எதற்கு கும்பிடு?’ என்று எண்ணிய வண்ணம் நடந்தார்.
ஏறெடுத்துப் பார்க்காமல் நான்கு முகங்கள் திரும்பிக் கொண்டதை ஆறுமுகங்கள் அறியாதிருக்குமா?
சிவன் வேறு, முருகன் வேறு என்று சிந்தை தடுமாறிய பிரம்மாவை நல்வழிப்படுத்த எண்ணி, ‘பெரியவரே! சற்று இங்கு வாருங்கள்’ என கூப்பிட்டார் முருகன். சற்று அச்சத்துடன் வந்த பிரம்மாவைப் பார்த்தார் முருகன்.
‘தாங்கள் யார் என்று அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்... உங்கள் தொழில் என்ன?
‘பிரம்மனாகிய நான் உன் தந்தையின் கட்டளையை ஏற்று அனைத்து உயிர்களையும் படைக்கும் தொழிலை மேற்கொண்டுள்ளேன்’
‘உரை சேரும் எண்பத்து நான்கு நுாறாயிரம்
யோனி பேதம் நிரை சேரப் படைத்து’  
நுாறாயிரம் என்றால் லட்சம்.
இந்த உலகில் லட்சம் உயிர் வகைகள் உள்ளன. சர்வலோக ஜீவராசிகளையும் படைப்பவன் நான். சிவபெருமானே எனக்கு வேதங்களைக் கற்பித்துள்ளார். அந்த வேதங்களை அடிப்படையாகக் கொண்டு உலக உயிர்களை  படைத்து வருகிறேன். பிரம்மாவின் பதிலில், ‘அண்டம் முழுவதும் படைப்பவன் நான்’ என்னும் ஆவணமும், சிவபெருமானே எனக்கு மறைகளை உபதேசித்துள்ளார் என்னும் அகம்பாவமும் வெளிப்பட்டதைக் கவனித்த முருகன், ‘வேதம் அறிந்த நீங்கள், முதல் வேதமாகிய ‘ருக்’ வேதத்தைச் சற்று சொல்லுங்களேன்’
தாமரைத் தலை இருந்தவன் குடிலை முன் சாற்றி
மா மறைத்தலை எடுத்தனன் பகர்தலும் வரம்பில்  
காமர் பெற்றுடைக் குமரவேள் ‘நிற்றி முன் கழறும்
‘ஓம்’ எனப்படும் மொழிப் பொருள் இயம்புக’ என்று உரைத்தான்
நாம் சொல்லும் அனைத்து வகை ஸ்தோத்திரங்களுக்கும், நான்கு வேதங்களின் ஓதுதலுக்கும் மணிமுடியாக இருப்பது ‘ஓம்’ என்னும் பிரணவமே. எனவே ‘ஓம்’ என்று உரக்கச் சொல்ல ஆரம்பித்த பிரம்மனை  ‘நிறுத்துங்கள்’ என்றார் முருகன். ஒன்றும் புரியாமல் விழித்தார் பிரம்மா.
‘‘முதலில் ஓம் என்பதற்கான பொருளைச் சொல்லுங்கள். அதன் பின் தாங்கள் ஓதும் வேதத்தைக் கேட்கிறேன்’’
முருகனின் பதிலால் பதட்டம் அடைந்த பிரம்மா, மந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்தார்.
‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து’’
‘‘என்ன சொல்கிறோம் என்பதை உணராமல் உதடுகள் மட்டும் ஒன்றை ஜபித்தால் அதன் மூலம் பூரணமான நிறைவைப் பெற்று விட முடியாதே’’
இதுகாலம் வரை ‘ஓம்’ என பலமுறை சொல்லியும் அதன் உட்பொருள் தெரியவில்லையே என்பதை எண்ணி பிரம்மா தனக்குள் வெட்கமும், வேதனையும் அடைந்தார். ‘குடிலை’  என்று கூறப்படும் ‘ஓம்’ என்னும் மந்திரத்தை தன் ஆறுமுகங்களில் ஒரு முகமாகக் கொண்டவர் முருகன் என்கிறார் கச்சியப்பர்.
ஓம் எனப்படும் குடிலையே ஒப்பிலா முருகன் மா முகத்துள் ஒன்றாம்.
முகத்தில் ஒன்றதா அவ்வெழுத்து உடையதோர் முருகன்
நகைத்து முன் எழுத்துக்கு உரை பொரும் என நவில
மிகைத்த கண்களை விழித்தனன் வெள்கினன் விக்கித்
திகைத்து இருந்தனன் கண்டிலன் அப்பொருள் திறனே.
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பீடமாகவும், அனைத்து மந்திரங்களுக்கும், வேதங்களுக்கு ஆதியாகவும், அந்தமாகவும், மற்ற தேவர்களுக்கெல்லாம் பிறப்பிடமாகவும், காசியில் இறக்கும் உயிர்களுக்கு எம்பெருமான் உபதேசிக்கும் தாரக பிரம்மமாகவும் விளங்கும் பிரணவ மந்திரத்தின் பொருளைப் பற்றி ஆராயத் தொடங்கினார் பிரம்மா.
ஈசன் மேவரு பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாசமாய்  எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க்கு எம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன் பயன் ஆய்ந்தான்.
காசியில் இறக்கும் உயிர்களின் காதில் காசி விஸ்வநாதரே பிரணவ மந்திரத்தை ஓதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புனிதம் செறிந்த பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் பிரம்மா திகைத்தார் என்பதற்காக நாம் அவரை ஏளனமாக எண்ணி விடக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார் கச்சியப்பர்.
துாமறைக்கு எல்லாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓம் எனப்படும் ஓரெழுத்து உண்மையை உணரான்
மாமலர்ப் பெருங்கடவுளும் மயங்கினான் என்றால்
நாம் இனிச் சில அறிந்தனம் என்பது நகையே!
படைப்புக் கடவுளான பிரம்மாவே அறியாமல் இருக்கும் போது மக்களாகிய நாம் அறிவில் சிறந்தவர்கள் என மார்தட்டுவது நகைப்பிற்கு உரியதல்லவா... சிவபெருமானைத் தவிர முற்றும் அறிந்தவர்கள் மூவுலகிலும் இல்லை என்பதைத் தெளிந்து அனைவரும் அடங்கி இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் கச்சியப்பர்.
பிரணவத்தின் பொருளைக் கூற முடியாமல் விழித்த பிரம்மாவின் நான்கு தலைகளிலும் தன் பன்னிரண்டு கைகளால் குட்டினார் முருகன். ‘வேதத்தின் ஆரம்ப எழுத்திற்கே பொருள் தெரியாமல் அதைக் கொண்டு படைப்புத் தொழிலைச் செய்வது எப்படி சாத்தியமாகும்? ஒரு துறையை நிர்வகிக்க வேண்டுமானால் அது பற்றிய விஷயங்களை ஆதியோடு அந்தமாக அறிந்திருப்பது  அவசியம் அல்லவா...
வீரவாகு தேவரைக் கூப்பிட்டார் முருகன். இருண்ட மனம் கொண்ட பிரம்மாவை சிறையில் தள்ளுங்கள் என ஆணையிட்டார்.
குமரகுருபரரின் கந்தர் கலி வெண்பாவிலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலும் பிரம்மாவைக் குட்டிச் சிறையில் அடைத்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படைப்போன் அகந்தை உரைப்ப
மறை ஆதி எழுத்தென்று உகந்த
பிரணவத்தின் உண்மை புகன்றிலையால்
சிருஷ்டித் தொழில் அதனைச் செய்வது எங்ஙன் என்று
முனம் குட்டிச் சிறை இருத்தும் கோமானே!
(குமர குருபரரின் கந்தர் கலி வெண்பா)
நாலுமுகன் ஆதியறியோம் என அதாரம்
உரையாத பிரமாவை விழமோதி பொருள் ஓதுக என
நாலு சிரமோடு சிகை துாளிபட தாளமிடும் இளையோனே!
(அருணகிரிநாதரின் திருப்புகழ்)
ஆணவத்திற்கும், அறியாமைக்கும் உரிய தண்டனை தந்தபின் உயிர்களைப் படைக்கும் சிருஷ்டித் தொழிலை தானே மேற்கொண்டார் முருகன்.  துறைரீதியான ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கினால் இடைக்காலத்தில் அத்துறை சார்ந்த கடமைகளை சிலகாலம் முதல்வரே ஏற்கும் முறைமையை அறிவோம் அல்லவா?
ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு ஒரு திருக்கரம் ஜபமாலையையும், ஒரு திருக்கரம் கமண்டலத்தையும் தாங்க மற்ற இரு கைகளில் வரதமும், அபயமும் வழங்க படைக்கும் தொழிலை மேற்கொண்டார் முருகன்.
ஒரு கரம் தன்னில் கண்டிகை வடம் பரித்து ஒரு தன்
கரதலந்தனில் குண்டிகை தரித்து இரு கரங்கள்
வரதமோடு அபயம் தரப் பரம்பொருள் மகன் ஓர்
திருமுகங் கொண்டு சதுர்முகன் போல் விதி செய்தான்!
உயிருக்கு உயிராகவும், பேரொளிப் பிழம்பாகவும், வேத மந்திர சொரூபமாகவும், ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்கட்கும் அதிபதியாக விளங்கும் ஆறுமுகப்பெருமான் படைக்கின்ற தொழிலைப் புரிவதில் வியப்பென்ன... என லட்சத்து ஒன்பான் வீரர்களும், இந்திரன், திருமால், தேவர்கள், ரிஷிகள் முதலானவர்களும் எம்பெருமானைச் சூழ்ந்து நின்று துதித்தனர்.
அகரமும் ஆகி அதிபனுமாகி
 – அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி
 – அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி
 – இனிமையும் ஆகி வருவோனே
இருநில மீதில் எளியனும் வாழ
_ எனது முன் ஓடி வரவேணும்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar