|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » விதியின் ரதங்களிலே மதியும் மயங்குதடா |
|
பக்தி கதைகள்
|
|
கிராமம் ஒன்றில் கிருஷ்ணதாசர் என்னும் ஏழை வேதியர் இருந்தார். அதே ஊரில் தனபாலன் என்னும் பணக்கார வியாபாரி ஒருவரும் இருந்தார். கிருஷ்ணதாசரின் மனைவி, வியாபாரியை உதாராணம் காட்டி கணவரை கையாலாகாதவர் என ஏளனம் செய்தாள். இதனால் கோபமுற்ற கிருஷ்ணதாஸ் பணம் சம்பாதிக்க வெளியூர் புறப்பட்டார். அவர் உச்சி வெயிலில் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. இந்த சம்பவத்தை வைகுண்டத்திலிருந்தபடி பார்த்தாள் மகாலட்சுமி. ‘‘சுவாமி... பக்தனான இருவருக்கு ஏன் இந்த அவலம்’’ என கேட்டாள். ‘‘இப்பிறவியில் செல்வத்தை பெறும் பாக்கியம் அவருக்கு இல்லையே’’ என்றார் மகாவிஷ்ணு. ‘‘நான் தானே செல்வத்திற்கு அதிபதி. வேண்டியளவு பொன்னை இப்போதே கொடுக்கிறேன்’’ ‘‘நீ கொடுத்தாலும் அவனால் அனுபவிக்க முடியாது’’ ‘‘கொடுப்பவள் மகாலட்சுமி சுவாமி. எப்படி கொடுக்கிறேன் என்று மட்டும் பாருங்கள்’’ என்றாள். ‘‘உன் விருப்பப்படி கொடு. ஆனால் இருமுறை மட்டுமே வாய்ப்பு தர வேண்டும்’’ என நிபந்தனை விதித்தார். பொன்மூடை ஒன்றை கிருஷ்ணதாஸ் செல்லும் வழியில் கிடக்கச் செய்தாள். குறிப்பிட்ட இடம் வந்ததும் அவரது மனதில் விபரீத எண்ணம் தோன்றியது. பார்வை இருந்தும் என்னால் வேகமாக நடக்க முடியவில்லையே. பார்க்கும் திறன் இல்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? என்ற ஆதங்கம் எழுந்தது. கண்களை மூடியபடி நடக்க ஆரம்பித்தார். அதற்குள் பொன் மூடையை கடந்து சென்றதும் கண்களைத் திறந்தார். அப்பாடா...பார்வை இல்லாவிட்டால் என்ன செய்வது? கண்களைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என எண்ணிக் கொண்டார். ‘‘தேவி... நீ கொடுத்ததை ஏற்கவில்லையே’’ என சிரித்தார் மகாவிஷ்ணு. இரண்டாவது வாய்ப்பாக கிருஷ்ணதாஸ் பார்க்கும் விதத்தில் பொன் மூடையை கிடக்கச் செய்தாள். அதை கண்டதும் ‘இவ்வளவு பொன்னும் யாருக்குரியதோ’ என எண்ணினார். உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என காத்திருந்தார். அப்போது அந்த வழியே தனபாலன் வியாபாரத்தை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கிருஷ்ணதாசை கண்டதும் மாட்டு வண்டியை நிறுத்தினார். பணக்காரரான தனபாலனே உரிமையாளர் எனக் கருதி பொன்மூடையை ஒப்படைத்தார். புதையல் கிடைத்தது போல மனதிற்குள் மகிழ்ந்தார் தனபாலன். ஒரு நல்ல செயலை செய்து விட்டதாக கருதி கிருஷ்ணதாசருமு் பயணத்தை தொடர்ந்தார். ‘‘பார்த்தாயா தேவி! நீ கொடுத்தாலும் அதை அனுபவிக்க இவரால் இயலவில்லை. அதுதான் முன்வினைப்பயன். விதியின் ரதங்களில் மதியும் மயங்கி நிற்கும்’’ என்றார் மகாவிஷ்ணு. ‘‘சுவாமி...அவரவர் செய்த புண்ணிய, பாவத்திற்கு ஏற்ப வாழ்வில் சுக, துக்கம் உண்டாகும் என்பது புரிந்தது’’ என்றாள் மகாலட்சுமி.
|
|
|
|
|