|
என்றும் எப்போதும் புதுமையாக விளங்குவது எதுவுமே கிடையாது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு பொருளையோ அல்லது உடையையோ வாங்குகிறோம் என்றால் அந்த நேரத்தில் தான் அதைப் புதியது என்று மகிழ்ச்சியுடன் சொல்ல முடியும். அடுத்த நிமிடமே அது பழையதாகப் பெயர் பெற்று விடும். நவம் என்றால் புதுமை. ‘ப்ர’ என்றால் விசேஷமானது. எனவே பிரணவம் என்றால் விசேஷமான புதுமை. என்றும், எப்போதும், எக்காலத்தும் புதியதாகவே விளங்கும் ‘ஓம்’ என்னும் உயரிய மூல மந்திரம். விநாயகர், அம்பிகை, அனுமன் என அனைத்து தெய்வ வழிபாட்டிலும் 108 முறை சொல்லும் போதும் ஒவ்வொரு போற்றிக்கும் ‘ஓம்’ என்பதை சேர்த்தே சொல்ல வேண்டும். ஏனெனில் அப்போது தான் அவை புதியதாகப் பொலியும். தேன் தானும் கெடாது. தன்னில் ஊறிய பொருட்களையும் கெட விடாது. அப்படி ஒரு மேலான பெருமை பிரணவத்திற்கு இருக்கிறது. அ, உ, ம என்னும் மூன்றெழுத்தின் கூட்டே ஓம். காலியாக இருக்கிற பானையை காதருகில் வைத்தால் ‘ஓம்’ என்றே ஒலிக்கும். சத்தம் அதிகமிருக்கும் கடைவீதியின் ஓலமும், ஓம் என்றே கேட்கும். ஒன்றும் இல்லாத சூன்யத்திலும் ஓங்காரம். அனைத்தும் நிறைந்த போதும் ஓம். இப்படி பல பெருமைகள் கொண்ட பிரணவத்தின் பொருளை மழலை மொழியில் குமரன் சொல்ல தந்தை கேட்டு அடைந்த இன்பம் தனிச்சிறப்பு அல்லவா? ‘‘மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு’’ ‘ஐந்தும் இரண்டும் சேர்ந்தால் ஆறு’ என்று தவறாகப் பிள்ளை சொல்லும் போதே ‘ஆகா... ரொம்ப ஜோரு’ என்று பெற்றோர் மகிழும் போது சிவபெருமான் அடைந்த இன்பத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியுமா?
தந்தைக்கு முன்னம் தனிஞானவாள் என்று சாதித்தருள் கந்த சுவாமி
என்று கந்தர் அலங்காரத்திலும்
நாதா குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பதசேகரனே!
என்று கந்தர் அனுபூதியிலும் அருணகிரிநாதர் பாடுகின்றார். ‘முத்து’ என்று முருகனே முதலடி எடுத்துக் கொடுக்க ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ என சரமாரியாக சந்தத் தமிழ் பொழிந்தார் அருணகிரிநாதர். அப்படிய பாடிய முதல் பாட்டிலே முருகனின் புகழுக்குரிய செயலாக அவர் புகழ்ந்து முன்னிலைப்படுத்தியது அடியார்களுக்கு அருள் புரிந்ததையோ தேடிச் சென்று வள்ளி நாயகியை திருமணம் செய்ததையோ, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நுாற்றி எட்டு யுகங்கள் ஆட்சி செய்த சூரனை வேலால் அழித்ததையோ அல்ல. தந்தைக்கு முருகன் புரிந்த பிரணவ உபதேச நிகழ்வையே பிரதானப்படுத்தி போற்றுகிறார். ‘முக்கட் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து’ ராமாயணத்தில் சிறப்பிடம் பெறுவது சுந்தர காண்டம். மகாபாரதத்தில் பெரிதும் பேசப்படுவது கிருஷ்ணன் துாது. கந்தபுராணத்தில் மணிமுடியாகத் திகழ்வது பிரணவ உபதேசமே! பிரணவ உபதேசம் புரிந்த முருகனை சுவாமிநாதன், குமர குருபரன், அப்பாசாமி, பரமகுரு என இந்திரன், திருமால், பிரம்மன், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் போற்றினர். தந்தையை விட மகன் மேலான நிலையில் விளங்கும் குடும்பத்தையே சான்றோர்கள் ‘தலைமுறை ஒளிர்க’ என விரும்பி வாழ்த்துகிறார்கள். சிவபெருமானையே துதித்து மகிழும் தேவார ஆசிரியர்கள் கூட முருகனின் தந்தை சிவபெருமான் என்று குறிப்பிடுவதில் மகிழ்கிறார்கள். ‘செந்துர் மேய நம் வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்!’ என்று மகனைக் குறிப்பிட்டு மகாதேவனைப் புகழ்கிறார்கள். தந்தையை விட புதல்வன் எப்படி புகழ் பூத்து பொலிகின்றார் என்று பார்ப்போமா? சிவனுக்கு ஐந்து முகம், முருகனுக்கு ஆறுமுகம் சிவனின் மூலமந்திரம் ஐந்தெழுத்து – நமசிவய என்னும் பஞ்சாட்சரம் முருகனின் மூலமந்திரம் – ஆறெழுத்து – சரவணபவ என்னும் சடாட்சரம் தந்தைக்கு பஞ்சபூதத் தலங்கள், மைந்தனுக்கோ ஆறுபடை வீடுகள் தந்தை சுவாமி மகனோ சுவாமிநாதன் அப்பா – ப்ரமண்யன் மகன்– சுப்ரமண்யன் கந்தனை வந்தனை செய்பவர்கள் குடும்பத்தில் தலைமுறை செழிக்கும் என்கிறது சாஸ்திரம். ஈசனுக்கே ஞான உபதேசம் நிகழ்த்திய செய்தி அகத்திய முனிவரின் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. கந்தகிரிக்கு ஓடி வந்து முருகனைப் பணிந்தார். ‘தந்தையாருக்கு விரித்துரைத்த தாரக மந்திரப் பொருளை அடியேனுக்கும் உணர்த்தியருள்க’ என வேண்டினார். அகத்தியம் என்றால் ‘இன்றியமையாதது’ என்று பொருள். இன்றியமையாத செந்தமிழ் முனிவர் அகத்தியர் சிவனோடு ஒருசேர வைத்து சிந்திக்கத்தக்கவர். முனிவரும் முருக உபதேசம் பெற்றார். சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே முருகன் அடியார்களில் அருணகிரிநாதர் முதன்மை பெறுகிறார். நக்கீரர், கச்சியப்பர், குமரகுருபரர், ராமலிங்க அடிகளார், பாம்பன் சுவாமிகள் முதலான பல அருளாளர்கள் ஆறுமுகனைப் பற்றி துதிநுால்கள் பாடியிருந்தாலும் ஆறுமுகப்பெருமானை நினைத்த அடுத்த வினாடியே அருணகிரியாரின் திருப்புகழ் தான் நம் நினைவில் வருகிறது. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் ஆறுமும் தோன்றும் அழகிய வேல் தோன்றும் அவன் ஏறுமயில் தோன்றும் எழில் தோன்று ம் – சீறிவரு சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப் பாரில் வழுத்தினோர் பால். முருகப்பெருமானின் அடியார்களுள் அருணகிரிநாதர் முதலில் நிற்க காரணம் என்னவெனில் சிவபெருமான், அகத்தியர் போல அவரும் கந்த பெருமானிடம் பிரணவ உபதேசம் பெற்றவர்.
வேலா சரணம்! சரணம்! என் மேல் வெகுளாமல் இனி மேலாயினும் கடைக்கண் பார்! பருப்பத வேந்தன மகள் பாலா குறுமுனியார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும் ஆலாலம் உண்டவர்க்கும் உபதேசித்த என் ஆண்டவனே!
உலகக் கோப்பை போன்ற ஒரு மாபெரும் பரிசை எல்லோருக்கும் தந்து விட முடியுமா? பிரணவ உபதேசம் என்பது பெறுவதற்கு அரிய ஞானப் பெட்டகம். முருகன் அந்த பரிசை மூவருக்குத் தான் வழங்கினான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என்னும் மூன்று விதமான பிரிவினர் உலகில் உள்ளனர். இதில் தேவர்களில் உயர்ந்து நிற்கும் சிவனுக்கும், முனிவர்களில் முதன்மை பெறும் அகத்தியருக்கும், மனிதர்களில் புனிதரான அருணகிரியாருக்கும்! இந்த மூன்று பரிசாளர்களிலும் முதன்மை பெற்றவர் யார் எனப் பார்த்தால் அருணகிரிநாதரே! ஏனெனில் தேவர், முனிவர் இவர்களுக்கு இணையாக மனிதர் ஒருவர் உயர்ந்துள்ளது மகத்தான செயல் அல்லவா! வாக்கிற்கு அருணகிரி! வாழ்க்கைக்குத் திருப்புகழ் என்பார்கள். தான் பெற்ற பிரணவ உபதேசம் குறித்து பிரமிக்கத் தக்க வகையில் சந்தம் முந்தும் செந்தமிழில் அருணகிரிநதார் அருளியுள்ள அற்புதச் சொற்பத திருப்புகழை அனுபவித்து மகிழ்வோம்!
அகரமுதல் என உரை செய் ஐம்பந்தொர் அட்சரமும் அகில கலைகளும் வெகுவிதம் கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும் அடங்கும் தனிப்பொருளை எப்பொருளும் ஆய அறிவை அறிபவம் அறியும் இன்பம் தனை துரிய முடிவை அடிநடு முடிவில் துங்கம் தனைச் சிறிய அணுவை அணுவின் மலமும் நெஞ்சும் குணத்ரயமும் அற்றதொருகாலம் நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை நிகர் பகர அரியதை விசும்பின் புரத்ரயம் எரித்த பெருமானும் நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மெளன மந்தரத்தனைப் பழைய நினது வழி அடிமையும் விளங்கும் படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே. ................ தொடரும் ....................
|
|
|
|