|
கிஞ்சன்வாடி என்னும் கிராமத்தில் கேசவதாசர் என்ற பாகவதர் கதாகாலட்சேபம் செய்து வந்தார். பாண்டுரங்கனின் அடியவரான துக்காராம் அவருக்கு தட்சணை கொடுக்க விரும்பி பணம் வசூலிக்க சிலரை ஏற்பாடு செய்தார். மாதவன் என்னும் வியாபாரியிடம் நன்கொடைக்கு சென்ற போது, ‘எப்ப பாரு பஜனை, கதாகாலட்சேபமுன்னு துக்காராம் ஊரைச் சுத்துறாரு. போதாக்குறைக்கு கேசவ தாசரும் அவரோடு சேந்துட்டாரு. அவங்களை நம்பி இப்படி ஊரை சுத்துறீங்களே’’ என ஏளனம் செய்தார். இருந்தாலும் மாதவனுக்கு மனதில் ஒரு சந்தேகம். தான் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி நன்கொடை அளித்தால் என்ன செய்வது எனக் கருதி பரண் மீது கிடந்த அலுமினியப் பாத்திரம் ஒன்றை காட்டி, ‘உங்களுக்கு கொடுப்பதற்காகவே இதை என் மனைவி எடுத்து வைத்திருக்கிறாள் போலிருக்கு. இதை துக்காராமிடம் கொடுங்கள்’ என்றார். அவர்களும் துக்காராமிடம் ஒப்படைத்தனர். ‘மாதவனின் மனைவிக்கு பாண்டுரங்கன் மீது பக்தி அதிகம். அந்த உத்தமி கொடுத்த அலுமினியப் பாத்திரம், தங்கப் பாத்திரத்திற்கு இணையானது’ என்றார் துக்காராம். அப்போது பாத்திரம் தங்கமாக மாறியது. விஷயம் ஊரெங்கும் பரவியதால் மாதவன் ஓடோடி வந்தார். ‘என் மனைவியை ஏமாற்றி, தங்கப் பாத்திரத்தை வாங்கி விட்டீர்களே. அதை திருப்பித் தாருங்கள்’ என்றார். மறுப்பின்றி துக்காராம் எடுத்துக் கொடுத்தார். மாதவன் கைக்கு வந்ததும் பழையபடி அலுமினியமானது. திகைப்புடன் அதை துக்காராமிடமே ஒப்படைக்க மீண்டும் தங்கமானது. ‘‘மாதவா...தர்ம சிந்தனையுடன் உன் மனைவி கொடுத்தததால் பாத்திரம் தங்கமானது. மனிதன் சம்பாதிக்கும் பணத்திற்கு நான்கு பங்காளிகள் இருக்கின்றனர். வரி மூலம் அரசு வசூல் செய்கிறது. இயற்கைச் சீற்றத்தால் இழப்பு ஏற்படுகிறது. சக மனிதர்களால் தீங்கு ஏற்படுகிறது இவற்றை தவிர்க்க தர்மவழியில் செலவு செய்யலாம் இவற்றை தவிர்க்க விரும்பினால் நான்காவதான தர்மவழியில் செலவு செய்ய வேண்டும். இந்த நான்கில் ஒன்றுக்கு பணம் போய்ச் சேர்ந்தாக வேண்டும். தர்மம் இருக்குமிடத்தில் தீமை எதுவும் நெருங்காது. அதன் பலன் இறப்புக்கு பின்பும் மனிதனைத் தொடரும்’’ என்றார் துக்காராம். மனம் திருந்திய மாதவன், ‘‘இனி என் பணத்தை எல்லாம் தர்மத்திற்கு கொடுப்பேன்’ என உறுதியளித்தார்.
|
|
|
|