|
மாணவன் ரவிக்குமார் தன் சந்தேகத்தை போக்க ஒருநாள் ஆசிரியர் பூமிநாதனை சந்தித்தான். ‘‘ ஐயா... எண்ணம் போல் நம் வாழ்க்கை என்கிறார்களே...அது எந்தளவுக்கு உண்மை’’ எனக் கேட்டான். ‘‘நான் சொல்லும் கதையைக் கேட்டால் காரணம் புரியும். மன்னர் ஒருவர் மந்திரியுடன் நகர்வலம் சென்றார். வழியில் சந்தனக் கட்டை விற்கும் வியாபாரியைக் கண்டதும் அவரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் மன்னரின் மனதில் தோன்றியது. அதையறிந்த மந்திரி சாதுர்யமாகப் பேசி மன்னரை அரண்மனைக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் வியாபாரியிடம் சென்று, ‘‘என்னப்பா! உன் வியாபாரம் எப்படி இருக்கிறது’’ என விசாரித்தார். ‘‘ ஒன்றும் சரியில்லை...சந்தனக்கட்டை வாங்க ஆளே வரவில்லை. மன்னர் குடும்பத்தில் சாவு நேர்ந்தால் தான் எனக்கு பிரச்னை தீரும். ஈமச்சடங்குக்கு என்னிடம் உள்ள சந்தனக்கட்டை எல்லாம் விற்று தீரும்’’ என்றார். மந்திரிக்கு சட்டென்று பொறி தட்டியது. வியாபாரியின் எண்ணமே மன்னரின் மனதை பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தார். முதல் தரமான சந்தனக்கட்டைகளை அவரிடம் விலைக்கு வாங்கினார். அரண்மனைக்குச் சென்று, ‘‘மன்னா! அந்த மரவியாபாரி சந்தனக்கட்டையை அன்பளிப்பாக உங்களுக்கு கொடுத்தனுப்பினார்’’ என்றார் மந்திரி. ‘‘ அடடே... நான் அவரை மிக மோசமாக அல்லவா மனதிற்குள் எண்ணி விட்டேன்’’ என வருந்தியதோடு, பொற்காசுகளை பரிசாக கொடுத்தும் அனுப்பினார். வியாபாரியைச் சந்தித்த மந்திரி, ‘‘மன்னருக்கு பிடிக்குமே எனக் கருதி சந்தனக் கட்டைகளை வாங்கிச் சென்றேன். அதன் தரம், மணத்தைக் கண்டு மகிழ்ந்த மன்னர் பொற்காசை பரிசனுப்பியுள்ளார்’’ என்றார். வியாபாரிக்கு கண்ணீர் வந்தது. ‘இப்படியொரு நல்ல மனிதரைப் போய் சாக வேண்டுமே என எண்ணி விட்டேனே என நொந்தார். தீய சிந்தனைக்கு ஒருபோதும் இடம் தர மாட்டேன் என உறுதி கொண்டார் என்று சொல்லி முடித்தார் ஆசிரியர். இதைக் கேட்ட ரவிக்குமாருக்கு உண்மை புரிந்தது. ‘‘எண்ணங்களே நம் வாழ்வின் போக்கை தீர்மானிக்கிறது. மனதில் நல்ல எண்ணம் இருந்தால் அதுவே மற்றவர்களிடம் எதிரொலிக்கும். மாறாக தீய எண்ணம் தீமையை வரவழைக்கும். இதையே ‘அறம் செய விரும்பு’ என்றார் அவ்வையார். திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற’ என்றார்.
|
|
|
|