Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குஷ்மண்டா துர்கா
 
பக்தி கதைகள்
குஷ்மண்டா துர்கா

செக்கச் செவேலென்ற தீப்பிழம்பு, சிவப்பின் உச்சமான நெருப்புக் கோளம், வானம் தொட்டு விடுவது போல நிமிர்ந்தெரியும் தீக்குண்டம். அந்தத் திருக்கோயிலை எப்படிச் சொல்ல? அந்த சக்தியின் நெருப்பாய் உள்ள நீள்பரப்பை எப்படிச் சொல்ல?
கோயிலின் வாசலில் போய் நின்றேன். வெளியிலிருந்தே திருத்தலத்தின் அதிர்வலைகள், மவுனச் சேதிகள், சுகந்தக் காற்று, செம்மையின் தீட்சண்யம் எல்லாவற்றையுமே கண்ணகல, மனசகல, உயிர்கல, உணர்வகல, உன்மத்தம் பொங்கப் பார்த்தேன். எனக்கு இரண்டு கண்கள்தானே இருக்கின்றன... இன்னும் நுாறு கண்கள் இருந்தாலும் போதாது என்கிற அளவுக்கு சக்தியின் தலமே அழகோவியமாக இருக்கிறதே... அடடா.. அடடா... இன்னும் நுாறு ஜென்மங்கள் எடுத்தாலும் இத்தனை உன்னதத்தை உயிருக்குள். உயிரின் மூலத்துக்குள் முழுமையாக அப்பிக் கொள்ள முடியமா? பூசிக் கொள்ள முடியுமா? என்கிற ஊசலாட்டம் எனக்குள். கை விரல்களின் நடுக்கம் எதனால்? மனதின் உருக்கம் எதனால்? கண்ணில் அதற்குள்ளாகப் பூத்திருக்கும் நீர்த்துளிகள் எதனால்? ஒரு திருக்கோயிலின் வெளிப்புறமே இத்தனை அதிர்வலைகளை உருவாக்க முடியுமா? இத்தனை பரபரப்பை உருவாக்க முடியுமா? கேள்விகள் உருண்டு தொண்டையை அடைத்தன.
ஆமாம். நெகிழ்ச்சி தருகிறது கோயிலின் வெளிப்புறம். அந்த விஸ்வரூபத்தின் முன்னால் நாம் வடிவமற்ற துாசு. ஒன்றுமற்ற உயிர்க்கோளம். வம்பிலும், வழக்கிலும், வெட்டிப் பேச்சிலும், பொருண்மையற்ற புளகாங்கிதத்திலும், அர்த்தமற்ற புல்லரிப்பிலும் நேரத்தை வீணாக்குவதையே வாழ்க்கை என பெயரிட்டுக் குழப்புகிறோம். குழம்புகிறோம் எனப்புரிந்தது.
அது வாரணாசி. அது தேவி பீடம். குஷ்மண்டா துர்கா கோயில். கு + உஷ்மா + அண்டாதான் குஷ்மண்டா. சிறு + சக்தி + முட்டை சிறு உயிர் முட்டை. சிறு கருமுட்டை என்பதாகப் பொருள்படும் சக்தி ஆலயம். சின்னஞ்சிறிய சக்தி கோளம் மூலமாகப் பெரிய பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும் தாய். எட்டு கைகளோடு, அஷ்டபுஜ நாயகியாய் சிங்கப் பெண்ணாகி நிற்கும் தாய். பூசணிக்காய் சிதறுவதைப் போல நமது இழிவுகள், கழிவுகள் எல்லாம் உடைந்து சிதற, ஆணவம் சிதற, மாயை சிதற, நம் பிறப்பின் மூலத்தை நமக்குணர்த்தும் தாய் – வேறு யார்? குஷ்மண்டா தாய் மட்டுமா? நம் வீட்டின் பெண்களும் குஷ்மண்டா தாய் தானே?
அவர்களும் உயிர்ப்பிக்கிறார்கள். அரூபமான எட்டு கைகளோடு உலக இயக்கத்தை செழிப்பிக்கிறார்கள். தியாகமும், மன்னிப்பும், அன்பும், பாசமும் நிறைந்து உலகின் தவறுகளைப் பொடிப்பிக்கிறார்கள். எனில் நம் தாய், தமக்கை, தங்கை, மகள், பேத்தி எல்லோரும் வாரணாசி குஷ்மண்டா தேவியின் அவதாரமே..
கோயிலுக்குள் நுழைந்தால் இது தான் புராணம், இதிகாசங்களில் நாம் கேட்ட தேவலோகமா? எதைப் பார்க்க? எதைத் தொடர? என்ற சிந்தனை மேலோங்கும். வெள்ளை வெளேர் என்று ஜில்லிப்பான பளிங்குத்தரை கோயில் முழுக்க இருக்கிறது.
சுற்றிச் சுற்றி எந்தப் பக்கம் பார்த்தாலும் செக்கச் செவேலென்ற வடிவமைப்பு. நமக்கு வலப்புறம்,  இடப்புறம், முன்புறம், . பின்புறம் எங்கும் சிவப்புப் பிரகாரம் நிமிர்ந்தால் தங்கக் கலசத்தோடு ஊசிக் கோபுரங்கள் செக்கச் செவேலென்று கொடி பறக்க.
எல்லாப் பிரகாரங்களும் அரண்மனை அமைப்பில் மஞ்சள் வண்ணத்துாண்கள். ஜிலுஜிலுவென்று மஞ்சளும் சிவப்புமான பட்டுத்துணிக் கொடிகள் ஜரிகை மின்னக் காற்றில் அசைகின்றன. வங்காள மகாராணியார் அகல்யா பாய் – சமூகத்துக்காகத் தந்த அருட்கொடை இந்தக் கோயில். மூன்று நுாற்றாண்டுகள் கடந்து விட்ட போதும் இன்னமும் சிவப்பு சூரியனாகத் தகதகக்கும் கட்டடக்கலை மாயம் இந்தக் கோயில்.
சிங்கத்தின் மீதமர்ந்த சுயம்புவாக வெளிப்பட்டவள் குஷ்மண்டா துர்கா. எட்டு கைகளில் வில், அம்பு, கமண்டலம், தாமரை, சங்கு, சக்கரம், தேன்கூடு, மந்திர மாலையுடன் காட்சியளிக்கிறாள். தேவியின் தோற்றம் முழுக்க ஆபரணங்களால், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணக் கண் கோடி வேண்டும்.  நாம் காணும் தேவி தரிசனம் இன்னும் பல பிறவிகளுக்கும் தொடரும் ஜென்மாந்திர பந்தம். செக்கச் செவேலென திருமுகம், கனலும், அனலும் தெறிப்பதான திருக்கண்கள்... ஆஹா.. ஆஹா.. வேறென்ன வேண்டும் தாயே... எல்லா உயிரிலும் இருப்பவள் நீயே...
குஷ்மண்டா துர்கா கருவறை வடிவமைப்பு சமத்துவத்தின், சமூகநீதியின் இருப்பிடம். சக்தி உள்ளேயிருக்க, பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வெளியே இருக்க தரிசிக்க வருபவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி பூக்கள் தரும் பெருந்தன்மை நெகிழ்ச்சி தருகிறது.
மொழி வேறு, மக்கள் வேறு, நிலம் வேறு, நீர் வேறு. ஆனாலும் காசியின் காற்றும் தென்னகத்தின் காற்றும், பிரபஞ்சத்தின் காற்றும் ஒன்றுக்கொன்று மாறுபடாமல் இரண்டறக் கலப்பது போல் மனம் குஷ்மண்டா துர்காவோடு கலக்கிறது.
நெருக்க உணர்வுக்குத் தேவை எளிமையும் நேர்மையும் தானே? அதை வாரணாசி குஷ்மண்டா துர்கா கருவறையில் உணரலாம். வேறு கலாசாரம், வேறு பாரம்பரியம் மக்கள் நிறைந்த பிரகாரம். எல்லோரிடமும் ஒன்றாயிருந்தது பக்தி, அன்பு மட்டுமே.
படிப்படியாகப் பல தளங்கள். மாடங்கள். நீளமான பிரகாரங்கள் எல்லாமே அரச பரம்பரையின் மாளிகைகளின் வார்ப்படத்தில் இருந்தாலும், காற்றில் மிதக்கும் சுகந்தம் துர்கா தேவி போல சுந்தரமானது.
ஒவ்வொரு முகமும் ஓராயிரம் கதை சொல்லின. பிரகாரம் சுற்றியவர்களை ஓரமாக உட்கார்ந்து உற்று நோக்கினேன். நெஞ்சுக்குள் சிரித்தாள் குஷ்மண்டா.
‘‘கேள்வி ஏதும் இல்லையா மகளே?’’
‘‘கேள்விகள் அற்ற மனோநிலை இப்போது தாயே... உன்னைப் புரிந்து கொள்வதை மவுனம் மூலமாகச் செய்ய விருப்பம்’
‘‘உன் மவுனம் பேரழகு மகளே’’
அம்மை என்னிடமிருந்து வார்த்தையை இழுக்கிறாள் என்பது புரிந்தும் புரியாமலும் சொன்னேன்.
‘‘உன் பேரழகு தரும் மவுனம் அது தாயே உன் அழகைக் காண ஓராயிரம் கோடிக் கண்கள் வேண்டும் தாயே’’
‘‘ஏன் கண்ணால் பார்க்கிறாய் மகளே... மனதாலும், உயிராலும் உணர்ந்திடு’’
சட்டென்று நிர்மலமானது மனம். ஆழம், அகலம், குளிர்மை நிறைந்த துர்கா நீர்க்குளம் போல தெளிவு பெற்றது மனசு.
மெதுவாகப் படிகளில் ஏறிப் பிரகாரத்தில் நடந்தேன். இது எந்த இடம்? இது பூமியின் எந்தப்பகுதி? இது யாரின் நீட்சி? இது யாரின் காட்சி? ஏதோ ஒரு மாயச் சுழற்சியில் மனசு மயங்கிக் கிறங்கி நடந்தேன். தலையோடு காலாகப் புல்லரித்தது உயிர்.
மனசுக்குள் – குளத்தின் நீர்த்திவலைகள் நீர்த்துளிகள், நீர்க்குமிழிகள் எல்லாம் ஒருசேர முகிழ்த்தன. உள்முகமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது மனசுக்குள் துர்கா நீர்க்குண்டம் அலையடித்தது. மெல்லிய காற்று நீர் அலைகளை அசைத்தது. சிவப்பு கொடிகள் அசைந்தாடின. நுாறாயிரம் கோடி அகல் விளக்குகளை ஒரு சேர ஏற்றியது போல மனசுக்குள் வெளிச்சம். நீரைக் கிழித்து செஞ்சூரியனாக மெல்ல மேலெழும்பியது ஒரு திருமுகம்.
குஷ்மண்டா துர்காவின் செம்முகம். நெருப்புக் கோளமான கண்கள். தகதகக்கும் மூக்கு வளையம், ஜொலிக்கும் துர்கா மனம் என்னும் குளத்திலிருந்து மேலெழும்பிச் சிரித்தாள்.
‘‘உணர்ந்தாயா மகளே...?’’
ஆயிரம் மின்னல்கள் சேர்ந்து எனக்குள் பாய்ந்தன. அங்கே, இங்கே, எங்கே என்று அலைபாய்வதை விட உள்ளுக்குள் தேடு என்பதான மூலமந்திரம் புலப்பட்டது இப்போது.
எழுந்தேன்.
‘‘தாயே... தாயே...’’
கருவறையில் விழுந்து வணங்கினேன்.
‘இப்போது நான் உனக்குள்ளே... போய் வா மகளே...’’
வாரணாசித் தாயைப் பிரிய மனமின்றி வெளியே வந்தேன்.
வாசலிலேயே ஒருபெண் கைகூப்பி வணங்கிக் கண்ணீர் மல்க நெகிழ்ந்த காட்சி பார்த்தேன். கையில் ஒரு கோலைத் தட்டித்தட்டி நடக்க ஆரம்பித்தாள்.
சுர்ரென்றது எனக்கு. ‘நீ துர்கா தேவியைப் பார்த்தாயா?’ ‘க்யா ஆப்னே துர்கா தேவிகோ தேக்கா?’
‘ஹாங்.. ஹாங்... தேவி மேரே தில் மே ேஹ... தில் சே தேக்கா...’ தேவி என் மனசுக்குள் இருக்கிறாள்... அவளை மனசால் பார்த்தேன்...’’ சிரித்துச் சொல்லி நகர்ந்தாள்.
கண்ணால் பார்ப்பது காட்சி. மனசால் பார்ப்பதே மாட்சி என மனசுக்குள் சிரித்தாள் குஷ்மண்டா துர்கா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar