|
‘வாக்கிற்கு அருணகிரி’ என்று புலவர் பெருமக்களால் புகழப்பெற்ற அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் ‘பரமசிவனின் புதல்வனே’ என்று அழைப்பதைக் காட்டிலும் ‘திருமாலின் மருகனே’ என்று அழைப்பதில் தான் திருப்தி அடைகிறார். ‘மாலோன் மருகனை’ என்று முதலில் சொல்லி பிறகு தான் ‘மன்றாடி மைந்தனை’ என்று சொல்கிறார். சைவ, வைணவ பேதம் தலைதுாக்கி இருந்த பதினைந்தாம் நுாற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் சிவ, விஷ்ணு வேறுபாடு அறவே நீங்கும் வண்ணம் சமஷ்டி தெய்வமாக – ஒருமித்த மூர்த்தியாக முருகப்பெருமானை உயர்த்தினார். கணபதியின் தம்பி, அம்பிகையின் புதல்வன், சிவகுருநாதன், திருமால் மருகன் என்று தாம் பாடிய திருப்புகழின் ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் ‘பெருமாளே, பெருமாளே’ என்று சமரச நோக்கில் சண்முகனைப் புகழ்ந்தார். முருகப்பெருமானைத் ‘திருமால் மருகன்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்? அதற்குரிய புராண வரலாறு என்ன? என்பதைக் கந்தபுராணம் பாடிய கச்சியப்பர் பிரணவ உபதேசப் படலத்திற்குப் பிறகு விரிவாக விவரிக்கின்றார். ‘ஞாலம் ஏற்றி வழிபடும் ஆறுபேர்க்கு மகவென நாணல் பூத்த படுகையில் வருவோனே! ‘நாத போற்றி!’ என முதுதாதை கேட்க அனுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே! என்று பாடுகிறார் அருணகிரியார். சரவணப்பொய்கையில் தாமரை மலர்களில் தவழ்ந்த ஆறுமுகக் குழந்தையின் அழகை மீண்டும் மீண்டும் பார்த்தும் திருப்தி ஏற்படவில்லையாம் திருமாலுக்கு! பொதுவாகக் கடவுளர்களில் கண்ணிற்கு மிக அழகாக பூரண அலங்காரங்களோடு பொலிபவர் பெருமாள்தான் என்பதை நாம் அனைவருமே அறிவோம். ‘மையோ! மரகதமோ! மறிகடலோ! மழை முகிலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்’’ என்று கம்பரும் ‘நீலமேனி ஐயோ! என் நெஞ்சினை நிறை கொண்டதே! என்று ஆழ்வாரும் பெருமாளின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லையே என்று ஏங்குகிறார்கள். ‘‘அலங்காரப் ப்ரியே விஷ்ணு’ என்று வடமொழியிலே ஒரு வாசகமே உண்டு. ஆனால் அப்படிப்பட்ட சுந்தர ரூபரான திருமாலே ஆறுமுகக் குழந்தையின் அழகிலே மயங்கித் திளைத்தார். அவரின் இதயம் நிறைந்தது. எனவே அவரின் இரு கண்களில் இருந்தும் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது. அத்துடன் நின்றுவிடவில்லை. பேரானந்தக் கண்ணீர் பெருக்கிலிருந்து இரண்டு பெண்கள் தோன்றினர். ஒருத்தி அமிர்தவல்லி. இன்னொருத்தி சுந்தரவல்லி. இவர்கள் இருவரும் தான் தெய்வயானை, வள்ளி என்று பெயர் பெற்று முருகப் பெருமானைத் திருமணம் செய்து கொண்டனர். திருமாலின் பெண்குழந்தைகளை மணம் புரிந்து கொண்டதால் திருமுருகன் திருமாலுக்கு மாப்பிள்ளை ஆனார். அந்த காரணத்தினால் ‘திருமால் மருகன்’ என்று அழைக்கப்படுகிறார். ‘தேவியர் இருவர் முருகனுக்கு! திருமால் அழகன் மருகனுக்கு! ‘அமிர்தவல்லியும், சுந்தரவல்லியும் கந்த பெருமானே எங்களின் கணவராக அமைய வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தபடி சரவணப்பொய்கை அருகே பல காலம் தவம் இருந்தனர். அவர்களின் தவத்திற்கு இரங்கிய முருகப்பெருமான் காட்சி தந்து அருளினார். ‘எழுதரிய ஆறுமுகமும், அணிநுதலும், வைரமிடை இட்டுச் சமைந்த செஞ்சுட்டிக் கலன்களும் – துங்கநீள் பன்னிரு கருணைவிழி மலரும் இலகு பதினிருகுழையும் ரத்னக் குதம்பையும் பத்ம கரங்களும் – செம்பொன் நுாலும் மொழிபுகழும் உடைமணியும் அரை வடமும் அடிஇணையும்’ கந்த பெருமானின் பாதங்களைக் கண்ணில் ஒற்றி இருவரும் வணங்கினர். ‘எம்பெருமானே! உங்களை நாயகராக அடைய வேண்டும் என்று விருப்பப்பட்டே தவம் புரிகின்றோம். திருக்காட்சி தந்த தாங்கள் எங்களைத் திருமணம் செய்து கொள்ள திருவருள் புரிய வேண்டுகின்றோம்’ நாணம் மேலிட திருமாலின் புதல்வியர்கள் மொழிந்ததைக் கேட்ட முருகப்பெருமான் புன்முறுவல் பூத்தார். இருவரையும் நோக்கி ‘நீங்கள் இருவரும் நான் சொல்லும் இடங்களுக்குச் செல்லுங்கள். அங்கே தக்கபடி உங்களை வளர்ப்பார்கள். உரிய காலத்தில் நேரிடையாக வந்து முறைப்படி உங்கள் மணந்து கொள்கிறேன்’ என்றார். திருமாலின் புதல்வியர்கள் இருவரும் தவம்புரிந்து திருமண வரத்தை வேண்டும் பொழுது கருணை மிகுந்த கந்தவேள் ஏன் காலம் தாழ்த்துகிறார் என்பதன் காரணத்தை அறிந்து கொள்வோம். தெய்வம் தனித்து இருக்கும் காலத்தில் தான் புராணங்களில் வதம் நிகழும். கருணைக்குரிய சக்தியை உடனாக வைத்துக் கொண்டு சம்ஹாரம் செய்ய முடியாது. சூரபத்மனின் கூட்டத்தை அடியோடு அழித்தபின் தான் தெய்வயானை, வள்ளியை (அமிர்தவல்லி, சுந்தரவல்லி) மணம் புரிய வேண்டும் என்று எண்ணியே காலம் தாழ்த்தினார் கந்தபெருமான். சிவபெருமான் பார்வதியை மன்மத தகனம் முடிந்த பின்பே மனைவியாக ஏற்றார். இராமபிரானும் சீதாதேவியைப் பிரிந்த பின்பே இராவணவதம் நிகழ்த்தினார். அறுபத்துமூவர் வரலாறான பெரிய புராணத்திலும் அடியார்களைச் சோதிக்கும் போது சிவபெருமான் மட்டுமே தனித்து வருவார். பின் சோதனையில் வென்றபின் தரிசனம் தரும்போது தான் பார்வதி உடனாய பரமேஸ்வரனாகக் காட்சி தருவார். அமிர்தவல்லியை விண்ணுலகத்திலும், சுந்தவல்லியை மண்ணுலகத்திலும் வாழுமாறு பணித்தார் முருகப்பெருமான். இருவரும் மீண்டும் குழந்தை வடிவம் பெற்றனர். அமிர்தவல்லி மேருமலையில் வாழ்ந்த இந்திரனின் அரவணைப்பிலும், அங்கிருந்த ஐராவதம் யானையின் கவனிப்பிலும் வளர்ந்தாள். தேவராஜனாகிய இந்திரனின் யானையிடம் வளர்ந்ததால் தெய்வயானை என்று பெயர் பெற்றாள் அமிர்தவல்லி. இளையவளாகிய சுந்தரவல்லி தொண்டை நன்னாட்டில் வேடுவர் குலத்தில் நம்பிராஜனின் வளர்ப்புப் பெண்ணாக வளர்ந்தாள். ‘வள்ளி’ என்னும் பெயர் பெற்றாள். வள்ளிநாயகியை இச்சாசக்தி என்றும் தெய்வயானையைக் கிரியாசக்தி என்றும் முருகப்பெருமான் ஞானசக்தி என்றும் புராணம் குறிப்பிடுகின்றது. அகில உலக உயிர்களும் நலம் பெற்று உய்வடைய வேண்டும் என்று விரும்புவது இச்சாசக்தி. நினைத்த மாத்திரத்தில் அதை செய்து முடிக்கும் ஆற்றலே கிரியாசக்தி. எவ்விதம், எவ்வாறு, என பூரணமாகப் புரிந்து கொள்வது ஞானாசக்தி. விண்ணுலகில், தேவேந்திரனின் மகளாக, கற்பகச் சோலைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்ந்தாள் அமிர்தவல்லி என்னும் தெய்வயானை. மண்ணுலகில், வேடுவர் மகளாக, தினைப்புனத்திற்கு காவற்காரியாக இருந்தாள் சுந்தரவல்லி என்றும் வள்ளி. குலம், செல்வம், குடிப்பெருமை என்று வேறுபாடு காணாமல் அன்பு ஒன்றையே அடிப்படையாக வைத்து இருவரையும் தேவியராக ஏற்றார் முருகப்பெருமான்! |
|
|
|