|
அறுவடைக்கு தயாராக இருந்த வயல் அது. அங்கு ஒரு குருவி கூடு கட்டி குஞ்சுகளோடு வசித்தது. நெல் முற்றியதால் கூடு கட்டி வேறிடம் தேடிச் செல்லலாம் என குஞ்சுகள் தெரிவித்தன. ஆனால் தாய் பயப்படாமல் இருக்கும்படி குஞ்சுகளுக்கு தைரியம் சொன்னது. காலையில் வயலுக்கு சொந்தக்காரரும், அவரது மகனும் அங்கு வந்தனர். ‘‘பக்கத்து ஊர்க்காரர் சிலர் அறுவடை செய்ய வருவதாகக் காலையில் கூறியும் வரவில்லையே!’’ என்று மகனிடம் சொல்லி வருந்தினார் தந்தை. வெளியில் சென்றிருந்த குருவி மாலையில் வந்ததும் விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டது. ‘‘என் செல்லங்களா... ஒன்றும் நடக்காது. பயப்படாதீர்கள்’’ என ஆறுதல் கூறியது. மறுநாள் காலையில் வயலுக்கு வந்த போது, ‘‘அப்பா...இன்று உள்ளூர்க்காரர்கள் வருவதாகக் சொன்னார்களே! அவர்களும் நம்மை ஏமாற்றி விட்டார்களே’’ என்றான் மகன். இதையும் குஞ்சுகள் தாயிடம் தெரிவித்தன. அப்போதும் தாய், ‘‘கண்ணுங்களா... கவலைப்படாதீர்கள். ஒன்றும் நடக்காது’’ என தைரியமூட்டியது. மூன்றாம் நாள் காலையில் தாய் வெளியே புறப்பட்டது. அதன்பின் தந்தையும், மகனும் பேசியபடி வயலுக்கு வந்தனர். ‘‘ இனி நாம் அடுத்தவரை நம்பி பயனில்லை. நாமே வயலில் இறங்கி அறுவடையை முடிக்க வேண்டியது தான்’’ என்றார் தந்தை. மகனும் சம்மதித்தான். விஷயத்தை குஞ்சுகள் தாயிடம் தெரிவித்தன. படபடப்புடன், ‘‘உடனடியாக நாளையே இடத்தை காலி செய்ய வேண்டியது தான்’’ என்றது தாய். ‘‘அம்மா...இப்போது மட்டும் ஏன் பயப்படுகிறாய்’’ என குஞ்சுகள் கேட்டன. ‘‘இத்தனை நாளும் மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இப்போது தாங்களே களத்தில் இறங்கப் போவதாக கூறியதால் அறுவடை நடந்து விடும்’’ என்றது. தன் கையே தனக்கு உதவி என செயலில் துணிச்சலுடன் இறங்கினால் ‘நாளை நமதே’ என வெற்றிக்கதவு திறக்கும்.
|
|
|
|